Sunday, November 26, 2006

இலக்கியச் சிந்தனை

இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பு சென்னையில் முப்பத்தாறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம் என்னவெனில், இலக்கியத்தையும் திறனாய்வையும் மதிப்பிட்டுப் போற்றுவது.

மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று மாலை 6.30 மணிக்கு கூட்டம் தொடங்கும். இக்கூட்டத்தில் இதற்கு முந்தைய மாதத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளிலிருந்து சிறந்த சிறுகதையொன்றைத் தேர்ந்தெடுத்து மதிப்பிட்டுப் பேச அழைப்பார்கள். மேலும் ஏதாவதொரு தலைப்பில் சிறப்புரை ஒன்றும் நடைபெறும். இவ்விதம் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுகதைகளை நூலாகவும் வெளிக்கொண்டு வருவர். இவ்விதம் மாதந்தோறும் வெளியான அவ்வருடத்தின் பன்னிரண்டு சிறுகதைகளை, பிரபலமான ஒருவர் மதிப்பீடு செய்து அதிலிருந்து ஒரு கதையை அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுப்பார். அந்தச் சிறுகதையின் தலைப்பில் அந்தச் சிறுகதை நூல் வெளிவரும். இந்த நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். அந்தச் சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளருக்குப் பரிசும் சான்றிதழும் தருவார்கள். மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளருக்கும் இலக்கியச் சிந்தனை அமைப்பின் சான்றிதழ் வழங்கப்படும்.

இம்முறை அக்டோபர் மாதத்தில் வெளிவந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் விவரத்தையே இங்கே தந்துள்ளேன்.

2006-ம் வருஷம் அக்டோபர் மாதம் வெளிவந்த சிறுகதைகள் குறித்த மதிப்பீடு:


இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு முன்னர் 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் (399-வது கூட்டம்) வெளிவந்த சிறுகதைகளை மதிப்பிட்டுப் பேசினேன். இப்போது இது (442-வது கூட்டம்) இரண்டாவது முறை.

இம்முறை எனக்கு இந்த வாய்ப்பு வந்தபோது சற்றே சிறிது யோசித்தேன். காரணம், நேர நெருக்கடிதான். இதை பாரதி ஐயா அவர்களிடமும் தெரிவிக்க, அவர் இப்போதுதான் கதைகள் அவ்வளவாக வருவதில்லையே என்றார். அது உண்மையும்கூட! எனவே, சரி என்று ஆமோதித்தேன். கதைகள் குறைவாக இருக்கும் என்பதால் அல்ல; பல்வேறுபட்ட கதைகளைப் படிக்கும் வாய்ப்பு இதன் மூலமாகவாவது கிடைக்குமே என்பதால்!

கடந்த முறை சிறுகதைத் தேர்வுக்கு கிடைத்த கதைகள் 111 (ஒரு பக்கக் கதைகள் உள்பட). இம்முறை ஒருபக்கக் கதைகள் மற்றும் ஒரு நிமிஷக் கதைகளைத் தவிர்த்துவிட்டு, எனக்குக் கிடைத்த கதைகளை எண்ணிப் பார்த்தபோது கிடைத்த கதைகளின் எண்ணிக்கை 36-தான். இருப்பினும் இந்த அளவுக்காவது கதைகள் படிப்பதற்கு இருக்கிறதே என்ற சந்தோஷத்தில் கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

அக்டோபர் மாதத்து இதழ்களில் அதிகபட்சமாக கல்கி வார இதழில்தான் 12 கதைகள் இடம்பெற்றிருந்தது - போட்டிக்கதைகள் உள்பட! இதற்கு அடுத்தபடியாக ஆனந்தவிகடனில் ஏழு கதைகளும், குமுதத்தில் ஆறு கதைகளும், குங்குமத்தில் நான்கு கதைகளும் இடம் பெற்றிருந்தன. இத்துடன் எனக்குப் படிக்கக் கிடைத்த இதழ்கள் அமுதசுரபி, கலைமகள், தீராநதி மற்றும் தினமணி கதிர்.

இனி, எனக்குப் பிடித்த கதைகள் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில் குமுதம் தீராநதியில் வெளிவந்த 'பிற்பகல் விளையும்' என்ற கதையைப் பார்ப்போம். இதை எழுதியவர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்கள்.


சிறுவன் சண்முகத்தின் அப்பா, கிரி செட்டியாரிடம் நூல் வாங்கி புடைவையை நெய்து தரும் வேலை செய்பவர். வாரத்துக்கு இரு புடைவைகளை நெய்து தந்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்வை நடத்தி வருபவர். ஒரு சில வாரங்களில் மூன்றாவது புடைவை நெய்வதற்கும் வாய்ப்பு கிடைக்கும். புடைவை நெய்தலில் இருக்கும் இடர்ப்பாடுகளை கதை சொல்லிச் செல்கிறது. இதனால் சண்முகத்தின் தந்தை அவன் தாயிடம் அடிக்கடி சண்டை போடுவதுண்டு. இதற்கிடையிலும் சிறுவன் சண்முகத்துக்கு அடங்காத ஆசை ஒன்று உண்டு. அது அவன் அப்பா புடைவையை நெய்து முடித்தவுடன், அவருடன் சென்று வீனஸ் பேக்கரியில் விற்கும் தேங்காய் பன்னை சுடச்சுட வாங்கி ருசித்துத் தின்பது. இதுபோன்று ஒருமுறை சண்முகம் தன் தந்தையுடன் கூடச் செல்வதிலிருந்து கதை தொடங்குகிறது. எப்போது அழைத்துச் சென்றாலும், சண்முகத்தை அவரது டெய்லர் கடை நண்பர் வீட்டில் அவனை விட்டுவிட்டு தெருக்கோடியில் இருக்கும் கிரி செட்டியார் வீட்டுக்கு நெய்த புடைவையை எடுத்துச் செல்வது அவர் வழக்கம். இந்த முறை சண்முகத்தின் அப்பா வருவதற்கு நேரமாகவே, ஒரே ஒருமுறை அவன் தாயுடன் அந்த இடத்துக்குப் போயிருப்பதால், என்னவாயிற்று எனப் பார்ப்போம் என எண்ணி நைசாக நழுவி வந்து கிரி செட்டியார் வீட்டுக்கு பக்கவாட்டு வழியாகச் சென்று பார்க்கிறான். அங்கு அவன் அப்பாவை வாய்க்கு வந்தபடி கண்டபடி கிரி செட்டியார் திட்டிக் கொண்டிருப்பதை அவன் கேட்க நேரிடுகிறது. ஏன் அங்கு சென்றோம் என பின்னர் எண்ணி அங்கிருந்து டெய்லர் வீட்டுக்கே வரும் சண்முகத்துக்கு, இப்போது வீனஸ் பேக்கரியோ தேங்காய் பன்னோ மிக முக்கியமாகப்
படவில்லை. அப்பாவின் வருகைதான் முக்கியமாகப் படுகிறது எனக் கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

அடுத்து 'விட்ட பணம்' என்ற தலைப்பில் கதையை எழுதியவர் மா. பிரபாகரன். தினமணி கதிர் 15.10.2006.


தென்னக இரயில்வேயின் மதுரைக் கிளையில் விசாரணை மற்றும் முன்பதிவு எழுத்தராக வேலை பார்ப்பவர் கதிரவன். ஒருநாள் முதன்மை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் சென்று கணக்கில் ரூபாய் ஆயிரத்து இருநூறு குறைகிறது என்ற குறையை கதிரவன் முன்வைப்பதில் தொடங்குகிறது இக்கதை. முன்பதிவு மேற்பார்வையாளரும், கேஷியரை கணக்கைப் பார்வையிடச் சொல்கிறார். மற்றும் இவரிடம் மறுபடியும் ஃபார்ம்களை செக் பண்ணுங்கள் எனக் கூறுகிறார். மேற்பார்வையாளர் கேட்கும் பல கேள்விகளுக்கும் கதிரவன் பொறுமையாகப் பதில் அளிக்கிறார். ஆனால், பணம் போனவழிதான் தெரியவில்லை. முடிவில் கேஷியர் இவனிடம், நேற்றுதான் சம்பளம் உங்க அக்கவுண்ட்ஸ்ல ஏறியிருக்கும். ஏ.டி.எம். கார்டைத் தேச்சு கொண்டாந்து கட்டிடுங்க எனக்கூற, ஆறு மாதங்களுக்கு முன்னால் சிறந்த பணியாளர் விருது தனக்குக் கிடைத்தபோது சின்ன ட்ரீட் கேட்டு தராததால் கேஷியர் இப்போது பழிவாங்குகிறாரோ என்ற எண்ணம் ஓடுகிறது. இந்நிலையிலேயே கதிரவன் வீடு திரும்புகிறார். வீட்டில் மனைவியிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா எனத் தவித்து கடைசியில் சொல்லவேண்டாம் என முடிவெடுக்கிறார். அப்படியே முடிவெடுத்தாலும், அது அவரது
குழந்தைமேல் வெளிப்படுத்தும் கோபத்தால் வெளிப்படுகிறது. இதனால் தன் கணவர் இயல்பாக இல்லை என்பதை அறியும் மனைவி காரணத்தைக் கேட்கிறாள். காரணம் அறிந்தபின் அவருக்கு சூடான காபி தந்து, அப்படியே காலாற வெளியே போய்ட்டு வாங்க, மனசு மாறும் எனக்கூறி அமைதிப்படுத்துகிறாள்.

மறுநாள், ஒரு மணிநேரம் முன்பாகவே அலுவலகத்துக்குச் செல்லும் கதிரவன், எந்த வழியில் அந்தப் பணம் போயிருக்கும் என்பதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது அவருக்கு ஒன்று தெரிய வருகிறது. அது என்னவெனில் முந்தைய நாள் பார்ம்களில் எழுதிய டினாமினேஷன்படி முப்பது ஐநூறு ரூபாய் தாள்களும், அறுநூற்றியெழுபது நூறு ரூபாய் தாள்களும் இருக்கவேண்டிய கணக்கில் ஐநூறு ரூபாய் தாள்களில் மூன்று குறைவாகவும்,
நூறு ரூபாய் தாள்களில் மூன்று அதிகமாகவும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அதன்பின்னர் யாரோ ஒரு நபரிடம் முன்னூறு ரூபாய் தரவேண்டிய இடத்தில் மூன்று ஐநூறு ரூபாய்களைத் தந்திருக்கிறோம் என்பதைக் கண்டுபிடிக்கிறார். இவரது சந்தேகத்தில் மூன்று நபர்கள் இடம்பெறுகிறார்கள். அதில் இருவர் உள்ளூரிலேயே இருப்பவர்கள். அவர்கள் கதிரவனிடம், உங்க கஷ்டம் எங்களுக்குத் தெரியாதா சார் எனக்கூறி மறுக்கின்றனர். மூன்றாம் நபர் வெளியூர்காரராதலால், அவருக்கு விவரத்தைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதுகிறார். சில மாதங்களாகியும் அந்த வெளியூர் நபரிடமிருந்து பதில் இல்லை. இந்நிலை இப்படியே இருக்கையில் ஆடி மாதம் முடிய சில நாள்களே உள்ளது. எப்போது எங்களுக்குத் துணி எடுத்துத் தரப்போகிறீர்கள் என அவர் மனைவி கேட்கிறாள். அவருக்குக் கோபம் வந்தாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

இந்நிலையில் அவரது அலுவலகத்துக்கு அவர் பெயரில் ஒரு கூரியர் கடிதம் வருகிறது. அதைப் பிரித்துப் பார்க்கும் கதிரவன் ஆனந்தமடைகிறார். சிலமாதங்களுக்கு முன் வெளியூர் நபர் ஒருவருக்கு பண விஷயம் குறித்து கடிதம் போட்டாரல்லவா? அவரிடமிருந்துதான் கடிதம். அக்கடிதத்தில் அந்த வெளியூர் நபர், சமீபத்தில்தான் தங்கள் கடிதத்தைக் கண்டேன். வீட்டிலுள்ளவர்கள் எனக்குத் தெரியப்படுத்த மறந்துவிட்டனர். நீங்கள் கூடுதலாகப் பணத்தைக் கொடுத்துவிட்டது என்னிடம்தான். நானும் அப்போது ஊர்போகும் அவசரத்தில் இருந்ததால் அதைக் கவனிக்கவில்லை. பின்னர் இந்தப் பணம் எப்படி வந்தது என்று தெரியாமல் இதுநாள்வரையில் இருந்தேன். இப்போது தெரிந்ததால் இத்துடன் அப்பணத்துக்கான காசோலையை இணைத்து அனுப்பியுள்ளேன். தாங்கள் அச்சமயம் என்னிடம் மிகக் கனிவுடன் நடந்துகொண்டதை என்னால் என்றும் மறக்க இயலாது என்று அவரது சேவையையும் பாராட்டிச் செல்கிறது அக்கடிதம். இதைக் காணும் கதிரவன் அதன்பின்னர், இந்த முறை ஆடித் தள்ளுபடியை ஆடித் தள்ளிவிடலாம் என்று உற்சாகம் கொள்வதாகக் கதை முடிகிறது. இக்கதையில் வெளிப்பார்வைக்குச் சுலபமாகத் தெரியும் அந்த வேலையில் இப்படியும் பிரச்னைகள் உண்டு என்பதை சூசகமாகச் சொல்கிறார் கதாசிரியர்.

அடுத்து குங்குமம் வார இதழில் (22.10.2006) வெளியான அனுராதா ரமணன் அவர்கள் எழுதிய 'கோபுரமும் பொம்மையும்' என்ற கதை.


முதியவர் வாதிராஜ் இரண்டாம் தாரமாக சக்குவைத் திருமணம் செய்கையில் அவருக்கு வயது நாற்பத்தைந்து. சக்குவுக்கு இருபத்தைந்து வயது. இருபது வருட வித்தியாசம். மூத்த மனைவி இறந்து இருபது வருடங்களுக்குப் பின்பே சக்குவைத் திருமணம் செய்துகொள்கிறார். இரண்டாவது திருமணமே வேண்டாம் என்று இருந்த வாதிராஜை அவரது அண்ணிதான் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி திருமணமும் செய்துவைக்கிறார். முதல் தாரத்திடம் இருந்து அவருக்கு பிள்ளை குட்டி கிடையாது. ஒண்டிக்கட்டை. தபாலாபீசில் வேலை. திருமணம் முடிந்தபிறகு சக்குவின் செய்கைகள் பல குழந்தைத்தனமாக இருப்பதால், வாதிராஜ் சக்குவுக்கு ஒரு மண்ணும் தெரியாது என நினைத்து நடத்தி வருகிறார். கல்யாணம் ஆனதிலிருந்தே சக்குவும் அவருக்குச் சில பணிவிடைகளைச் செய்துவிட்டு, வெளியில் பிறருக்கு உதவக் கிளம்பிவிடுவாள். என்ன இவள் இப்படி இருக்கிறாளே! தேவையான நேரத்தில் ஓர் உதவிக்கு இருக்கமாட்டேன் என்கிறாளே! என எண்ணி வாதிராஜ் கவலைப்படுவதுடன், தனக்குப் பின்னர் இவளைத் தன் உறவுகள் கைவிட்டுவிடக் கூடாதே என்ற கவலையிலும் அவ்வப்போது தனக்கு வரும் பென்ஷன் பணத்திலிருந்து மாதா மாதம்
ஒரு குறிப்பிட்ட தொகையை அவரது உறவுகளுக்கு எடுத்துக்கொடுக்கிறார். எனக்குப் பிறகு, இவளைக் கைவிட்டுவிடமாட்டீர்களே என்று ஆதங்கமாகக் கேட்டவண்ணம் உதவுகிறார். அவர்களும் அப்படி விட்டுவிடுவோமா, நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கவலையே படாதீங்க எனக் கூறுகின்றனர்.

இந்த இரண்டாம்தர வாழ்க்கையில் சக்குவைத் தொடாமல், அன்பாய் அந்தரங்கமாய் வாழாமல் முப்பது வருடங்கள் ஓடிவிடுகின்ற நிலையில்தான் இந்தக் கவலை வாதிராஜை பாடாய்ப் படுத்துகிறது. ஏனெனில், முதல் மனைவிக்குப் பிரசவத்தின்போதே அவளும் அவள் குழந்தையும் இறந்துவிடுவதாக அறியும் சக்கு, தாம்பத்ய உறவே வேண்டாம் என்றிருக்க, வாதிராஜுக்கும் ரத்தக் கொதிப்பும் சர்க்கரை வியாதியும் சேர்ந்துகொள்கிறது. இந்நிலையில் ஒருநாள் பீரோ சாவியையும் அவள் தன்னோடு கொண்டு சென்றுவிட, அச்சமயம் பணத்துக்காக வரும் அவரது அண்ணன் மகன் ரங்கனுக்கு பணத்தை எடுத்துக்கொடுக்க முடியாமல் போகிறது. சமயத்துல வீட்டுல இல்லாம, அப்படி என்னதான் இவளுக்கு
வெளியில இருக்கோ என அங்கலாய்க்கும் வாதிராஜ், தான்தான் வெளியில் சென்றால் பீரோ சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு போகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. பாவம், எவனாவது ஒரு ஹோட்டல் சர்வரையோ அல்லது மூட்டை தூக்கியையோ கல்யாணம் செய்து
கொண்டிருந்தால்கூட அவள் நன்றாக இருந்திருப்பாளோ என்ற பச்சாதாபமும் எட்டிப் பார்க்கிறது. பின்னர் அவளிடம், எங்கே போயிட்டே? ரங்கன் பணத்துக்காக வந்தான். மாச முதல் வாரத்திலே என் உறவுகள் வருவது உனக்குத் தெரிந்ததுதானே! பீரோ சாவியை எடுத்துண்டு போனாலும் அவங்களுக்குக் கொடுக்கற பணத்தையாவது எடுத்துத் தந்துட்டுப் போலாம் இல்ல எனக் கேட்கிறார். அதற்கு அவள் ரங்கன் வருவான். பின்னாடியே
அவன் தங்கையும் சில நாளில் வருவாள். இப்படி அவர்களுக்கே உங்கள் பென்ஷன் பணத்தை அளித்துவிட்டால், கடைசியில் எனக்கு என்ன இருக்கும்? ஏதோ இல்லாக் கொடுமை, எங்கப்பா என்னை உங்களுக்குக் கட்டிக் கொடுத்திட்டார். நாப்பத்தஞ்சு வயசுக்கு மேலே உங்ககிட்ட
பிள்ளையையும் பொண்ணையும் பெத்து வச்சிட்டு பின்னாடி நான் ஒருத்தியா லோல் படக்கூடாதேன்னுதான் உங்க பக்கத்துலேயே வராம இருந்து காலத்தைத் தள்ளினேன். ஒவ்வொண்ணுக்கும் கணக்கு கேட்கும் நீங்க, நான் தினமும் எங்க போயிட்டு வரேன்னு அக்கறைப்பட்டதுண்டா? நான் வெளியில தினமும் போய் எல்லோருக்கும் கூடமாட ஒத்தாசை செய்து ஐம்பது ரூபாய் சம்பாதிக்கிறேன். ஐம்பத்தைந்து வயசுக்கு மேல நான் யாராண்ட போயி நிப்பேன்? என கேள்விக் கணைகளால் தாக்க, இவளுக்கா ஒண்ணும் தெரியாது எனத் தவறாக நினைத்திருந்தோம்? நல்லவேளை! இவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வாள் என்ற நினைப்பு மேலிட, வாதிராஜ் நிம்மதியாகக் கண்மூடுவதாகக் கதை முடிகிறது.

அடுத்தது ஆனந்தவிகடன் 15.10.06. இதழில் வெளியான 'இந்தக் காலத்துப் பசங்க!' கதையை எழுதியவர் ஆரணி யுவராஜ்.


புதுமனைப் புகுவிழாவுக்கு, தான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தாமோதரனுக்கு, வீடு தேடிச்சென்று பத்திரிகை வைத்து அவசியம் விழாவுக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறான் 26 வயது ராம்குமார். அவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் பரபரப்பு மிகுந்த தி.நகர் பகுதியில் வீடு என்பதால் ஆச்சரியம். இந்த இடத்தை எப்படிப் புடிச்சே என்று கேட்கிறார் ஆசிரியர். தெரிந்த நண்பர் ஒருவர் மூலமா வந்தது. நல்ல சான்ஸை விடக்கூடாதுன்னு ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கினேன் எனக்கூறும் ராம்குமாருக்கு டைடல் பார்க்கில் வேலை. ஆரம்பச் சம்பளமே ரூ.40,000/-.

அவன் இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்து இந்த நிலைக்கு வந்ததுக்குக் காரணமாக இருப்பவள் அவன் தாயார். இட்லிக் கடை நடத்தியே அவனை இந்த நிலைக்கு உயர்த்தியிருப்பவள். தாமோதரனும் அவர் மனைவி கனகாவும் ராம்குமாரிடம், இவ்வளவு கஷ்டப்பட்டு கடன் வாங்கியாவது வீட்டைக் கட்டவேண்டிய அவசியம் என்ன? திடீர்னு கல்யாணம் காட்சின்னா பணத்துக்கு எங்கே போவே? என்று தன்னிடம் படித்த மாணவனாயிற்றே என்ற ஆதங்கத்தில் கேட்கின்றனர். அதற்கு அவன், கல்யாணத்தைக்கூட கோயில்ல நடத்தி விருந்தை ஒரு ஹோட்டல்ல வச்சு சிம்பிளா முடிச்சுடலாம். கல்யாணத்தை எப்படி வேணும்னாலும் நடத்திடலாம். ஆனால், வீட்டை எப்படி வேணும்னாலும் கட்ட முடியாதே எனப் பதில் கூறுகிறான். அவன் போன பின்னர் ராம்குமாரின் இந்தப் பதிலால் பெருமூச்சு விடும் தாமோதரனின் மனைவி கனகா, இப்ப இருக்கிற தலைமுறை நம்மள மாதிரி இல்லை. ரொம்பப் புத்திசாலிங்க எனப் பாராட்டுகிறாள்.

விழாவுக்கு வரும் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்கிறான் ராம்குமார். வீட்டையெல்லாம் சுற்றிப் பார்க்கும் அவர்கள் அவனிடம், அதென்ன முன்பக்கம் கடை மாதிரி கட்டியிருக்கே என்று கேட்க, அதற்கு அவன், தன் தாய் இட்லிக் கடை நடத்தவேண்டி அந்த இடத்தைக் கட்டியிருப்பதாகக் கூறுகிறான். அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் அவனிடம், நாங்க கேக்கறோம்னு தப்பா நினைக்காத. இவ்வளவு காலம்தான் உன் தாய் உன்னை வளர்த்துப் படிக்கவச்சு இந்த நிலைக்கு ஆளாக்கிட்டாங்களே. அப்புறமும் ஏன் அவங்க இட்லிக் கடை வைச்சு நடத்தணும்? இப்பவாவது உன் தாய்க்கு ரெஸ்ட் குடுக்கலாமில்லே என்ற அர்த்தத்தில் கேட்க, அதற்கு அவன் அளிக்கும் பதில் அவர்களை இன்னமும் ஆச்சரியப்பட வைக்கிறது.

நான் இந்த நிலைக்கு வந்ததே என் தாய் நடத்திய அந்த இட்லிக் கடைதான் காரணம். இன்னிக்கு மேலே வந்துட்டதால அதை நிறுத்தறது எந்த விதத்துல நியாயம்? அதுவும் இல்லாம அது என் அம்மாவோட தொழில். அவங்களுக்கேயான ஒரே தொழில் அதுதான். நான் பெரிய வேலைல உட்கார்ந்துட்டதால அதை நிறுத்தச் சொல்ற உரிமை எனக்கு இல்லே. இதுவே என் அம்மா டாக்டராகவோ, ஓர் ஆபீசராகவோ இருந்தா என்னால அவங்க தொழிலை நிறுத்தச் சொல்லமுடியுமா? சுய கெளரவத்தையும் தன் காலில்தான் தான் நிற்கிறோம் என்ற தன்னம்பிக்கையையும் அவங்களுக்கு இந்தத் தொழில் கொடுக்குது. அவங்களால முடியற வரைக்கும் இந்தத் தொழிலைச் செய்யட்டும். அவங்களுக்கு உதவியா சில ஆள்களை
நியமித்திருப்பதையும், புதுப் பண்டம் பாத்திரங்கள் வாங்கியிருப்பதையும் அவர்களுக்கு எடுத்துக்கூற, ஆச்சரியத்தில் உறைந்து நிற்கும் தாமோதரன் ராம்குமாரிடம், சபாஷ் ராம்! எல்லாரையும் மாதிரி நானும் இந்தத் தலைமுறையை தப்பாவே நினைச்சுட்டு இருந்தேன். இப்பப் புரியுது. நீங்கள்ளாம் தெளிவாதான் இருக்கீங்க. அன்பு, பாசம்னு சொல்லி பாரத்தை இழுத்துப்போட்டுக்கிட்டு மனசுல வெச்சுப் புழுங்காம, வாழ்க்கையை ரொம்பவே பிராக்டிகலா பார்க்கறீங்க. மத்தவங்களோட சுய கெளரவத்துக்கும் மதிப்பு கொடுக்கறீங்க என்று கூறி வாழ்த்திச் செல்கிறார்.

இதுவரையில் எனக்குப் பிடித்த சிற்சில கதைகளைப் பட்டியலிட்டேன். பட்டியலை இன்னமும் நீட்டித்துக்கொண்டு போகலாம். எனினும் நேரமில்லையாதலால், குறிப்பாக மேலும் எனக்குப் பிடித்த சில கதைகளையும், அவை வெளிவந்த இதழ்களையும் கூறிவிட்டு, இந்த மாதம் நான்
தேர்வு செய்த கதையைப் பார்ப்போம்.


தன் வாழ்வின் நேரங்களைத் தொலைத்துவிட்டு, தன் மகனையே காண அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் காத்திருக்கும் சூழலைப் படம்பிடித்துச் சொல்லும் கதையொன்றை அமுதசுரபியில் 'நேரமில்லை' என்ற தலைப்பில் எம்.ஏ.சுசீலா அவர்கள் எழுதியிருக்கிறார்.

குழந்தைகளை வைத்து வேலை வாங்கும் நிறுவனமொன்றில் சேரவேண்டியிருக்கிறதே என்ற தயக்கத்துடனே வேலைக்குச் சேரும் ஓர் இளைஞன், பின்னர் அம்முதலாளியின் நோக்கம் அறிந்து இவரைத் தப்பாக நினைத்துவிட்டோமே என்று எண்ணி மறுகுவதை 'கோணம்' என்ற கதையின் வாயிலாகத் தெரிவிக்கிறார் ஆசிரியர் ஸ்ரீ. கல்கி 1.10.06-ல் வெளியாகியுள்ளது இந்தக் கதை.

மாமியார் நாத்தனார் இடையே வேலைக்குச் செல்லும் மருமகள் படும் அவலங்களையும், அதை எப்படி அவள் வீட்டைவிட்டு வெளிவந்து சமாளித்து, வெளியிலிருந்தே தன் மகன்களை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்குகிறாள் என்பதை எடுத்துக்காட்டும் கதை தப்புத்தாளங்கள். கா.ஸ்ரீ.ஸ்ரீ. நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல்பரிசு பெற்ற கதை இது. கலைமகளில்வெளிவந்திருக்கும் இந்தக் கதையை எழுதியவர் தீபம் எஸ். திருமலை அவர்கள்.

தன் கிளாஸ்மேட் குணாவை 25 வருஷங்களாக கதிர் பார்க்காமல் இருக்கும் தவிப்பையும், அவனைப் பார்க்கச் செல்லும் ஆர்வத்தையும் கூறிச் செல்லும் கதை, முடிவில் கதிர் அவனைப் பார்க்காமலே திரும்பிவிடுவதைத் தெரிவிக்கிறது. 'ஒரு நட்பின் முடிவு' என்ற தலைப்பில் இந்தக் கதை கல்கி 8.10.2006-ல் வெளியாகியுள்ளது. எழுதியவர் படுதலம் சுகுமாரன் அவர்கள்.

தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில், தான் வேலை செய்யும் பிரபல பத்திரிகைக்காக புதுமையாகப் பலவிதங்களில் யோசிக்கும் புகைப்படத்துறை சார்ந்த பெண் பத்திரிகையாளர் சுமனுக்கு, ரோடு போடும் இடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு சிறுவன் தென்படுகிறான். அவனால் கவரப்பட்டு அவனைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து பத்திரிகையில் வெளியிடுகிறாள். அவளுக்குப் பேரும் புகழும் கிடைக்கிறது. ஆனால், அதுவரையில் அங்கு அவனை நன்கு கவனித்துவந்த முதலாளி அந்தச் சிறுவனை அந்த வேலையை விட்டே நீக்குகிறார் என்பதைப் பின்னர் அவனைத் தேடிச் செல்லும் சுமன் உணர்வதையும், அவளது உணர்ச்சி மோதல்களையும் அழகுற எடுத்துக்காட்டுகிறது 'விடையில்லாத வினா' என்னும் கதை. எழுதியவர் பானுகுமார். வெளிவந்த இதழ் கல்கி 8.10.2006.

தன் மகன், மருமகள் மற்றும் பேத்திக்கு இடையே பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை. அன்பும் பாசமும் அந்தக் குடும்பத்தில் பெருகவேண்டும் என்பதற்காக முதியோர் இல்லம் தேடிச் செல்லும் ஒரு தாயின் கதையை அழகுபட எடுத்துக்காட்டும் கதை 'அம்மாவின் முடிவு.' கல்கி 15.10.2006-ல் வெளியான இக்கதையை எழுதியவர் மாரம்பாடி பாஸ்கர்.

காட்டு விலங்குகளுக்குள்ளே 'ஆணழகன் யார்?' என்ற போட்டி நடக்கிறது. முடிவில் காட்டுப் பன்றியே 'ஆணழகன்' என முடிவாகிறது. இயல்பாய் இருத்தலே அழகு என்பதை 'ஆணழகன் யார்?' என்ற இந்தக் கதையின் மூலம் சுவைபடக் கூறுகிறார் கதாசிரியர் பெ. கருணாகரன். குமுதம் 25.10.2006-ல் வெளிவந்த கதை இது.

ஆனந்த விகடனில் வெளியான கதிரேசன்களின் கதையும் நல்ல கதைதான். இதை எழுதியவர் ராஜுமுருகன. வெளியான தேதி 22.10.2006. காதலில் தோல்வியுற்ற கதிரேசன் அவர் நண்பரின் மூலமாக ஒருத்தியைத் தேடிச் செல்வதும், அங்கிருந்து கிடைக்கும் ஞானத்திலிருந்து தெளிவு பெறுவதாகவும் அமைந்திருக்கும் கதை.

சரி. மூச்சு வாங்குகிறது. சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு இனி இந்த மாதம் எனக்குச் சிறந்ததாகப் படும் கதையை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பது குறித்துப் பார்ப்போம்.

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 18-வது அட்சக்கோடு கதையின் கடைசிப் பத்திகள்தான் நினைவுக்கு வந்தன. மேலும் ராகுல் சாங்கிருத்தியாயன் அவர்கள் எழுதிய 'ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள்' என்ற நூலும் நினைவுக்கு வந்தது. இனி, கதை.

மேவார் ராஜ்ஜியத்தின் பழைய சிறப்பும் வீரமெல்லாம் ஒடுங்கிப்போய் பெயரளவில் மட்டுமே மன்னராக இருக்கும் மேவார் ராஜ்ஜிய மன்னன் ராணா. அந்த மேவார் ராஜ்ஜியத்தின் இளவரசி பதினாறு வயது நிரம்பிய அழகு மயிலான கிருஷ்ணகுமாரி. ஏற்கெனவே அவளை மார்வார் ராஜாவுக்கு திருமணம் செய்துகொடுப்பதாய் நிச்சயித்திருந்தார் மன்னர். இந்நிலையில் நிச்சயம் செய்யப்பெற்ற அந்த ராஜா திடீரென்று இறந்துபோகிறார். இதனால் ஏற்படும் நிகழ்வுகளை ராஜகுமாரி என்ற சரித்திரக்கதையின் வாயிலாக கதாசிரியர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள் சோகம் நெஞ்சில் மிளிர படம் பிடித்துக் காட்டுகிறார். கதையைப் படித்து முடிக்கையில் நெஞ்சில் சில மணி நேரங்களுக்கு எந்தவொரு சந்தோஷத்தையும் அணுகவிடாத ஒரு
சோகம் வந்து கவ்விக்கொள்கிறது.

அசோகமித்திரனின் பதினெட்டாவது அச்சக்கோட்டில் கதையின் நாயகன் சந்திரசேகரன் தன்னைத் துரத்தும் கூட்டத்திடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு முஸ்லிம் வீட்டில் ஏறிக் குதிப்பான். ஏற்கெனவே நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்டு பயந்து போயிருக்கும் அந்தக் குடும்பத்தினர் இவன் கலவரக்காரனோ என நினைத்து விடுவர். ஏற்கெனவே அக்குடும்பத்தினர் செய்துகொண்ட ஏதோவொரு ஏற்பாட்டின்படி அந்தக் குடும்பத்தின் பதினாறு வயதுப் பெண்ணொருத்தி நாங்கள் பிச்சை கேட்கிறோம், எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள் எனக் கூறிக்கொண்டே தான் அணிந்திருக்கும் உடைகளைக் கழற்றியெறிந்த வண்ணம் அவனை நெருங்குவாள். இதைக் காணும் அந்தக் கதையின் கதாநாயகன் சந்திரசேகரனுக்கு தலை சுற்றி
வாந்தி வரும். தன் வீட்டாரைக் காப்பாற்றுவதற்காக தன்னை எவ்வளவு இழிவுபடுத்திக்கொண்டுவிட்டாள்? அவள் இன்னும் ஒரு குழந்தை. இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்குத் தானும் ஒரு காரணமாகிவிட்டோ மே என நினைத்து கதையின் நாயகன் சந்திரசேகரன் ஓடிக்கொண்டேயிருப்பதாக கதை முடியும்.

ஆனால் இந்தக் கதையிலோ இளவரசி கிருஷ்ணகுமாரியை மணக்கவேண்டி இரு தேசத்து ராஜாக்கள் போட்டியிடுகிறார்கள். அதில் ஒருவர் ஜெய்ப்பூர் ராஜா ஜகத்சிங். மற்றொருவர் ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியை நிச்சயம் செய்திருந்த மார்வார் தேசத்தில், புதிய வாரிசாச வந்திருக்கும் ராஜா மான்சிங். இந்த ராஜா மான்சிங்குக்கு ஏற்கெனவே கிருஷ்ணகுமாரியின் அழகைக் கேள்விப்பட்டிருக்கும் மராத்திய மன்னர் சிந்தியா, தான் உதவுவதாகக்கூறி, மேவார் ராஜ்ஜியத்தில் முன்னரே தனது படைகளைக் கொண்டுவந்து நிறுத்துகிறார். நிலைமை நாளுக்கு நாள் மேலும் மோசமாகவே கவலை கொள்ளும் மேவார் ராணா, தமது மந்திரி கிஷன்தாஸுடன் கலந்தாலோசிக்கிறார். இதை அறியும் ராணாவின் மகள் கிருஷ்ணகுமாரி, தன் தந்தையிடம் என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள் எனக் கேட்க, அவர் ஆங்கிலேயர்களின் உதவியை நாடலாம் என்றிருக்கிறேன் என்கிறார். அதெல்லாம் வேண்டாம்! சிந்தியா சொல்வதற்கு இசைந்துவிடுங்கள் எனக் கூறிச் செல்கிறாள் கிருஷ்ணகுமாரி. இதனால் சிந்தியா தனது படைகளைத் திரும்ப அழைத்து தனது நாட்டுக்குச் செல்கிறார். இருந்தும் மழைவிட்டும் தூவானம் நின்றபாடில்லை என்ற கதையாக, மன்னரின் முடிவை அறியும் ஜெய்ப்பூர் ஜகத்சிங் பெரிய படையைத் திரட்டி மார்வார் அரசன் ராஜா மான்சிங்குடன் போருக்குச் செல்கிறான். ஆறு மாதங்களுக்குப் போர் நடக்கிறது. இருப்பினும் இரு தரப்பில் எந்த ஒரு தரப்புக்கும் வெற்றி கிடைக்காமல் பெரிய சோதனையாக இருக்கிறது. இந்நிலையில் ஜகத்சிங்கின் படைத்தலைவன் அமீர் என்பவனும் மார்வார் அரசன் படையில் சேர்ந்துகொள்கிறான். போர் நிற்பதாகத் தெரியவில்லை. இதனால் எல்லா நாட்டு மக்களும் கஷ்டப்படுகிறார்கள். இதைக் காணும் கட்சி மாறிய படைத்தலைவன் அமீர், இதற்கு ஒரு முடிவு காணத் தலைப்படுகிறான். எனவே, மேவார் ராணாவுக்கு வேண்டப்பட்ட ஒருவரைச் சந்தித்து, தனது திட்டத்தைத் தெரிவிக்கிறான். அதை அறியும் அவர் திடுக்கிடுகிறார். இருந்தாலும் வேறு வழியில்லை போங்கள் என அவரை அனுப்பிவைக்கிறான் அமீர். அவரும் மேவார் ராணாவிடம் வந்து அந்த
முடிவைத் தெரிவிக்கிறார். அதைக் கேள்விப்படும் ராணா அதிர்ந்து போய், தன் அமைச்சரவையில் கூறி விவாதிக்கிறார். அவர்களும் நம் நாடு காப்பாற்றப்பட வேண்டுமானால் இதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றார்கள். இருப்பினும் தானும் அமைச்சரவையும் எடுத்திருக்கும் முடிவை ராணியிடம் உடன் தெரிவிக்காமல் இன்னும் சில தினங்களை எடுத்துக்கொள்கிறார் ராணா. அதன்பின்னர் ராணியிடம் ஒருகட்டத்தில் நிலைமையை எடுத்துச்சொல்ல, அவளும் உடன்பட மறுத்து, பின்னர் பல நாட்கள் யோசித்து மனம் ஒவ்வாமலேயே ஒப்புக்கொள்கிறாள். அந்த முடிவு என்னவெனில் இந்தப் பிரச்னைக்குக் காரணமாக விளங்கும் கிருஷ்ணகுமாரியைச் சாகடிப்பது என்பதுதான்! கிருஷ்ணகுமாரியும் இந்த முடிவுக்கு உடன்படுகிறாள்.

எனக்காக எத்தனை சண்டைகள் நடந்துவிட்டன? கேவலம் ஒரு பெண்ணுக்காக எவ்வளவு அநியாயம் செய்யத் தயாராயிருக்கிறார்கள் இவர்கள். எனக்காகப் பல ராஜ்ஜியங்களில் உள்ள பல்லாயிரம் மக்களும் நீங்களும் கஷ்டப்பட வேண்டியதில்லை. எனவே, இதில் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்று கூறுகிறாள் கிருஷ்ணகுமாரி. இதன் பின்னர் அவள் தாயே அவளுக்கு விஷம் கொடுக்கிறாள். முதல்முறை கொடுக்கும் விஷம் சரியாக வேலைசெய்யாததால் கிருஷ்ணகுமாரியின் உயிர் நீங்கவில்லை எனத் தெரிந்து மீண்டும் விஷம் தருகிறார்கள். இதுபோன்று மூன்று முறை தந்தும் விஷம் பலனளிக்காது போகவே நான்காவது முறையில் இன்னும் சற்று கடுமையான விஷத்தைத் தருகிறார்கள். இம்முறை இளவரசி கிருஷ்ணகுமாரி கண்களை மூடி பஞ்சணையில் ஆழ்ந்து மீளாத்துயிலில் மூழ்குகிறாள். இதை அறியும் ராணிக்கு துக்கம் தாளமுடியவில்லை. பெற்ற மகளல்லவா!
இவ்விதம் மகள் நினைவாகவே நான்கு நாட்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் வாழ்ந்து, ஐந்தாவது நாள் தன் உயிரையும் துறக்கிறாள் அவள்.

இத்தனை இழப்புக்குப் பிறகும் ராஜ்ஜியம் நிலைத்ததா என்றால் அதுதான் இல்லை. சீக்கிரமே மேவார் நகரில் பஞ்சம் ஏற்பட்டு நகரம் தன் பொலிவை இழக்கிறது. நாட்டு மக்கள் வெளிராஜ்ஜியங்களுக்கு ஓடுகிறார்கள். ஒரு பெண்ணைக் கொன்ற தோஷத்துக்கான சாபம் போல் ராஜபுதனமே அழியலாயிற்று. கி.பி. 1817-ல் மேவார் ராணா, ஆங்கிலேயப் பாதுகாப்புக்குள் தனது தேசம் அடங்குவதாகப் பத்திரங்களில் கையெழுத்திட, மேவார் தனது சுதந்திரத்தைக் கடைசியில் இழந்தது எனக் கதையை முடிக்கிறார் ஆசிரியர்.

இந்தக் கதை குமுதம் 18.10.2006. இதழில் 'ராஜகுமாரி' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இந்தக் கதையை எழுதியவர் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன் அவர்கள்.

இந்தக் கதையையே, இலக்கியச் சிந்தனையின் அக்டோபர் மாதத்தில் வெளிவந்த கதைகளில், சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இலக்கியச் சிந்தனையின் பாரதி அவர்களுக்கும், இவ்வளவு நேரம் என் உரையை செவிமடுத்த உங்களுக்கும் நன்றிகூறி
அமர்கிறேன்.

- சைதை முரளி.

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.