பட்டொளி வீசி
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் – திருப்பூர் கிருஷ்ணன்
சாகுந்தலம் கதையை முன்பே அறிந்திருப்பவர்கள், சகுந்தலையை வஞ்சிக்கப்பட்ட ஓர் அபலையாகத்தான் உணர்வார்கள் அவளின் நிலையை வைத்து. ஆனால், தங்களின் சகுந்தலையோ தன்னைத் தேடி வரும் துஷ்யந்தனின் கண்களைக் குறித்த வெளிப்பாடாக, ‘கண்களா இல்லை கட்டு விரியன்களா?’ என சகுந்தலையைச் சித்தரிப்பதோடு அல்லாமல், ‘‘துர்வாச மகரிஷியின் சாபத்தை நீ அறிய மாட்டாயா?’’ என்ற துஷ்யந்தனின் கேள்விக்கு, ‘முற்றும் துறந்த முனிவன் கோபத்தையும் சேர்த்துத் துறக்காததேன்? தூய நெறிப்பட்ட பத்தினிப் பெண்களின் காதல் வலிமையையும் தகர்த்துவிடுகிற வல்லமை துர்வாசரின் தவத்திற்கு என்றைக்கு வந்தது?” எனப் பதிலாகத் தரும் கட்டம், முனிவரின்மேல் உள்ள கோபத்தைவிட துஷ்யந்தனின் மேலேயே அதிகம் உள்ளது என்பதை அடுத்துவரும் கட்டங்களிலும் தெள்ளத் தெளிவாக விளக்குவதோடு, “நான் ஜாதியே இல்லாதவள் என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமை கொள்கிறேன்” எனக் கூறும் சகுந்தலையை அவளது அகக் கண், வரும் வருங்கால சந்ததியினர் எல்லாம் ‘கலியுகே பிரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே’ என சங்கல்பம் செய்யப்போவதை நினைக்கும் கட்டத்தில்தான் தங்களின் புதிய சாகுந்தல சகுந்தலையே நிற்கிறாள்.
இந்தியத் தத்துவ இயல் துறையின் பேராசிரியராக அமெரிக்கா சென்ற சசிசேகரன் – அமெரிக்காவில் அவனிடம் மாணவியாக, அதுவும் சொத்துள்ள மாணவியாகப் பயிலும் மேரி – ‘பணம் உள்ளவர்களுக்குத்தான் பணம் ஒரு பொருட்டில்லை என்பதில்லை; பணம் இல்லாதவர்களுக்கும்கூட பணம் ஒரு பொருட்டில்லாமல் இருக்கக்கூடும்’ எனக் கூறி மேரியின் சிந்தனையைத் தூண்டிவிடும் அதே சமயத்தில் கதையின் திருப்பத்திற்கும் காரணமாக விளங்கும் முனுசாமி இவர்களைப் பின்னிப் பிணைத்து புனையப்பட்டிருக்கும் ‘ஆகாச புஷ்பங்களில்’, சசிசேகரனுக்கும் மேரிக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களைப் படிக்கையில் அகிலனின் ‘எரிமலை’ சிறுகதையில் ‘பஞ்சு’ கேரக்டரை பஞ்சு பஞ்சாக்கும் அந்தப் புரட்சிப் பெண்ணை நினைவூட்டி விடுகிறாள் தங்களின் மேரி கேரக்டர். “உண்மையை மறைப்பவன்தான் ஆன்மீகவாதியா? மேரி என்ற என் பெயரை அவர் மீராவாக மாற்றிவிட்டாலும், நான் தேடுவது ராமனைத்தான்” என சசிசேகரனிடம் மேரி கூறும் கட்டமே கதையின் தலைப்பை கனகச்சிதமாகத் தூக்கிப் பிடிக்கிறது. மேலும், ரிக்ஷாவில் அவளை அழைத்துவந்த முனுசாமிதான் மேரி மணந்துகொள்ள இருந்த அந்த உயர்ந்த மனிதர் என்பதைக் காண்பிக்கும் கட்டம் புருவங்களையும் சற்றே உயர வைக்கிறது.
இங்கும் ஒரு கங்கை – இரவில் மலரும் தாமரைகள் – புதிய வெளிச்சம் எனும் மூன்று கதைகளும் ஒரே தோட்டத்தில் பூத்த விதவிதமான பூக்கள்.
இங்கும் ஒரு கங்கையில் தன் கணவன் செய்த பாவத்திற்காகவும், தான் எண்ணிய நினைப்புக்குமாக அம்புலு தன் மகன் சந்துருவை அவன் இன்வஸ்டிகேட் செய்யச் சென்ற விபசார விடுதியிலிருந்து கூட்டிவரும் பெயர் தெரியாத பெண்ணுக்கு ‘காயத்ரி’ என்ற பெயரை வைத்து அவளையே திருமணம் செய்துகொள்ளச் சொல்வது உணர்வுகளின் அடிப்படையில் சிறப்பாகக் காட்டப்பட்டாலும், யதார்த்தத்தை மீறிய கதையாகவே படுகிறது.
இரவில் மலரும் தாமரைகளிலோ, யதார்த்த நிலை அப்படியே அற்புதமாகச் சித்தரிக்கப்படுகிறது. பெயருக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதை லல்லிக்கு அம்புஜம் மூலம் தெரிவிக்கும் கட்டத்தோடு தோற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைப் பெரியவரின் மகன் மூலமாக சித்தரிக்கும் காட்சியின் கதையமைப்பும் அற்புதம்.
புதிய வெளிச்சத்திலோ சாவித் துவாரத்தின் மூலமாக தந்தை தனது பூட்ஸுக்கு பாலீஷ் போட நேர்வதை கதையின் துவக்கமாக அமைத்து கதையின் கருவை நோக்கி கதையை நகர்த்தியிருக்கும் விதமும், மேலும் வாசகர்களுக்குள்ளே எழும் சந்தேக மற்றும் தர்க்க விவாதங்களை மகனது பாத்திரம் மூலமாக வலியுறுத்தி, தந்தையின் ஸ்தானத்தில் அதை தாங்கள் தீர்த்துவைக்கும் விதம் பாராட்டும்படியாக இருந்தாலும், இக்கதையைப் படித்துவிட்டு நண்பர் ஒருவரிடம் பேசும்பொழுது, ‘சொப்பன சுந்தரிகள்’, ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதைகளை யதார்த்தமாக முடித்தவர், ‘புதிய வெளிச்சத்தில்’ கதையின் முடிவில் மனைவிக்கு காபி போட்டுக்கொண்டு வந்து கொடுப்பது போல முடித்திருப்பது யதார்த்தத்தைச் சற்று மீறியிருப்பது போலப் படுகிறது என விமர்சித்துவிட்டு, மீண்டும் இக்கதையை விமர்சிப்பதற்காக முடிவைப் படித்தபோது, பிளாஸ்கிலிருந்துதான் காபியைக் கொண்டுவந்து கொடுப்பதாகவே கதையை நீங்கள் முடித்திருக்கிறீர்கள். என்றாலும், நண்பரிடம் ‘புதிய வெளிச்சம்’ கதையை அவ்விதம் விமர்சிக்க வைத்தது எது என்று யோசிக்கையில், அக்கதையின் முடிவை ஜீரணிக்க முடியாத என் மனத்தின் தன்மையையா அல்லது கதையின் முடிவை அவ்விதம் முடித்ததாலா என்பதை இன்னமும் என்னால் அனுமானிக்க முடியவில்லை.
‘சொப்பன சுந்தரிகள்’, ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதைகளில் வண்ணத்திரையின் பின்னுள்ள நாயகிகளை மையமாகக் கொண்டு அந்த நாயகிகளின் பிரச்னைகளை விவரித்து, திரையில் காண நேரும் நட்சத்திரங்களின் பிரகாசத்தை மட்டுமே கண்டு ஒளியால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சிகள் அழிய நேர்வதை திரையின் நாயகியே விரிவாகச் சொல்லியும் பெறும் தெளிவை, சுயமாகச் சிந்திக்கத் தெரியாமல் எல்லோர் பேச்சையும் கேட்க ஆரம்பித்தால் குழம்பி அழியத்தான் நேரிடும் என்பதை உடல் மற்றும் உள ரீதியாக ‘சொப்பன சுந்தரிகள்’ கதையின் வாயிலாகவும், உள ரீதியாக அழிவதை ‘உதிர்ந்த நட்சத்திரம்’ கதையின் வாயிலாகவும் யதார்த்தமாகக் காட்டியுள்ளீர்கள்.
‘மெல்லத் தமிழ் இனி’ கதையின் தலைப்பைப் பார்த்து கதையைப் படிக்கும்போது, தமிழ் இனி சாகும் என்பதைச் சொல்ல வருகிறீர்களோ என நினைத்துப் படித்தால், ‘மெல்லத் தமிழ் இனி நடை பயிலும்’ என்பதைச் சொல்லாமல் சொல்லி, ஹாஸ்யத்துடன் கூடிய வேதனையைப் படிப்பவர்களிடையே பதிய வைக்கிறீர்கள். நன்று.
‘பட்டொளி வீசி’ கதையும், ‘மெல்லத் தமிழ் இனி’ கதையைப் போன்றதொரு கதைதான். இதிலும் தன்மானத்தை விட இயலாமல், அதை வெளிப்படுத்தவும் முடியாமல் தவிக்கும் அஞ்சலையின் மன உணர்வுகளைப் படிக்கையில் வாசகர்களைக் கலங்கடித்து விடுகிறீர்கள்.
‘நீ ஏன் ஒரே சமயத்துல அழகாவும் புத்திசாலியாவும் இருக்கே அகில்?’ என்ற நவீனின் கேள்விக்கு, ‘அழகா இருக்கறவா புத்திசாலியா இருந்தா கஷ்டம் நவீன்’ என்ற அகிலாவின் பதிலில், ‘தனக்கும் கஷ்டம்; மற்றவர்களுக்கும் கஷ்டம்’ என்கிற த்வனி ஒலிப்பதுடன், தொடர்ந்து அவள் கூறும் பதிலில் உண்மைகள் இழையோடினாலும், கமலக் கண்ணனுக்கும் கண்கள் இருந்திருந்தால் அழகைத்தான் ஆராதித்திருப்பார் என்ற முடிவுக்கு ‘காகிதக் கமலங்கள்’ கதையில் வாசகரைத் தள்ளிவிட்டு, அழகு அடையும் வேதனைகளை ஒரு பெண்ணாக நின்று பார்த்திருந்தாலும், ‘ஊனமுள்ளவர்களுக்கோ வயசானவர்களுக்கோதான் பிச்சை போடுவோம். அது காதல் பிச்சையானாலும் சரி’ என்ற அகிலாவின் கூற்றை, நிச்சயம் விமர்சகனாக நின்று பார்த்தாலும்கூட ஏற்க முடியவில்லை.
ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் என்கிற வகையில், ‘மறுபடியும் அவன் முகம்’ என்ற கதையில் கோமதியின் முகத்தைக் காட்டுகிறீர்கள். ஏமாற்றப்பட்டது தெரிந்தபின்னரும் நினைவுகளை விலக்கமுடியாமல், ‘நினைவு முகத்தை’க் கொண்டு தவிக்கும் பெண்ணின் தவிப்பைப் பிரதிபலிக்கும் கதை.
நிர்பந்தங்களால் திசை மாறும் கப்பல்களை ‘நிர்பந்தங்கள்’, ‘திசை மாறும் கப்பல்’ கதைகளில் வெளிப்படுத்தும் தாங்கள், ‘சங்கீத சங்கமங்களிலோ’ தான் அடைய நினைப்பதை புத்தி சாதுர்யமிருந்தால் அடையலாம் எனக் கோடிட்டுக் காட்டுகிறீர்கள்.
பொதுவில் தங்கள் கதைகள், வாழ்வியல் பிரச்னைகளுக்கான தீர்வை, வெளிச்சம் போட்டுக் காட்டும் குழல் விளக்காக உள்ளன.
- சைதை முரளி.