Monday, September 26, 2011

இலக்கியச் சிந்தனையின் 500-வது மாதக்கூட்டம்!

தீபம் ஆசிரியர் நா.பார்த்தசாரதியுடனான
அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனின்
சுகமான நினைவுகள்...
- சைதை முரளி.

எழுதுவதற்கு விஷயங்கள் இல்லை; எனவே, படிப்பதற்கு வாசகர்கள் இல்லை என்று சொன்னால் இதை நீங்கள் ஏற்பீர்களா? நீங்கள் ஏற்க மறுத்தாலும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை என்பதாக, கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் இலக்கியச் சிந்தனையின் கூட்டங்கள் மூலமாக அறிகிறேன்.

வார, மாத இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளைப் படித்து அதிலிருந்து சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த மாதத்தின் சிறந்த சிறுகதை என்று சொல்லி ஊக்கப்படுத்தி வந்த இலக்கியச் சிந்தனை அமைப்பு, இனி அந்த வருடத்தில் வந்த எல்லா சிறுகதைகளில் இருந்தும் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுப்பது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



சிறுகதைகள் எழுதும் கதாசிரியர்கள் குறைந்துவிட்டீர்களா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்ற பதிலை உறுதியாகக் கூறலாம். ஒரு பக்கக் கதைகள், அரை பக்கக் கதைகள், போஸ்ட் கார்டு கதைகள், ஸ்டாம்ப் சைஸ் கதைகள் என கதைகளை வெளியிட்டு வந்த சில பத்திரிகைகள் நாளடைவில் கதைகளை வெளியிடுவதையே நிறுத்திக்கொண்டுவிட்டன. காரணம் கேட்டால், முன்பு போல் அவ்வளவாக சிறுகதைகள் வருவதில்லை; படிப்பவர்களும் குறைந்துவிட்டார்கள் என்ற பதிலைத் தருகிறார்கள்.



என்ன காரணங்கள் கூறினாலும், கதைகளை வெளியிட்டால்தானே கதைகளை எழுதுபவர்களுக்கும் உற்சாகம் ஏற்பட்டு தொடர்ந்து நிறைய எழுதுவார்கள். நாவல்களின் போக்கும் கிட்டத்தட்ட இதேபோன்று ஆகிவிட்டது. சிறுகதை ஆசிரியர்கள் நாவல் ஆசிரியர் நிலைக்குச் செல்ல, நிறைய சிறுகதைகள் எழுதும் போக்கும் அதை வெளியிடுதலும் தொடர்ந்தால்தானே அந்த நிலைக்கு உயர இயலும். ஏனோ ஒருசில பத்திரிகைகள் சிறுகதைகள் வெளியிடும் போக்கையே ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட்டனவோ என்று தோன்றும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது நிலைமை. இந்நிலவரத்தைப் பார்க்கையில் கலவரமாகத்தான் இருக்கிறது. கதைகள் வருவது குறைந்துவிட்டது என்று பத்திரிகையில் இருப்பவர்கள் கூறாமல், அவர்களே கதை எழுதி வெளியிட்டால், வெளியிலிருந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை தன்னால் கூடும். புதிய எழுத்தாளர்கள் பலரும் தோன்றுவார்கள் அல்லவா!



தீபாவளி மலரில்தான் சிறுகதைகளைப் பார்க்க இயலுமோ என்ற நிலை வந்துள்ளது. இந்நிலைகள் மாற, உரியவர்கள் சிறப்பு கவனம் செலுத்தினாலே போதும்! நம் கலைகள் அழிவுற, நாமே காரணகர்த்தா ஆகிவிடக் கூடாது.

கடந்த செப்.24 கடைசி சனிக்கிழமையன்று மாலை இலக்கியச் சிந்தனையின் 500-வது மாதாந்தரக் கூட்டம், எப்போதும்போல் ஆழ்வார்பேட்டை அஞ்சலகம் அருகிலுள்ள ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் (செட்டியார் ஹால் எதிரில்) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், தீபம் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். நினைவுகள் என்றும் சுகமானவைதாமே!



நா.பா.வுடனான திருப்பூர் கிருஷ்ணனின் அந்த சுகமான நினைவுகளில் ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம். தினமணியில் மார்ச் மாதத்தில் அவர் தீபம் நா.பா. குறித்து எழுதியவற்றை இங்கே காணலாம். இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் அவர் பேசியதன் ஒரு பகுதியை முகநூல் இணைப்பில் கண்டு மகிழலாம்.

‘நா.பா. என்னை ஒரு தம்பியாகவே கருதினார். அவர் வீட்டிலிருக்கும்போது வரும் போன் கால்களை நான்தான் எடுத்துப் பேசுவேன். ஒருமுறை நா.பா. அவர்கள் குளித்துக்கொண்டிருந்தபோது அப்போது முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இதை அறிந்ததும் குளித்துக்கொண்டிருந்தவரிடம் என்ன சொல்ல என்று கேட்டேன். ‘ஒரு பத்து நிமிடம் கழித்து பேசச் சொல்’ என்றார் என்னிடம். நானும் மறுமுனையில் இருந்தவரிடம் இதைச் சொன்னேன்.



குளித்துவிட்டு வந்தவர் என்னிடம், ‘கூட்டங்களில் அவரை நான் தாக்கித்தானே பேசுகிறேன். எதற்காக என்னைத் தொடர்புகொள்கிறார் தெரியவில்லையே’ என்று கூறிவிட்டு என் கருத்தையும் அறியும் விதமாக ‘நீங்கள் அவரைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார். நான் அவரிடம் மக்கள் சமுதாயத்தால் நன்றாக மதிக்கப்படும் ஒரு நபர், வெற்றிபெற்ற மனிதராகத்தானே இருக்கமுடியும்’ என்ற என் கருத்தை வைத்தேன்.



‘நீங்கள் கூறுவது சரியென்றால், பத்து நிமிடத்தில் தொடர்புகொள்ளச் சொன்ன நேரத்துக்கு சரியாக அவர் தொடர்பு கொள்வார், பாருங்கள்’ என்றார். அவர் கூறியபடியே சரியாக பத்து நிமிடம் கழித்து அழைப்பு வந்தது. ‘எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் போன், எடுத்துப் பேசுங்கள்’ என்றார். எடுத்துப் பேசினேன். மக்கள் திலகம்தான் பேசினார். இந்த நிகழ்விலிருந்து வெற்றிபெ(ற்ற)றும் மனிதர்கள் நேரத்தைத் தவறாமல் மதிப்பார்கள் என்ற படிப்பினையைப் பெற்றேன்.

சாகித்ய அகாதெமி பரிசு, தமிழ்நாடு அரசு பரிசு, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு உள்படப் பல பரிசுகள் பெற்ற நா.பா., சிறந்த பேச்சாளரும் கூட. தற்கால இலக்கியம், அரசியல் ஆகிய இரு துறைகளிலும் தம் பேச்சாற்றலால் முத்திரை பதித்தவர்.



ஒருசமயம் சென்னை வானொலியில் குற்றாலக் குறவஞ்சி குறித்து பேசச் சென்றார். அப்போது வானொலிப் பதிவைப் புதிதாக இருந்த ஒருவரிடம் பதியும்படி சொல்லிவிட்டு நிகழ்ச்சி மேற்பார்வையாளர் வேறு ஒரு வேலைநிமித்தமாக சென்றுவிட்டார். ஒரு மணி நேர ஒலிப்பதிவு நிகழ்ச்சி. ஒலிப்பதிவைச் செய்தவரும் நானும் பேச்சில் மெய்மறந்து போயிருந்தோம். ஒரு மணி நேரம் முடிவடையப் போகிறது என்பதை குறிப்பால் சொல்லி பேச்சை முடித்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும் நா.பா.வை வழியனுப்புவதற்காக நிகழ்ச்சி மேற்பார்வையாளர் வெளியே அவருடன் வந்தார். நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த அந்த புதிய நபரோ நா.பா.விடம் பேசவேண்டும் என்று துடித்தார். இதைப் புரிந்துகொண்ட நா.பா. அவரை வரவழைத்து என்ன விஷயம் என்று கேட்டார். பதிவு செய்த ஒரு மணி நேர ஒலிப்பதிவு பதிவாகவில்லை என்றார். உடன் நா.பா. நான் செல்லவிருக்கும் பயணம் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான். இப்போதே மீண்டும் அந்த ஒலிப்பதிவைத் தொடங்குவோம் வாருங்கள் என்று அந்த இளைஞரை உடன் அழைத்துச் சென்றார். நிகழ்ச்சி மேற்பார்வையாளரிடம் இந்த இளைஞர் இனி தவறு செய்ய மாட்டார். நீங்கள் பயப்படாமல் செலலுங்கள் என்று இளைஞரின் பயத்தையும் போக்கி அரவணைத்துக்கொண்டார்.



நா.பா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இறுதிவரை நடுத்தரக் குடும்ப மனிதராகவே வாழ்ந்து மறைந்தார். பொருளாதார இடர்ப்பாடுகள் வரத்தான் செய்தன. ஆனால், எழுத்தைப் பொறுத்தவரை சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த பெருந்தகை அவர். அக்காலகட்டத்தில் சோ, ஜெயகாந்தன் ஆகியோரோடு நா.பா.வும் ஸ்தாபன காங்கிரஸ் மேடைகளில் பேசினார். பேச்சுக்கு ரூ.500 தருவார்கள். ஒரு கட்டத்தில் குடும்பச் சூழ்நிலையினால் இதுவும் பற்றவில்லை. ‘கொஞ்சம் கூடுதலாகத் தந்தால் நன்றாக இருக்கும். என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?’ என என்னிடம் ஆலோசித்தார். நான் அவரிடம், ‘காமராஜருக்கு நெருக்கமாக இருந்த ஒரு எழுத்தாள நண்பரிடம் பேச்சோடு பேச்சாக பேசச் சொல்லுங்களேன்’ என்ற ஆலோசனையை முன்வைத்தேன். இதுவும் நல்ல யோசனைதான் என்றவர், அவ்விதமே பேசவும் செய்தார். பேச்சின் பலனாக பேச்சுக்கு இரட்டிப்பாகப் பணம் தரும்படி காமராஜர் உத்தரவிட்டார்.



தமது ‘சத்தியவெள்ளம்’ என்ற நாவலில் காமராஜரை ராமராஜ் என்ற பெயரில் பாத்திரமாக ஆக்கும் அளவுக்கு நா.பா.வைக் கவர்ந்திருந்தார் காமராஜர். காமராஜர் காலமானதும் அவரின் அட்டைப்படம் தீபத்தை அலங்கரித்தது. ‘இலக்கியப் பத்திரிகை அட்டையில் அரசியல் தலைவரின் படமா?’ என்று சிலர் கேள்வி கேட்டார்கள். ‘பெருந்தலைவரே ஓர் இலக்கியம்தான்’ என்று நா.பா. பதில் சொன்னார்.



ஒரு கட்டத்தில் பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக தாம் நடத்திவந்த தீபத்தை நிறுத்திவிடப் போவதாக நா.பா. அறிவிப்பு செய்திருந்தார். இதைப் பார்த்த ஒரு சகோதரி தம் தங்க வளையல்களை பார்சலில் அனுப்பிவைத்து இதழைத் தொடர்ந்து கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதில் மிகவும் நெகிழ்ந்துபோன நா.பா. தம் காலம் வரையில் தீபத்தைத் தொடர்ந்து நடத்திவந்தார்.




இதுபோன்ற எவ்வளவோ நெகிழ்வான நினைவுகளை திருப்பூர் கிருஷ்ணன் அன்றைய கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒருசிலவற்றைத்தான், அவற்றையும் சுருக்கி இங்கே உங்களிடம் பதிவு செய்துள்ளேன். அன்றைய கூட்டத்தில் எழுத்தாளர் இந்துமதி, கவிஞர் ஜெயபாஸ்கரன் போன்ற பல்வேறு எழுத்துலகப் பிரமுகர்களும் பங்கேற்றனர். விழாவில் இலக்கியச் சிந்தனை பாரதி அவர்களுக்கு, இந்துமதி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.





பேச்சின் இடையில் இந்த ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தின் வெளியில் இருக்கும் துளசிச் செடியில் மகாத்மா காந்தியின் அஸ்தியும் கலந்துள்ளது என்ற தகவலை திருப்பூர் கிருஷ்ணன் சொல்ல, அந்த துளசி மாடத்தை உங்கள் பார்வைக்குப் பதிவாக்கியுள்ளேன்.

Friday, June 10, 2011

அஞ்சலி - கணையாழி கஸ்தூரிரங்கன்



ஆதிமுதல் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, சிறந்த பத்திரிகையாளராக விளங்கிய சுவாசித் கஸ்தூரி ரங்கன் அவர்கள் கணையாழியின் புரவலராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். 1961 முதல் 1981 வரை டில்லியில் ‘நியூயார்க் டைம்ஸ்’ நிருபராகவும், 1981 முதல் பத்தாண்டுகளுக்கு ‘தினமணி’ பத்திரிகையின் இணையாசிரியராகவும், இதன்பின்னர் இரண்டாண்டுகளுக்கு ‘தினமணி’ ஆசிரியராகவும் பணியாற்றியவர். சமீபத்தில் அமரரான கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீநிவாச காந்தி நிலையத்தில் ஜுன் 5-ஆம் தேதி மாலை 5 முதல் 6 மணி வரை, நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலில் பஜனை நடைபெற்றது. பின்னர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கணையாழி ஆசிரியர் குறித்துப் பேசினார்:



‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்’ என்ற பாடல், கஸ்தூரிரங்கன் அவர்களின் மனப்போக்குக்கு, லட்சியத்துக்கு, ஆன்மாவுக்கு நிறைவைத் தரக்கூடியதாக அமைந்திருந்தது. பாடலை ஆத்மார்த்தமாகப் பாடிய குழுவினருக்கு நன்றி’ எனக் கூறி, மேலும் தன் உரையைத் தொடர்ந்தார்.



‘‘ஓவியர்கள், ஓவியத்தின் கீழே தங்கள் பெயரைப் போட்டுக்கொள்கிறார்கள். சிற்பிகள் சிற்பத்தில் தங்கள் பெயரைப் பொறிப்பதில்லை. கஸ்தூரிரங்கன் ஒரு ஓவியரல்ல; அவர் ஒரு சிற்பி. தன்னுடைய புகைப்படம்கூட பத்திரிகையில் வருவதை அவர் விரும்பியதில்லை. கணையாழி பத்திரிகை மூலமாக எண்ணற்ற எழுத்தாளர்களை அவர் உருவாக்கினார். இந்த எழுத்தாளர்களின் தொடக்ககால எழுத்துகளை இனங்கண்டு கணையாழியில் வெளியிட்டு அந்த எழுத்தாளர்களை வளர்த்தார்.

“இந்த அஞ்சலி கூட்டத்தில் கஸ்தூரிரங்கன் அவர்களின் எந்த எழுத்துகளை வாசிப்பது என கஸ்தூரிரங்கனின் புதல்வி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி போன்றோரிடம் கலந்தாலோசித்ததில், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள், கணையாழி களஞ்சியத்தில் வெளிவந்த அவரின் முன்னுரையை வாசிக்கலாமே எனக் கூறியது பொருத்தமாகப்பட்டதால் அதை இங்கே வாசிக்கிறேன்’’ எனக் கூறி அந்த முன்னுரையை வாசித்தார்.

அந்த முன்னுரையிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.

‘புது டில்லி. பொழுதுபோகாத ஒரு மாலை வேளை. நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது. அன்றைய விலைவாசியில் 5 ரூபாய் இருந்தால், 32 பக்கங்களில் 1000 பிரதிகளை அச்சடித்து விடலாம். ஆண்டுச்சந்தா ரூ.5/- என்று ஒரு ஆயிரம் பேரைப் பிடித்துவிடலாம். மேலும் 500 முதல் 5000 பிரதிகள் வரை ஏஜென்ட்டுகள் மூலம் விற்றுவிட, 10,000, 50,000 என்று சென்று 5 லட்சம் வரைகூட எட்டிவிடலாம் என்று திட்டமிட்டோம். பேஷாகச் செய்துவிடலாம் என்றார் ரங்கராஜன்.’



இவ்விதமாகத்தான் கணையாழி என்கிற அந்த இலக்கியத்தரம் வாய்ந்த பத்திரிகை தொடங்கப்பட்டது. கணையாழி களஞ்சியம் தயாரித்தபோது தொடக்க காலம் முதலே வெளிவந்த இதழ்களை வைத்திருந்து பெரிதும் களஞ்சியமாக வெளிவர எழுத்தாளர் வே.சபாநாயகம் உதவினார் என்று கஸ்தூரிரங்கன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை திருப்பூர் கிருஷ்ணன் வாசித்தார்.

ஒருமுறை கணையாழி நிர்வாக ஆசிரியரான கஸ்தூரிரங்கனிடம், கணையாழியின் பொறுப்பாசிரியராக இருந்த லா.சு. ரங்கராஜன் அவர்கள், ‘தினமணி’ ஆசிரியர் பதவியில் தொடர்ந்து நீடிப்பீர்களா என அவரிடம் கேட்க, அதற்கு அவர்,



‘‘கணையாழியின் நெடுநாள் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். கணையாழி விற்பனையை கல்கி நிறுவனத்தினர் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டிருப்பது பெரிய அதிர்ஷ்டமே. தினமணி ஆசிரியராக மீண்டும் பொறுப்பேற்க நேர்ந்தாலும் அதில் அதிகநாள் நீடிக்க விரும்பவில்லை. எப்போதும்போல் பின்னணியிலிருந்து கொண்டே கணையாழியை வளர்ப்பதில் கருத்தாய் இருப்பேன்.



‘‘மேலும், தினமணியில் மக்கள் நல்லாட்சி மன்றங்கள் அமைப்பதற்காக வாசகர்களின் ஆலோசனை கேட்டு அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதற்கு பதிலளித்து சுமார் இரண்டாயிரம் வாசகர்கள் இயக்கத்தில் சேர முன்வந்துள்ளார்கள். இவர்களைக் கொண்டு கிராமம்தோறும் நல்லாட்சி மன்றங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார்.



அக்கூட்டத்தின் ஒருசில வீடியோ லிங்குகளை பேஸ்புக்கில் தந்துள்ளேன்.

http://www.facebook.com/video/video.php?v=10150203045866092

http://www.facebook.com/video/video.php?v=10150203040141092

http://www.facebook.com/video/video.php?v=10150203031316092

கணையாழிக்காகவே வாழ்ந்தவருக்கு நாமும் அஞ்சலி செலுத்துவோம்.

Thursday, May 5, 2011

இந்தியத் திரைப்படத்தின் தந்தை - தாதா சாகிப் பால்கே



தாதா சாகிப் பால்கே

சமீபத்தில் தமிழ்த் திரையுலகப் பிதாமகனான இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அவருக்கு இந்த விருது வழங்கியது சரிதானா, சரியில்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அவற்றையெல்லாம் விடுங்கள். இந்த விருதுக்கு மூலகாரணமாக விளங்கும் தாதா சாகிப் பால்கே என்பவர் யார்? ஏன் அவர் பெயரால் இந்த விருதை வழங்குகிறார்கள் என்பதைப் பற்றி சற்றே தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

பம்பாய்க்கு அருகிலுள்ள நாசிக் எனுமிடத்தில் 1870&ல் பிறந்தார் தாதா சாகிப். சித்திரம் தீட்டுதல், நடிப்பு, பாடுதல், மாய வித்தைகள் செய்தல் போன்றவற்றில் சிறுவயது முதலே அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் இந்த அளவற்ற ஆர்வமே இவரை இந்தியத் திரையுலகின் முன்னோடியாக விளங்க வைத்ததுடன், முதல் இந்தியத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடவைத்து, இந்தியத் திரையுலகின் தந்தை எனப் போற்றிக்கொண்டாடும் அளவுக்கு இவரை உயர்த்தியது எனலாம்.

பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார். 1910&ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, இயேசு கிறிஸ்துவின் வாழ்வியலைச் சித்திரிக்கும் திரைப்படமொன்றை வெளியிட்டுக் காட்டினார்கள். அப்படத்துக்கு மக்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பும் வரவேற்பும், ஏன் தாமும் கிருஷ்ண பரமாத்மாவின் கதையைத் திரைப்பட வடிவில் காட்டக் கூடாது என்ற எண்ணத்தை பால்கேவின் மனதுள் விதைத்தது.

இதன்பின்னர் தமது நண்பர்களிடம் பணத்தைக் கடனாகப் பெற்று இங்கிலாந்து சென்று திரைப்படம் தயாரிப்பதற்குத் தேவையான கருவிகளை வாங்கினார். மேலும், அக்கருவிகளைக் கையாளும் முறையையும் கற்றுக்கொண்டு தாயகத்துக்குத் திரும்பினார்.

கிருஷ்ண பரமாத்மாவின் கதையைப் படமாக்க எண்ணிய அவரின் முதல் நோக்கம், பின்னர் அப்படம் தயாரிப்பதற்கு உண்டாகும் நாட்செலவு மற்றும் பொருட்செலவையும் கருத்தில் கொண்டதால், இந்திய மக்களை எளிதில் கவரக்கூடிய அரிச்சந்திர அரசனின் கதையைப் படமாக்குவதென்ற முடிவுக்கு அவரை உந்தித் தள்ளியது. எனவே, அரிச்சந்திர அரசனின் கதையைப் படமாக்க முடிவெடுத்தார்.

பால்கே திரைப்படம் தயாரிக்க விழைந்த அன்றைய இந்தியாவில், பெண்கள் மேடையேறி நடிப்பதென்பது சமூகக் கோட்பாடுகளுக்கு ஒவ்வாத செயலாக இருந்த காலம். அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி பாத்திரத்தில் நற்குலப் பெண்கள்கூட நடிக்க இசைய மாட்டார்கள் என்பதை பால்கே நன்கு உணர்ந்திருந்தார். ஏனெனில், பெண்கள் திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் மானத்துக்குப் பங்கம் ஏற்படும் என்று கருதிய காலகட்டம் அது. எனவே, அந்தப் பாத்திரத்தில் விலைமாதரையாவது நடிக்க வைக்கலாம் என்று கருதி பால்கே அவர்களை அணுகினார். அவர்களும் மறுக்கவே, முடிவாகத் தமது படத்தில் சலுங்கே எனும் இளைஞனை அந்தப் பெண் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்.

‘ராஜா ஹரிச்சந்திரா’ எனும் இந்த மௌனப்படமே, இந்திய மண்ணில் முதன்முதலில் தோன்றிய படமாகும். இப்படத்தின் நீளம் 3,700 அடி. 1912&ஆம் ஆண்டில், தாதா சாகிப் பால்கே இப்படத்தைத் தயாரித்து முடித்தார். 1913&ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் இப்படம் திரையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்குள் நூற்றுக்கும் அதிகமான படங்களைத் தயாரித்து வெளியிட்ட செயல், பால்கேவின் அயராத உழைப்பினைப் பறைசாற்றும் ஒன்றாகும். இந்திய மக்களின் பெரும் சொத்துக்களாகக் கருதப்படும் ராமாயண, மகாபாரதக் கதைகளைத் தழுவியே அவர் தன் அத்தனைப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார். தன்னைத் திரையுலகுக்குள் செலுத்த மூலகாரணமாயிருந்த கிருஷ்ண பரமாத்மாவின் கதையையும் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டார் பால்கே.

1917&ல் நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து, ‘ஹிந்துஸ்தான் திரைப்படக் கம்பனி’யை பால்கே ஆரம்பித்தார். பின் அவர்களிடையே நிலவிய கொள்கை வேறுபாட்டால், ஓராண்டுக்குப் பின் அவர்களைவிட்டுப் பிரிந்தார். 1921&ஆம் ஆண்டில் மீண்டும் அவர்களுடன் ஒன்று சேர்ந்தார். 1927&ஆம் ஆண்டில் பால்கே ஹிந்துஸ்தான் திரைப்படக் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றார். இதன்பின் 1931&ஆம் ஆண்டில் ‘சேத்து பந்தன்‘, ‘கங்காவதாரென்’ என்ற இரு படங்களைத் தயாரித்தார். இந்தக் காலகட்டத்தில் மக்களின் கலாரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் பெரிதும் மாறுபட்டிருந்ததால், இவ்விரு படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றமடைந்தார் பால்கே.

தம் வாழ்வு முழுவதையுமே திரைப்படத்துறைக்காக அர்ப்பணித்த அந்த மாமேதை, தம் இறுதி நாட்களில் எல்லோராலும் கைவிடப்பட்டவராக, ஏழையாக 1944&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16&ஆம் நாளில் தம் இன்னுயிரை நீத்தார்.

இப்படிப்பட்ட அந்த மாமேதையின் பெயராலேயே ‘தாதா சாகிப் பால்கே’ விருது என்ற இந்த விருது வழங்கப்படுகிறது.

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.