கிருஷ்ணன்.
ஸர்வ வ்யாபி அவன். அதாவது, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.
கிருஷ்ணர் என்ற பெயருக்கே வசீகரம் நிறைந்தவர் என்றுதான் பொருள். அதே சமயம் எல்லா வகைகளிலும் ஸர்வ வல்லமையும் உடையவர். வல்லமை இல்லாத வசீகரம்தான் ஏது? கிருஷ்ணரால் வசீகரிக்கப்படாதவர்கள் இவ்வுலகில் யாராவது இருக்கிறார்களா?

இத்தனைக்கும் அவனைப் போக்கிரி, நயவஞ்சகன், கள்ளங்கபடக்காரன் என்றெல்லாம் ஏசிக்கொண்டே அவன் லீலைகளைப் புகழ்கிறார்கள், லீலா விநோதங்களில் மயங்குகிறார்கள். அதேசமயம் நாம் மட்டும் போக்கிரித்தனம் செய்தால் ஏன் ஏசுகிறார்கள் என்ற கேள்வியும் எல்லோருள்ளும் இருக்கவே செய்கிறது. அவன் செய்யும் போக்கிரித்தனங்கள் நேர்த்தியானதாகவும் நன்மைக்காகவும் மட்டுமே இருக்கும். நாம் செய்யும் போக்கிரித்தனங்கள் நேர்த்தியானதல்ல. நன்மைக்காகவும் இருப்பதில்லை. ஏனெனில், அவன் பரிபூரணமானவன். நாமோ பூரணத்தை நோக்கிப் பயணிப்பவர்கள்.

அவதாரம் என்றாலே சட்டென்று நமக்குத் தோன்றுவது தசாவதாரம்தான். அந்த தசாவதாரத்திலும் நரஸிம்ம, ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களைச் சிறப்பாகச் சொல்வார்கள். சிறப்பாகச் சொல்லும் இந்த மூன்றிலும் அதிசிறப்பு வாய்ந்தது கிருஷ்ண அவதாரம். அதிலும் ‘கோவிந்தன்’ என்னும் திருநாமம்.

கிருஷ்ணர் இந்திரனின் கர்வத்தை அடக்கியதால், இந்திரன் கிருஷ்ணருக்குச் சூட்டிய திருநாமமே கோவிந்தன். துவாதச நாமாக்கள் எனப்படும் விஷ்ணுவின் 12 விசேஷ திருநாமங்களில் கோவிந்தன் என்கிற நாமமும் அடக்கம். சந்தியாவந்தனத்தில் வரும் ஆசமனத்திலும் கோவிந்தாய நம: என்ற நாமாவளி இடம் பெறுகிறது.

அது ஒருபுறம் இருக்கட்டும். கிருஷ்ண அவதாரத்தில் மட்டும் ‘கீதை’ என்கிற இவ்வளவு நீண்ட பிரசங்கம் ஏன்? மற்ற அவதாரங்களில் பகவான் இப்படி எதுவும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லையே! மற்ற அவதாரங்களில் பகவான் அதைச் செயல்களில் காட்டியதால் எல்லோரும் அதை பிரமிப்போடு மட்டுமே பார்த்தார்கள். இருப்பினும் அவர்கள் பகவான் ஏன் அப்படிச் செய்தார் என்று புரிந்துகொள்ளவில்லை. எனவே, பார்த்தார் பகவான். இன்னும் மக்களோடு அதிநெருக்கமாகக் கலந்து பழகி அவர்களை தன்வசம் ஈர்ப்போம் என எண்ணி கிருஷ்ணராக அவதாரம் பண்ணினார். ‘கிருஷ்’ என்ற பதத்துக்கே ஈர்ப்பது என்றுதான் பொருள்.

கண்ணனை, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்பார் மகாகவி பாரதியார். அதென்ன தீராத விளையாட்டுப் பிள்ளை? விளையாட்டு என்றாலே ஒரு கட்டத்தில் முடிந்துவிடக் கூடியதுதானே! அதுவும் பிள்ளைகளால் மட்டும் எவ்வளவு நேரத்துக்குத்தான் விளையாட முடியும் என்றெல்லாம் கேள்விகள் எழுகிறதல்லவா!

இந்தப் பிள்ளையோ அலகிலா விளையாட்டுடையவன். இவனுக்கு எல்லாமே விளையாட்டுதான். எவ்வித முகச்சுளிப்பும் இவனிடம் அறவே இல்லை. பிறக்கும்போதே விளையாட்டை ஆரம்பித்துவிட்டவன்! வசுதேவர்-தேவகிக்கு மட்டும் தன் அவதாரக் காட்சியை பிறக்கையிலே தந்து பின் அவர்களையும் மாயையில் ஆழ்த்தியவன்.

பிறப்பிலேயே ஆரம்பித்துவிட்டது அவனின் மாயா-விநோத லீலைகள். அவன் அரக்கர்களை வதம் செய்த விதம்தான் என்ன! கோபியரோடு செய்த ராசலீலைகள்தான் என்னே! எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். அந்த வெண்ணெய் திருடும் செயல்தான் எத்தனை உள்ளங்களைத் திருடிவிட்டது, இன்னமும் திருடிக்கொண்டிருக்கிறது! அதன் வெளிப்பாடாகத்தானே, அவனுக்கு அவன் பிறந்த நாளன்று, அவனின் வாயில் வெண்ணெயை ஈசுகிறோம் நம் அன்பின் வெளிப்பாடாக! எல்லாவற்றுக்கும் மேலாக அவன் குழந்தையாகத் தவழ்ந்து வருகிற அம்சம் எத்தனை பேரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறது! கிருஷ்ணனே எங்கள் வீட்டுக்குத் தவழ்ந்து வந்துவிட்டான் என்பதை வெளிப்படுத்தும் வெளிப்பாடுதானே கையால் கால் போடும் களிக்கோலம்! அது ஒரு கவிக்கோலம்!

கோபியருக்கும் சரி, கோவர்த்தனகிரி மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனுக்குப் பாடம் புகட்டியபோதும் சரி, ‘நான்‘ என்கிற அகந்தையைவிட்டு என்னைச் சரணடைந்தால், ‘க்ருஷ்ணார்ப்பணம்’ என்று சகல விஷயங்களையும் எனக்கு அர்ப்பணம் செய்தால் போதும், நான் காப்பேன் என்பதுதானே அவனது சித்தாந்தம். மேலும் அவன் கையில் வைத்திருப்பதோ தம்மாத்துண்டு புல்லாங்குழல்! அதில் அவன் செய்யும் ராக விநோதங்கள்தான் எத்தனை உயிர்களைக் கிறங்கடிக்கிறது! இதில் அவன் சொல்லவரும் விஷயம்தான் என்ன? துன்பம் நேர்கையில் துவண்டுவிடாமல் இசையோடு ஒன்றிவிடுங்கள் என்பதுதானே!
‘கிருஷ்ணரின் பரிமாணங்களுள் நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த பரிமாணம் கோபீஜன வல்லபர் - பிருந்தாவன கோபியரின் காதலன்தான். அந்த அன்புப்பித்து உங்கள் மூளையில் புகுமானால், ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் கோபியரை நீங்கள் புரிந்துகொள்ள முடியுமானால், அப்போதுதான் அன்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உலகமே மறந்துபோய், மற்ற எல்லா எதிர்பார்ப்புகளும் ஒழிந்துபோய், வேறெந்த நோக்கமும், உண்மையைத் தேடும் ஆசைகூட இல்லாமல் உங்கள் இதயம் தூய்மை அடைய வேண்டும். அப்போது, அப்போது மட்டுமே அந்தப் பிரேமை வெறி உங்களுக்கு வரும்; கோபியர் கொண்டிருந்த எல்லையற்ற அந்த அன்பின் சக்தியும் பலமும் உங்களுக்கு வரும்; அன்பிற்காகவே அன்பு செய்ய உங்களால் முடியும். அதுதான் லட்சியம். அதைப் பெற்றால் நீங்கள் எல்லாவற்றையும் பெற்றுவிட்டீர்கள்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். முக்கியமாகச் சொல்லவேண்டியது ஒன்றுண்டு. அது கிருஷ்ண ப்ரேமை. அன்பு மட்டும் இல்லாமல் இருக்காதீர்கள் என்பதுதான் அது! என்னைக் கொண்டாட எந்தவிதமான ஆடம்பரமும் தேவையில்லை. அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஒரு இலையோ பூவோ, பழமோ நீரோ அளித்தால்கூட போதும். அதை நான் ஏற்பேன் என்கிறான் அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை. எனவே, கிருஷ்ணருக்குப் பிடித்தமானதை அளிக்க முயற்சி செய்வோம். அதேசமயம், அது கிடைக்காத பட்சத்தில் - பூவோ இலையோ பழமோ நீரோ - கிடைப்பதை அவருக்களித்து அந்தப் பிரசாதத்தைப் புசிப்போம். அவனைப் போன்றே எப்போதும் சந்தோஷமாக இருக்கும் கலையை அவன் நமக்கு அருள்வான்.

அண்மையில, ‘மனத்தில் எப்போதும் சந்தோஷத்தோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?’ எனறு ஒரு வாசகர் மாதப் பத்திரிகையொன்றில் கேள்வி கேட்டிருந்தார். ‘நேர்மறைச் சிந்தனைகளையே எண்ணுவது, நம் பாக்கியங்களை நினைத்து மகிழ்வது, கிட்டாதவற்றுக்கு ஏங்காதிருப்பது, அடுத்தவர்க்கு உதவுவது - இவற்றை விடாது பழகினால் மனம் எப்போதும் சந்தோஷம் கொள்ளும்’ என்றிருந்தது பதில்.

இவையும் கிருஷ்ண நிலையை அடைய நமக்கு உதவக்கூடியவைதான்.
கிருஷ்ணார்ப்பணம்.
- சைதை முரளி.