Tuesday, January 30, 2007

ஹே ராம்


'ஹே ராம், ஹே ராம், ஹே ராம்!' என்று கூறியவாறே இன்று காந்திஜி தன் இன்னுயிரை
நீத்த தினம்.

'உண்மைக்காக எதை வேண்டுமானாலும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் ஒருபோதும் உண்மையைத் துறக்கக் கூடாது' என்று கூறி அவ்விதமே வாழ்ந்தவர் மகாத்மா.

'செய் அல்லது செத்துமடி!' என்ற வீரவசனத்துக்கேற்ப வாழ்ந்து காட்டியவர்.

நினைவு தினத்திலும் பிறந்த தினத்திலும் மட்டுமல்ல, எந்நாளுமே நினைக்கும் அளவுக்கு பிறருக்காக வாழ்ந்தவர்.

இந்தப் புத்தாண்டின் வாழ்த்தாக, எழுத்தாளர்கள் சுபா எனக்கு(ம்) அனுப்பிய காந்திஜி ஓவியத்தைத் தாங்களும் கண்டு மகிழ இங்கு தந்துள்ளேன்.

Saturday, January 6, 2007

போகியும் பொங்கலும்...

விழாக்களுக்குப் பேர்போனது தமிழகம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்பது போல வருடம் முழுவதுமே ஏதாவதொரு விழா வந்து சென்றுகொண்டுதான் இருக்கும். இவ்விழாக்களில் வேடிக்கைகள் தென்பட்டாலும் அவற்றின் முக்கிய நோக்கம் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப வீடும் நாடும் பயன்பெறும் விதமாக அமைந்திருக்கும். நம் உள்ளங்களில் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யும் பொங்கலும் இவ்வித விழாக்களில் ஒன்று.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொங்கல், உழவர் சிறப்பினை எடுத்துரைக்கும் விழா. 'உழவர் விழா' என்றும் இவ்விழாவினை அழைப்பர். பிறர் வாழ்வில் வளம் பொங்க பாடுபடும் உழவர்கள், மற்றவர்களுக்கும் உதவிகளை வாரி வழங்கும் விழாவே பொங்கல்.

தைத் திங்கள் முதல்நாளில் இவ்விழா கொண்டாடப்பட்டாலும், அடுத்துவரும் இருநாட்களுமே தொடர்ந்து சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்

எனப் பாரதியார் பாடியுள்ளார். தத்தம் வாழ்வின் தேவைகளை மக்கள் தாமே தேடிக்கொள்ள வேண்டும் என்பது நியதி. அதுதான் முறையும்கூட. இதனையே மேற்கூறிய பாரதியாரின் பாடல் வரிகளும் உறுதி செய்கின்றன.

உழவுக்கு வந்தனையாக இருப்பவை எவை?

'நீரின்றி அமையாது உலகு' என்கிறது திருக்குறள். நீருக்கு மூலம் மேகம். அந்த மேகங்களுக்குத் தலைவன் இந்திரன். அந்த இந்திரனின் இன்னொரு பெயர் 'போகி'.

தமிழர்கள் செய்நன்றி மறவாதவர்கள். உழவு சிறக்க உறுதுணையாக விளங்கும் இந்திரனுக்கும், மறைமுகமாக 'போகி' என்ற பெயரிலே தைத் திங்களுக்கு முதல் நாளன்று கொண்டாடுகிறார்கள். வடநாட்டினர் இப்போகித் திருநாளன்று இந்திரனை நினைந்து வழிபடுபவர். எனவே, உழவர்தம் வந்தனைக்கு இந்திர வணக்கம் உரியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

என்கிறது உலகப் பொதுமறை. புறத் தூய்மைக்கு ஆதாரமாக விளங்கும் நீரேஅகத் தூய்மைக்கும் வழி வகுக்கிறது எனலாம். ஏனெனில், உள்ளமும் இதில் குளிர்கிறது அல்லவா! மழை இல்லையென்று மதி கலங்கி நிற்கும் மாந்தர்கள்தாம் எத்தனை பேர்? நீர் நம் புற அழுக்கைப் போக்குவது போல், மழை மனவேதனையைப் போக்குகிறது. நம் உள்ளத்திலுள்ள, வீட்டிலுள்ள, நாட்டிலுள்ள அக அழுக்குகளைக் களைவதே போகியாகக்கொண்டாடப்படுகிறது.

உழவுக்கு உற்ற தோழனாய் விளங்குபவன் கதிரவன். அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடும் விழாவே பொங்கல். ஆடியில் விதைவிதைத்து, கார்த்திகையில் 'கார்' நெல்லுக்குப் பிறகு பெறும் பயன் மார்கழியில் மகிழ்வூட்ட வரும். அவ்வாறு முதன்முதலாக வரும் அரிசியைக் கொண்டு, பொங்கலன்று கதிரவனுக்குப் பொங்கலிட்டு மகிழ்வர். அன்று விடியலில் எழுந்து குளித்து, வீட்டினைத் தூய்மை செய்து
மணலாலும், செங்கற் பொடியாலும் புதுமுறைக் கோலங்கள் அமைத்து, புத்தாடைகள் உடுத்தி, புத்தடுப்பு மூட்டி, புதுப்பானையில் பாலும் அரிசியும் இட்டுப் பொங்கலிடுவதுடன், உடன் பயிரிட்ட காய்கறிகளையும் உணவாக்கி அனைத்துக்கும் மூலகாரணனான பாஸ்கரனுக்கு முன் படைத்து பின் தாமும் உண்பர்.

உழவுக்கு வந்தனையாக விளங்குவதில் இந்திரனும் சூரியனும் மட்டுமா விளங்குகின்றனர்? செல்வம் என்ற பொருளுக்கு சிறப்பு சேர்க்கும் மாடும், அந்தச் செல்வத்தை உருவாக்கிய சக மனிதர்களும் அல்லவா இதில் பங்கு வகிக்கின்றனர்.

'மாடு' என்ற சொல்லுக்கே 'செல்வம்' என்ற பொருளுண்டு. உழவின் ஓர் அங்கமாக விளங்கும் மாடு, உழைப்புக்கும் பெயர் போனது. ஒருவரது கடின உழைப்பைக் குறிப்பிடும் போது, 'மாடு போல' உழைக்கிறான் எனக் குறிப்பிடுவார்கள். கடின உழைப்புக்கு அஞ்சாதவனை, செல்வத் திருமகள் தேடி வருவாள். இதனைத் திருக்குறள்,

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

எனக் குறிப்பிடுகிறது. உழைப்புக்கு அஞ்சாது உடன் உழைத்த அந்த மாட்டுக்கு மரியாதை செலுத்துமுகமாக, அவற்றை நன்கு குளிப்பாட்டி மாலையிட்டு, மணி கட்டி பொட்டிட்டு, பூ அலங்காரம் செய்வித்துப் பொங்கலும் படைத்துப் போற்றி, வீதியுலா வரும் காட்சியே 'மாட்டுப் பொங்கல்'.

மேலும், கிராமங்களில் 'ஏறு தழுவுதல்' எனப்படும் 'மஞ்சுவிரட்டு' விழாவும் இந்த மாட்டுப் பொங்கல் அன்றுதான் நடைபெறுகிறது. ஏறு தழுவும் காட்சி, பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், இதன்மூலம் அவனைக் கணவனாக அடைய இருப்பவளுக்கோ உளவியல் ரீதியிலான போராட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. இவ்விழாவில் காளையை அடக்கி வெற்றி மாலை சூடி, களம் கண்ட காளையாக அவன் வெற்றிவாகை சூடி வெளியே வரும்வரை, தலைவியின் தத்தளிப்பு ததியுறு மத்தில் சுழலும் ஆவியின் நிலையைப் போன்றது. இதில் இன்னொரு உட்பொருளும் ஆழ்ந்து நோக்கினால் புரிபடும். கடின உழைப்பில் பெறும் செல்வத்தைக் கட்டிக்காக்க வழி தெரியாமல் கண்டபடி செலவிட்டால் எவ்விதம் முன்னேறுவது?

'ஏறு தழுவுதல்' நமக்கு மறைமுகமாக ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. 'மாடு' என்றால் செல்வம் எனக் கண்டோம். செல்வத்தைப் போற்றி, அதனைக் கட்டி அடக்கியாளத் தெரியாதவனை, 'செல்வத் திருமகளும்' கைவிட்டுச் சென்றுவிடுவாள் என்பதையே 'மஞ்சுவிரட்டு' மறைமுகமாக வழிமொழிகிறது.

செல்வம் வேண்டுமென்பதற்காக ஓடியாடி உழைத்துவிட்டு, அதனைக் காக்கும் வகை தெரியாதவர்களை என்னவென்று சொல்லுவது? இதனையே வள்ளுவப் பெருந்தகையும்,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்ற உலகப் பொதுமறை மூலம் நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல் குறிப்பிடுகிறார்.

கடைசியாக, 'காணும் பொங்கல்'. காணும் பொங்கல் என்றால் பல்வேறு இடங்களுக்குச் சென்று கண்டுவருதல் என்பது இப்போதைய வழக்காக உள்ளது. தான் பெற்ற சந்தோஷத்தை மற்றவர்களும் பெற்றுள்ளனரா என அறியும்வகையாக வீட்டைவிட்டு வெளிவந்து வெளி உலகத்தாரிடம் 'உங்கள் வீட்டில் பால் பொங்கிற்றா?' எனக் கேட்பதுடன், உற்றார் உறவினர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உதவி செய்யும் முகமாகக் கொண்டாடும்
விழாவே 'காணும் பொங்கல்'. இந்நாளில், தம்முடன் ஒத்துழைத்த பணியாளர்களுக்குப் புத்தாடைகளும் அணிகலன்களும் கொடுத்து மகிழ்வதுடன், சாதி சமய வேறுபாடின்றி வறியவர்களுக்கும் உதவி மகிழ்வர். மேலும், உற்றார் உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து, உணவளித்து சிறப்பும் செய்து வழியனுப்புவதுடன், மணமான புது மணமக்களுக்கு நல்லதொரு விருந்தும் தந்து ஆடை அணிகலன்களையும் நல்குவர்.

பொங்கல் விழாவினை ஆதித்தனோடு பிணைப்பதற்கு பிறிதொரு காரணமும் உள்ளது. தென்திசை பயணம் மேற்கொள்ளும் ஆதவன் தனது பயணத்தை வடதிசை நோக்கி மாற்றிக்கொள்ளும் திருநாளையே பொங்கல் விழாவாகக் கொண்டாடுகின்றனர். ஆம். சூரியன் தென்திசையில் பயணம் மேற்கொண்டபோது இதுவரை தோற்றுவித்த வாடையை, வட திசையில் பயணம் மேற்கொள்ளும்போது மாற்றி, நம் வாழ்வில் இளந்தென்றலை வீசச்
செய்கிறான்.

தொடர்ந்து மழை என்றாலோ மனம் கலங்கும். தொடர்ந்து வெயில் என்றாலோ மனம் வாடும். பொதுவில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். இன்பமும் வாழ்வின் இயல்புதான். துன்பமும் வாழ்வின் இயல்புதான். ஒன்றில்லையேல் மற்றொன்று இல்லை. இவையிரண்டும் இல்லையேல் வாழ்வே இல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும், மனமிருந்தால் வாழ்க்கை சிறக்கும்.

Friday, January 5, 2007

ஆகம சாஸ்திரங்களில் நடனம்!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களுமே ஆகம சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி கட்டப்பட்டவைதாம். இந்த சாஸ்திர விதிகளில் கோயில் அமையவேண்டிய இடம், அவற்றின் அளவுகள், கட்டுவது தொடர்பான மற்றும் உருவங்களை அமைப்பது பற்றிய விதிகள், எவ்விதம் வணங்க வேண்டும் என்ற வழிமுறைகள் (பூஜை சடங்குகள் உட்பட), இசைப்பது, நாட்டியமாடுவது மற்றும் நாதஸ்வரம் வாசிப்பது வரையிலான விதிமுறைகள் அனைத்தும் அடங்கியுள்ளன.

நாட்டியம் ஆடுவதன் மூலம் பக்தியைச் செலுத்துதல் என்பது கோயில் சடங்குகளில் கட்டாய வழக்கமாகப் பின்பற்றப்பட்டுள்ளது. உச்சிக்காலப் பூஜையாகிய மதியவேளையில் நடத்தப்படும் வழிபாட்டில், 'தேவதாசிகள் நாட்டியமாடுதல்' என்பது நிகழ்த்தப்பட்டதாகக் காமிக ஆகமக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கோயில்களில் தேவரடியார்களாகிய தேவதாசிகள் இதற்கெனவே நியமிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில கோயில்களில் மத குருக்களாகிய புரோகிதர்களும் பக்கவாத்திய இசைக் கருவிகளுடன் இறைவன் முன்பு நடனமாடியதாகவும் செய்திகள் உண்டு.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஆழ்வார் திருநகரி கோயில்களில் பணியாற்றும் 'அரையர்'களின் சேவையும் மேற்குறிப்பிட்ட சேவையைப் போன்றதுதான். சுருங்கச் சொன்னால் - 'அரையர்கள்' இசை நாட்டியர்கள். நாட்டியங்களை இசையுடன் ஆடுவார்கள். சுசீந்திரம் கோவிலில் ஆடப்படும் 'தாண்டவமூர்த்தி நடனம்' குறிப்பிடத்தக்க முக்கிய நடனமாகும்.

பல்லக்குத் தூக்கிகள் நாதஸ்வர இசையுடன் இணைந்து உற்சவமூர்த்தியைத் தூக்கிக்கொண்டு ஆடும் நடனமே 'தாண்டவமூர்த்தி நடனம்'. இந்நடனத்தைப் போன்றே சிறப்பானதொரு நடனத்தைத் திருவாரூர் கோயிலில் கொடியேற்று விழாவின்போது நிகழ்த்துவர். அந்நடனத்துக்கு 'அஜபா நடனம்' என்று பெயர்.

நித்யோத்ஸவம் எனப்படும் தினசரி வழிபாடு மற்றும் மஹோத்ஸவம் அல்லது பிரம்மோத்ஸவம் எனப்படும் பெரிய அளவிலான ஆண்டு வழிபாடு அனைத்துக் கோயில்களிலுமே நடத்தப்பட்டு வருகிறது. இசை மற்றும் நடனம் இவ்விழாக்களின் ஒரு பகுதியாக உள்ளது.

'ஸ்ரீபிரஷ்ண சம்ஹிதை'யில் 'நவசந்தி சடங்கு' என்ற வழிபாட்டுச் சடங்கு ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்பது சந்திகளில் இருக்கும் மூர்த்திகளான பிரம்மா, இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகியோரை வழிபடும் முறையே 'நவசந்தி சடங்கு'. இச்சடங்கு கொடியேற்று விழாவின்போது நடத்தப்படும்.

அதன்பின்னர் தேவாரப் பாசுரங்கள் மற்றும் சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் பாடப்படும். முடிவாக நடனம் நிகழ்த்தப்படும். 'கவுத்துவம்' என்கிற நடனத்துக்கென்றே தமிழில் இயற்றப்பட்ட பாடல்களான 'நவசந்தி கவுத்துவம்' என்கிற பாடல்கள் நடனத்துடன் நிகழ்த்தப்பெறும்.

இப்பாடல்களில் இறைவனை எப்படி வணங்கவேண்டும் என்பதோடு எந்த ராகத்தில், எந்தத் தாளத்தில் அப்பாடலைப் பாடவேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன. இப்பாடல்கள் 'ஜதி'யோடு தொடங்கி, அதனைத் தொடர்ந்து பாடகர்களால் சாஹித்யம் செய்யப்பெற்று முடிவாக மீண்டும் ஜதியிலேயே நடனம் முடியும். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 'பத்ராசலம் கோயில்' மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 'செய்யூர் கோயில்' போன்றவை பழைய மரபுகளைக் கடைப்பிடித்துவரும் கோயில்களில் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன.

நவசந்தி கவுத்துவம் முடிந்த பின்னர், சில குறிப்பிட்ட பண்களால் 'புஷ்பாஞ்சலி' தேவதாசிகளால் நிகழ்த்தப்பெறும். அதன்பிறகு, 'புஜங்க நிருத்யம்' எனப்படும் தலைப்பிலான முக்கிய நாட்டியம் நிகழ்த்தப்படும்.

நவசந்தி வழிபாட்டுச் சடங்கில் மிக முக்கியமானது - சர்வ வாத்தியங்களையும் இசைப்பதுதான். இந்த சர்வ வாத்தியத்தில் பல்வேறு வகையான இசைக்கருவிகள் இசைக்கப்பெறும். பாஞ்சராத்ர ஆகமத்தையொட்டி விழா நடைபெறும் வைஷ்ணவக் கோயில்களில், பூஜைகளுக்குப் பின்னர் இவ்விழா தொடங்கும். அவ்வாறு தொடங்கும் விழா நான்கு மணி நேரங்களுக்கு மேல் நீடிக்கும்.

கொடியேற்று விழாவில் தேவதாசிகளால் 'புஷ்பாஞ்சலி' நடத்தப்பெறும். அதன்பின்னர் தேவார, திருவாசக, திருப்பல்லாண்டு பாசுரங்களை ஓதுவார்கள் ஓதுவர். பிறகு நிருத்யத்தினைத் தொடர்ந்து, நந்திகேஸ்வர வாத்தியம் எனப்படும் மிருதங்கம் மற்றும் பிரும்மதாளம் நிகழ்த்தப்பெறும்.

அதன்பிறகு, இலக்கியப் பாடல் வகைகளான சூர்ணிகா, அஷ்டகம், வெண்பா, கலித்தொகை, விருத்த வடிவங்களான அம்மானை, வண்ணம் மற்றும் உலா பாடல்களைத் தொடர்ந்து இசை வடிவங்களான கீதம், வர்ணம், கீர்த்தனம், கிருதி, பாடம் மற்றும் தில்லானா ஆகியவை இசைக்கப்பெறும். அதன்பின்னர், பல்வேறு இசைக்கருவிகளான திருச்சின்னன், முரளி (புல்லாங்குழல்), முகவீணை, தகோர வாத்தியம், மல்லாரி, தங்கா, கஞ்ச், மவூரி, புஜங்கேஸ்வரா போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்பெறும்.

'புஜங்க நிருத்யம்' நாட்டிய வகைகளில் மிக முக்கியமானதாகும். தேர்த்திருவிழாவின்போது தேர் நிற்கும் குறுக்குத் தெருக்களில் நாதஸ்வரக் குழுவினர் வாசிக்க, தேவதாசிகள் நடனமாடுவர். தேர் கோயிலுக்கு வந்தபின்னர், தேவதாசிகள் - லாலி, நலங்கு மற்றும் ஊஞ்சல் பாடல்களைப் பாடுவர்.

கோயில் விழாக்களில் நாதஸ்வரத்துக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. விழாக்களில் சுவாமியைப் பல்லக்குத் தூக்கிகள் தூக்கிக்கொண்டு செல்ல, நாதஸ்வரக் குழுவினர் நாதஸ்வரம் வாசிக்க, தேவதாசிகள் முக்கியத் தெருக்களில் மற்றும் தெருச் சந்திகளில் சிலவகை நடனங்களை ஆடுவார்கள். நாதஸ்வரத்துக்குப் பக்கவாத்தியமாக தவில் வித்வான் தவில் வாசிப்பார். இந்தத் தவில் வித்வான், சுவாமியைப் பல்லக்குத் தூக்கிகள் தூக்கப்
போகிறார்கள் என்பதைப் பக்தர்களுக்கு உணர்த்த, 'அலரிப்பூ' என்ற ஒருவகை இசையை வாசிப்பார். இதன்மூலம் சுவாமி கிளம்பத் தயாராகிவிட்டார் என பக்தர்கள் அறிந்துகொள்வர்.

கோயில் விழாக்கள் ஆரம்பிக்கும் முன்னர், 'திக்பந்தனம்' எனப்படும் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இச்சடங்கு பல்வேறு திக்குகளிலும் உள்ள தெய்வங்களைச் சாந்தி செய்வதற்காக நடத்தப்படுவதுடன், ராக, தாள மற்றும் நாட்டிய சமர்ப்பணங்களும் ஒவ்வொரு தெய்வத்துக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது.

நவசந்தி கவுத்துவம் என்பது சொல்லுக் கட்டுகள், ஜதிகள் என்கிற சிறப்பான தாளங்கள் மற்றும் சாஹித்தியங்கள் ஆகியவற்றின் கூட்டுக் கலவையே என 'பரதார்ணவம்' தெரிவிப்பதுடன், இதில் 'க' என்பது வெள்ளையையும், 'யு' என்பது சிவப்பையும் மற்றும் 'த' என்பது கறுப்பையும் குறிப்பதுடன், இந்த அசைகள் முறையே சரஸ்வதி, மஹாலக்ஷ்மி மற்றும் பார்வதியைக் குறிப்பதாகவும் பரதார்ணவம் மேலும் தெரிவிக்கிறது.

ஓர் எடுத்துக்காட்டு கூறவேண்டுமெனில், ஸ்ரீபிரஷ்ண சம்ஹிதை - கருட வழிபாட்டை, திரிபுட தாளம், மத்யம ஸ்வரம், கெளட ராகம் மற்றும் விஷ்ணு கிரந்தம் எனப்படும் நிருத்தத்தின் மூலம்தான் வழிபடவேண்டும் எனக் கூறுகிறது. எனவேதான் தாள, ஸ்வர, ராக மற்றும் நிருத்த வடிவங்கள் நாட்டிய சாத்திரங்களில் முக்கியமாக விளக்கப்படுகின்றது.

வீதியுலா செல்லும் உற்சவமூர்த்தியை இசை மற்றும் நடனக் குழுவைச் சேர்ந்தவர்கள் எவ்விதம் ஒழுங்குமுறையோடு தொடர வேண்டும் என்பதை 'தெப்தாகமத்தின்' 91-வது அத்தியாயம் விவரிக்கிறது. இதன்படி, மிருதங்கம் மற்றும் வாத்தியங்கள் வாசிப்பவர்கள் முன்செல்ல, நடனமாடுபவர்கள் மற்றும் மத்தளம் வாசிப்பவர்கள் தெருவின் இடதுபுறமும், புல்லாங்குழல் வாசிப்பவர் மற்றும் மற்ற இசைக்கலைஞர்கள் தெருவின் வலதுபுறமும் செல்ல, ஆகமங்களில் 'ருத்ர கனிகா' எனக் கூறப்படும் தேவதாசிகள் தெருவின் இருபுறங்களிலும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வரவேண்டுமென அந்த ஆகமம் தெரிவிக்கிறது.

காந்தாரவம் என்று அறியப்படுகின்ற காந்த ராகத்தால் பிரம்மாவை வழிபடவேண்டும் என ஸ்ரீபிரஷ்ண சம்ஹிதை குறிப்பிடுகிறது. 'துருவ தாளத்தின் ஒருவகையாகிய 'நாட்டிய தண்டி', துருவ தாளத்தாலும் கமல நிருத்தத்தாலும் பிரும்மாவை வழிபட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. இந்நிருத்தம் நாட்டிய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இந்நிருத்தத்தில் வலது கையில் ஹம்சஸ்ய முத்திரையும், இடது கையில் கச்சுரா முத்திரையும்
பயன்படுத்தப்படுகிறது.

ஹம்சஸ்ய முத்திரை என்பது நடுவிரல், மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொட்டுக்கொள்ளாமல் காண்பிக்கப்படும் அபிநயமாகும். சுட்டுவிரல் மற்றும் கட்டைவிரல் இணைத்துக் காட்டப்படும் முத்திரை கச்சுரா. இம்முத்திரை குறித்து நிருத்த ரத்னாவளியிலும் சங்கீத ரத்னாகரத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது.

கச்சுரா முத்திரையில் சுட்டுவிரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்க, சுண்டுவிரல் மட்டும் வெளியில் தெரியுமாறு அபிநயம் பிடிப்பதுடன், கட்டைவிரலானது சுட்டுவிரலின் அடிப்பாகத்தைத் தொடுமாறு அபிநயம் காட்டவேண்டும்.

'சங்கீத தர்ப்பணம - சாம தாளம், நாட்டை ராகம் மற்றும் நாட்டிய சாத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள லலிதா நிருத்தத்தினால் தேவர்களின் தலைவனான இந்திரனை வழிபட வேண்டும் எனக் கூறுகிறது. இந்திரனுக்குரிய முத்திரை பாடகா என்று கூறும் பரதார்ணவம், இம்முத்திரை ஸ்வஸ்திக் குறியீடு போன்று காட்டப்படும் என்றும் கூறுகிறது.

நெருப்புக் கடவுளான அக்னிக்குரிய தாளம் அட, ராகம் கெளரி, நிருத்தம் சர்வதோபத்ரா. நாட்டிய நூல்களில் மேற்குறிப்பிட்ட நிருத்தம் குறிப்பிடப்படவில்லை. வலது கையில் திரிபாடகமும், இடது கையில் கங்குலமும் தாங்கிய முத்திரை - சர்வதோபத்ரா நிருத்தத்தைத்
தோற்றுவிக்கின்றது. இம்முத்திரையில் காட்டப்படும் தாழம்பூ மலர் மற்றும் நெருப்பு ஆகியவை அக்னிக் கடவுளை நினைவுறுத்துகின்றன.

இறப்புக்குரிய கடவுளான யமன் - மங்களா அல்லது ஜெயமங்களா தாளத்தாலும், தேசிக அல்லது தேஷாக்க்ஷி ராகத்தாலும், சர்வதோபத்ரா நிருத்தத்தாலும் வழிபடப்பெறுகிறார்.

தென்மேற்கு திசைக்குரிய கடவுளான நிருதி - ஜெய தாளம், தேஷாக்க்ஷி ராகம் மற்றும் புஜங்கத்ரஸ நிருத்தத்தால் வணங்கப்பெறுகிறார்.

மேற்கு திசைக்குரிய கடவுளான வருணன் - பத்ர தாளம், நாட்டை ராகம் மற்றும் கமல நிருத்தத்தால் வழிபடப் பெறுகிறார். இக்கமல நிருத்தம் நாட்டிய நூல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும், பரதார்ணவத்தில் குஞ்சித நிருத்தத்துக்கு அடுத்ததாக உள்ளதாகக் கருதப்படுகிறது. குஞ்சிதத் தாண்டவம் இந்நிருத்தத்தில் அடங்கும். குஞ்சிதத் தாண்டவத்தில் முன்பாதங்கள் தரையில் பதிந்திருக்க, குதிகால்கள் உயர்ந்திருக்கும்.

காற்றுக்குரிய கடவுளான வாயு - ஜம்ப தாளம், ஸ்ரீ ராகம் மற்றும் பிருஷ்ட குட்டினம் எனும் நிருத்தத்தால் வணங்கப்படுகிறார். இந்த நிருத்தத்தில் இடது கையில் அர்த்த பாடக முத்திரையும், வலது கையில் ஆராள முத்திரையும் காண்பிக்கப்பெறும்.

வடக்கு திக்கிற்கு அதிபதியான குபேரன் - ஆனந்த தாளம், நாட்டை நாராயணி மற்றும் மது மாதவி ராகத்துக்குப் பிறந்த புத்திர ராகமான மோகன ராகம் மற்றும் சுக்ர மண்டலம் எனப்படும் மண்டல நிருத்தத்தின் மூலம் வணங்கப்படுகிறார். குபேரனின் நெருங்கிய நண்பரான சிவனுக்கும் இந்த நடனம் உரியதாகும்.

நவசந்தி கவுத்துவம் நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்கள் குறித்து ஆகமத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இப்பாடல்களை யார் இயற்றினர் என்பதும் தெரியவராததோடு, ஸ்ரீ கிட்டப்பா மற்றும் ஸ்ரீ சிவானந்தம் வசமிருந்த இப்பாடல்களின் கையெழுத்துப் பிரதிகளை, முன்னர் குறிப்பிட்ட தஞ்சை நால்வரணி பரம்பரையைச் சேர்ந்தவர்கள் - பொன்னையா, சின்னய்யா, சிவானந்தம் மற்றும் வடிவேலு - பத்திரப்படுத்தி
வைத்துள்ளனர்.

பதினான்கு பாடல்களில் ஐந்து 'பஞ்சமூர்த்தி கவுத்துவம்' பாடல்கள் - பஞ்சமூர்த்திகளான கணேசர், சுப்பிரமணியர், திருஞான சம்பந்தர், சண்டிகேஸ்வரர் மற்றும் நடராஜர் ஆகிய தெய்வங்களைப் புகழ்வதாக உள்ளது. பஞ்சமூர்த்தி கவுத்துவமில் கர்நாடகக் கான ராகங்களான நாட்டை, கெளலா, ஆரபி, ஸ்ரீ, வராளி ஆகிய ராகங்களில் (ஸ்வர மற்றும் சாஹித்தியங்களுடன்) பாடல்கள் இசைக்கப்பெறுகின்றன.

இந்த ஐந்து பாடல்களையும், சிதம்பரத்தில் திருவாதிரைத் திருவிழாவில் - தேவதாசிகள் நடனமாட இசைப்பர். மற்ற ஒன்பதான 'நவசந்தி கவுத்துவம்' பிரம்மாவை நடுநாயகமாகக் கொண்டு மற்ற திக்குகளிலுள்ள தெய்வங்களைப் புகழ்வது. இப்பாடல்கள் சொல்லுக்கட்டு எனப்படும் ஜதி மற்றும் சாஹித்தியங்களின் வழியே இறைவன் அல்லது அடியார்களைப் புகழ்வனவாக உள்ளன.


ஆண்டுக்கொரு முறை நடக்கும் பிரம்மோத்ஸவ அல்லது மஹோத்ஸவ விழா வெற்றிகரமாக நடக்க அஷ்டதிக்குப் பாலகர்களுக்கு இடையில் பிரும்மாவை நடுநாயகமாக வைத்து வழிபடும் 'நவசந்தி கவுத்துவம்' - ஜதியில் தொடங்கி, ஜதியிலேயே முடிவுறும். பாடல்கள் - ஆரோஹண, அவரோஹண வடிவில் ராக தாளங்களுடன் வழங்கப்பெறும்.

Thursday, January 4, 2007

இசை சம்பந்தமாக...

பாகவத மேளம்!

இக்கட்டுரையும், இனி வெளியிட இருக்கும் கட்டுரையான 'ஆகம சாஸ்திரங்களில் நடனம்' என்ற கட்டுரையும் Bharatanatyam: The Tamil Heritage என்ற நூலிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு முறையே புதிய பார்வை மற்றும் ஓம் சக்தி மாத இதழ்களில் வெளியானவை. இனி கட்டுரைக்குள் செல்வோம்.

'யக்ஞ கானம்' என்பது தஞ்சை நாயக்க மன்னர்களின் அரசவையில் இலக்கிய அமைப்பில் இசைக்கப்பட்ட ஒரு வடிவம். பின்னாளில் நாடகமாக நடத்துவதற்கேற்ப உண்மையிலேயே இசை வடிவமாக இயக்கப்பெற்ற திருஷ்ய காவியமாக விரிவாக்கப்பட்டு, பாகவத மேளா நாடகமாக உருவாகியது. பாகவதப் பரம்பரையில் வந்தவர்கள் இதைத் தொடர்ந்து நாட்டிய நாடகமாக அரங்கேற்றியதால் 'பாகவத மேளா நாடகம்' என அழைக்கப்பெற்றது.

நாடகக் கலையை வளர்ப்பதெற்கென்றே அச்யுதப்ப நாயக்கரால் ஐநூறு பிராம்மணர்களுக்கு (பாகவதர்கள்) கிராமம் ஒன்ற வழங்கப்பட, அது அச்யுதபுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அப்போதிருந்தே மே மாத மத்தியில் வரும் நரசிம்ம ஜெயந்திக்கு ஒவ்வொரு வருடமும் இந்த பாகவதப் பரம்பரையில் வழிவழியாக வந்தவர்கள் நாட்டிய நாடக விழாக்களை வரதராஜப் பெருமாள் கோயிலின் முன்பு நடத்தி வந்தனர்.

முதலில் நாயக்கர்களாலும், பின்னர் மராட்டிய மன்னர்களாலும் ஊக்குவிக்கப்பட்டு தஞ்சை மாவட்ட கிராமங்களுக்கும் பரவிய இந்த 'பாகவத மேளா நாடக மரபு' பழைமையானது. இந்நாடகத்தைச் சமீபகாலம் வரை தவறாமல் மெலட்டூர் வெங்கட்ராம சாஸ்திரியும் மற்றும் அவரது குடும்பத்தாரும் நடத்தி வந்தனர். பாகவத மேளா நாடகக் களஞ்சியம் - சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலத்தைச் சேர்ந்த கலைஞர்களாலும் விரிவாக்கப்பட்டு வளமூட்டப்பட்டது.

தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டபோது, உயர்தர நாட்டியம் ஆடிவந்த நால்வர் அணி (பொன்னையா, சின்னய்யா, சிவானந்தம் மற்றும் வடிவேலு) இந்தப் பாகவத மேளா நாட்டிய நாடகத்தைச் சிறப்பாக நடத்த முயற்சி செய்து பார்த்தது. எனினும், பாகவதர்கள் வழங்கும் நாடக அமைப்புதான் பொருத்தமாகவும் இயற்கையாகவும் அமைந்தது. பாகவத மேளா நாடகத்தில் பெண்கள் வேடத்தைக்கூட, பிராம்மண குலத்தைச் சேர்ந்த ஆண்களும் இளம் சிறார்களுமே ஏற்று நடித்த காரணத்தால் 'பாகவத மேளம்' என்ற சிறப்புப் பட்டத்தைப் (நட்டுவனார் மற்றும் தேவதாசி சமூகங்கள் 'நட்டுவ மேளம்' எனப் பெற்றமைக்குப் போட்டி போன்று) பெற்றது.

பாகவத மேளத்தின் கட்டமைப்பானது நாராயண தீர்த்தர் இயற்றிய 'கிருஷ்ணலீலா தரங்கிணி'யிலிருந்து பெறப்பட்டிருக்கவேண்டும் எனக் கருதப்படுகிறது. நாராயண தீர்த்தரும், ஆந்திர தேசத்தைச் சேர்ந்த சித்தேந்திர யோகியும் (குச்சிப்புடியில் 'பாமகலாபம்' என்ற நாட்டிய வகையால்
ஈர்க்கப்பட்டவர்) சேர்ந்து இந்த 'பாகவத மேளா' நாட்டிய நாடக மரபை தென்னிந்தியாவில் வளர்ச்சியுறச் செய்திருக்கவேண்டும்.

பாகவத மேளா நாட்டிய நாடகக் களஞ்சியத்தின் நடுப்பகுதியில் பிரகலாத சரித்திரம், மார்க்கண்டேய உஷா பரணீயம், ருக்மாங்கத கோலாபம், சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், துருவ சரித்திரம், கம்ச வதம், அரிச்சந்திரா மற்றும் பாணாசுரவதம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. பரத நாட்டியத்துடன் சேர்ந்த நிருத்தத்தில் - அடவு, ஜதிகள் மற்றும் தீர்மானங்களைக் கொண்டு இசைக்குறிப்புகளுக்கு ஏற்றாற்போல உணர்ச்சிப்பூர்வமாக
வெளிப்படுத்தும் அபிநய அசைவுகளையும் அங்கமாகக் கொண்டது பாகவத மேளம்.

பாகவத மேளத்தில் வாசிக அபிநயமும் (நான்கு அபிநய வகைகளில் ஒன்று) தேவைப்பட்ட சூழலில் பயன்படுத்தப்பட்டது. பெண் பாத்திரமேற்பவர்கள் பரத நாட்டிய கலைஞர்களைப் போன்று உடையணிந்து, தஞ்சையில் மராட்டிய அரசவையில் பாகவத மேளாவில் பங்கேற்றனர். கேரளாவிலும் இந்த பாகவத மேளா நாட்டிய நாடகங்கள் நள்ளிரவில் ஆரம்பிக்கப்பட்டு, காலையில் சூரிய உதயத்துக்கு முன்புவரை கோவிலின் முன்பு சிறப்பாக
வேயப்பட்ட கூரை வீட்டில் தொடர்ந்து நடக்கும். உண்மையான பக்தி அர்ப்பணிப்போடு நடத்தப்பட்டு வந்த இந்நாடகங்களின் முக்கியத்துவம் இப்போது அருகி வருகின்றது.

இசை சம்பந்தமாக...

வர்ணமெட்டு

இன்றைய வர்ணமெட்டுக்கு முன்னோடி நாட்டுப் பாடல்கள், நாடோ டிப் பாடல்கள் ஆகியவற்றின் நிரந்தரமான வர்ணமெட்டுதான். நாகரீகமும் பண்பாடும் வளர்ச்சியுற்றாலும் வர்ணமெட்டுகளின் ஜீவநாடியே நாட்டுப் பாடல்களின் பண்கள்தாம். இந்த முறையில்தான் தேவாரங்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒரே மெட்டு. ஒரே தாளம். ஆனால், ஸாஹித்யங்கள் வேறு. இதே முறையில் திருமுறையும் ஒரே மெட்டில் ஓதப்படுகிறது.

இதே அடிப்படையில் நாமாவளிகளும் ஒலிக்கப்படுகின்றன. பழங்காலத்தில் கதைப் பாட்டுகள், நாடகப் பாடல்கள் ஆகியவை அடங்கிய புத்தகங்களில் ஒரு முக்கியப் பாடலின் பெயர் குறிப்பிடப்பட்டு 'இந்தப் பாட்டின் வர்ணமெட்டில் பாடவும்' என்று எழுதியிருப்பதைக் காணலாம். வர்ணமெட்டு என்பது ஒரு திட்டம். அதாவது ஒரு வரைபடம் போல. இயற்றுபவர்களின் மனத்தில் எழும் உணர்ச்சியைப் பொறுத்து வர்ணமெட்டு அமையும். ஆயினும் ஒரு தேர்ந்த இசைக் கலைஞரின் திறமையால் 'வரைபடமாக' இருந்த வர்ணமெட்டு, மெருகூட்டப்பட்டு, அழகூட்டப்பட்டு பொலிவுடன் மிளிரும்.

இன்று நிலவிவரும் அத்தனை பாடல்களும், காலங்காலமாகப் பாடிவரும் இசைக் கலைஞர்களின் தனித்தன்மை கொண்ட இசையாற்றலின் பயனால் மெருகேற்றப்பட்டு மிளிர்கின்றன என்பதுதான் உண்மை. தியாகராஜரும், முத்துஸ்வாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரிகளும் தங்கள் பாடல்களை இன்றைய வித்வான்கள் பாடுவதுபோல் பாடியிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்கள் பக்திப் பரவசத்தில் பாடினார்கள். பாடலின் ஒவ்வொரு
வரியையும் விதவிதமான சங்கதிகளில் பாடி, தங்களுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தி, மற்றவர்களின் பாராட்டுதலைப் பெறவேண்டிய தேவை ஏற்படவே இல்லை. இப்படிப் பக்திப் பரவசத்தில் பாடியபொழுதும்கூட இயற்கையாக அமைந்த ராகத்தின் உணர்ச்சி பாவமாக வெளிப்பட்ட வர்ணமெட்டுகள், வெவ்வேறு இசைப் புலவர்களால் இயற்றப்பட்டும்கூட ஏறக்குறைய ஒரே திட்ட வரையறைக்குள் அமைந்துள்ளன.

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.