Wednesday, August 26, 2015

திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகம்

நண்பர் யெஸ். பாலபாரதி அவர்களின் ‘துலக்கம்’ மற்றும் ‘சந்துருவுக்கு என்னாச்சு?’ என்ற நூல்களைப் படித்தபோதுதான் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. இப்பேர்ப்பட்டவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்ற வினா என்னுள் எழ, அதற்கான ஆன்மிகத் தீர்வைத் தேடி அலைந்தேன். சமீபத்தில் ‘பிடி அரிசி’ வாங்கச் சென்றபோது, ஆன்மிக
மூத்த எழுத்தாளர் மற்றும் தல வரலாற்று ஆராய்ச்சியாளர் மஹேந்திரவாடி உமாசங்கரன் அவர்களிடம் இதுகுறித்துப் பேசினேன். தீர்வு கிடைத்திட, மிகவும் மகிழ்ந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது தவிர, தினசரி வழிபாட்டு நூலான பலன் தரும் திருமுறைப் பதிகங்கள் நூலை மேற்கு தாம்பரம் லிங்கன் டீ கம்பெனி நிறுவனத்தார் முன்னர் இலவசமாகவே தந்துள்ளார். பின்னர் 10 ரூபாய்க்குத் தந்துள்ளனர். தற்போது ரூபாய் 20-க்கு ஈசா & கோ நிறுவனத்தினர் (மேற்கூறிய அதே லிங்கன் டீ நிறுவனம்தான்) 200 பக்கங்கள் அடங்கிய மேற்படி நூலை வெளியிட்டு ஆன்மிகத் தொண்டாற்றி வருகின்றனர். அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி நவில்கிறேன். அந்நூலின் குறிப்பையே இங்கு பயன்படுத்தியுள்ளேன்.

மேலும், இத்திருப்பதிகம் மற்றும் அத்தலம் சார்ந்த விரிவான விவரங்களை கீழ்த் தந்துள்ள இணைப்பில் காணலாம். மேலும் இத்திருப்பதிகப் பாடலையும் இங்கு தந்துள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.shivatemples.com/nofct/nct62.php

http://temple.dinamalar.com/New.php?id=118

http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm




திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாச்சிலாச்சிராம தேவாரத் திருப்பதிகம்

முதல் திருமுறை 44-வது திருப்பதிகம்.

பண் - தக்கராகம்
இராகம் - காம்போதி
இறைவர் - மாற்றறிவரதர்
இறைவி - பாலசௌந்தரி





இரத்த அழுத்தம், நீரழிவு நோய், நரம்புத் தளர்ச்சி மற்றும் குடிபோதையில் சிக்கித் தவிப்பவர்களும் மீண்டு வாழ ஓதவேண்டிய பதிகம்.

திருஞான சம்பந்தப் பெருமான் பல தலங்களையும் தரிசித்தபடி, மழநாட்டைச் சேர்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் எனும் தலத்திற்கு வந்து சேர்ந்தார். அந்நாட்டு மன்னன் கொல்லிமழவனுடைய மகள் ‘முயலகன்’ என்னும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். சம்பந்தப் பெருமானை வரவேற்ற மன்னன், தனது மகளின் நோயைத் தீர்க்கும்படி வேண்டிக்கொண்டான். 

அதன்படி சம்பந்தப் பெருமான் இத்திருப்பதிகத்தைப் பாடி, மன்னனின் மகளைப் பீடித்திருந்த நோயைக் குணமாக்கினார்.

இத்திருப்பதிகத்தை 48 நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், மேற்கண்ட நோய்கள் குணமாகும் என்பது திண்ணம். 

துணி வளர் திங்கள் துளங்கி விளங்கச் 
சுடர்ச்சடை சுற்றி முடித்துப்
பணி வளர் கொள்கையர் பாரிடம் சூழ 
ஆர் இடமும் பலி தேர்வர்
அணி வளர் கோலம்எலாம் செய்து பாச்சில்
ஆச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ மங்கையை வாட 
மயல் செய்வதோ இவர் மாண்பே 1

கலை புனை மான்உரி தோல்உடை ஆடை
கனல்சுடரால் இவர் கண்கள்
தலை அணி சென்னியர் தார் அணி மார்பர் 
தம் அடிகள் இவர் என்ன
அலை புனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் பாச்சில்
ஆச்சிராமத்து உறைகின்ற
இலைபுனை வேலரோ ஏழையை வாட 
இடர் செய்வதோ இவர் ஈடே. 2

வெஞ்சுடர் ஆடுவர் துஞ்சு இருள் மாலை 
வேண்டுவர் பூண்பது வெண்நூல்
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக 
நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச் 
சிதை செய்வதோ இவர் சீரே. 3

கன மலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் 
கனல் தரு தூ மதிக்கண்ணி
புன மலர்மாலை அணிந்து அழகாய 
புனிதர் கொல் ஆம் இவர் என்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
மனமலி மைந்தரோ மங்கையை வாட 
மயல் செய்வதோ இவர் மாண்பே. 4

மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி 
வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக் குழல் தாளம் ஓர் வீணை 
முதிர ஓர் வாய்மூரி பாடி
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
சாந்து அணி மார்பரோ தையலை வாடச் 
சதுர்செய்வதோ இவர் சார்வே. 5

நீறுமெய் பூசி நிறைசடை தாழ 
நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி
ஆறுஅது சூடி ஆடரவு ஆட்டி 
ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர் பூதத்தர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
ஏறுஅது ஏறியர் ஏழையை வாட 
இடர் செய்வதோ இவர் ஈடே. 6

பொங்கு இள நாகம் ஓர் ஏகவடத்தோடு
ஆமை வெண்நூல் புனை கொன்றை
கொங்கு இள மாலை புனைந்து அழகாய 
குழகர்கொல்ஆம் இவர் என்ன
அங்கு இளமங்கை ஓர் பங்கினர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச் 
சதிர் செய்வதோ இவர் சார்வே. 7

ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து 
இராவணனை ஈடு அழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய 
மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள்தேவரோ சேயிழை வாடச் 
சிதை செய்வதோ இவர் சேர்வே. 8

மேலது நான்முகன் எய்தியது இல்லை 
கீழ்அது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை 
என இவர் நின்றதும் அல்லால்
ஆல் அது மா மதி தோய்பொழில் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ பைந்தொடி வாடப் 
பழி செய்வதோ இவர் பண்பே. 9

நாணொடு கூடிய சாயினரேனும் 
நகுவர் அவர் இருபோதும்
ஊணொடு கூடிய உட்கும் நகையால் 
உரைகள் அவை கொள வேண்டா
ஆணொடு பெண்வடிவு ஆயினர் பாச்சில் 
ஆச்சிராமத்து உறைகின்ற
பூண்நெடு மார்பரோ பூங்கொடி வாடப் 
புனை செய்வதோ இவர் பொற்பே. 10

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க 
ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகாய 
புனிதர் கொலாம் இவர் என்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி 
நல்தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண்தமிழ் கொண்டு இவை ஏத்தச் 
சாரகிலா வினைதானே. 11

திருச்சிற்றம்பலம்

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.