Sunday, March 25, 2007

உடம்பு கூறுவதையும் கேளுங்கள்!

'ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். அதற்கு முன்னாலே வா, வா, வா வா!'
என்பது காதலியை அழைக்கும் அக்கால பழைய திரைப்பாடல்களில் பிரபல்யமான
பாடல். அந்தப் பாடல் இக்காலத்துக்கும் பொருந்துவதாகத்தான் உள்ளது.

வயது ஏற ஏற, வாலிபம் தேய்கிறது. பலவித உடல் உபாதைகள் நம்முள்ளே தோன்றுகின்றன. நோய்கள் என்று நம் உடலில் வந்துவிட்டாலே, என்றும் வாலிபமாக
இருக்கவேண்டும் என்ற வைராக்கியமும் நம் எல்லோருக்கும் தவிர்க்கமுடியாமல் எழுகிறது. இவற்றுக்கு நிரந்தர அடைக்கலம் கொடுத்து தங்கவைப்பதும் நாம்தான். வந்த இந்த நோய்களை, விருந்தினரைப் போல விடைகொடுத்து அனுப்பிவைப்பதும் நாம்தான்.

'என்றும் நோய் நொடியில்லாமல் வாழத்தான் நான் ஆசைப்படுகிறேன். அதற்கான
வழிவகைகள்தான் எனக்குத் தெரியவில்லை. எனது இந்த ஆசை செயல்வடிவம் பெறுவது
சாத்தியமா? இதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என்ற பதில் தெரியாத கேள்வி, சிலசமயம் உங்களுக்குள் தோன்றி மறையலாம்.

இப்படியொரு கேள்வி உங்கள் மனத்தில் எழும்பட்சத்தில் நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! அது வேறொன்றுமில்லை. உங்களைப்
பற்றிய, உங்கள் உடல்நிலையைப் பற்றிய தெளிவான அறிவு உங்களிடம் உள்ளதா என
எண்ணிப் பாருங்கள். அப்படி எண்ணிப் பார்க்கத் துணிந்தால், நீங்கள் நோய் நொடியில்லாமல் என்றும் மார்க்கண்டேயனாக இருப்பதும் சாத்தியம்தான்.

அதாவது, உடல்நிலை சரியில்லை என்று நீங்கள் டாக்டரிடம் செல்கிறீர்கள். உங்களைப் பரிசோதிக்கும் டாக்டர் நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள், பரம்பரை வியாதி எதாவது உங்களுக்கு உண்டா என்று உங்களிடமே விசாரித்தபிறகுதான், அதற்குரிய மருந்து மாத்திரைகளை எழுதித் தருகிறார். இதற்கு வேலையே வைக்காமல், உங்கள் உடம்பு என்ன சொல்கிறது என்பதை மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனிக்கத் தொடங்கினாலே போதும். அது எந்தப் பொருள்களை ஏற்றுக்கொள்கிறது. எந்தப் பொருள்களை ஏற்காமல் தவிர்க்கிறது என்கிற விஷயத்தை
மட்டும் கவனிக்கத் தொடங்கினால் போதும். உடல் நோய்கள் வருவதை பெருமளவில்
குறைக்க முடியும். உங்கள் உடல்மேல் பிரியம் செலுத்துபவர் உங்களைவிட உலகத்தில் வேறுயார் இருக்கப் போகிறார்கள்?

'இந்த அவசர யுகத்தில் இது குறித்தெல்லாம் சிந்திப்பதற்கு எங்கே சார் நேரம் இருக்கிறது? ஏதோ கிடைச்சதைச் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டினோமான்னு பார்ப்பீங்களா? அதை விட்டுட்டு, உங்கள் உடல்நிலையைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கான்னு சும்மா கேள்வி
கேட்டுக்கிட்டு' என்று அங்கலாய்க்கத் தோன்றுகிறதா?

நீங்கள் நினைப்பதொன்றும் தவறே இல்லை. அதற்குக் காரணம், இப்போது நிலவும்
அவசர யுகம்தான். எங்கும் அவசரம், எதிலும் அவசரம்! நிதானமே, நிதானத்தை
இழந்துவிட்டிருக்கும் யுகம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரையில் எல்லா வேலைகளுமே அவசர கதியில்தான். இந்நிலையில் தன் உடம்பைப் பற்றி எண்ணிப் பார்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

நம் உடலில் நோய்கள் வந்து குடியேற இந்த அவசர கதியிலான மனநிலை முக்கியக்
காரணமெனில், முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. கண்டது கற்கப் பண்டிதனாகலாம். ஆனால், கண்டமேனிக்குப் பு(ரு)சித்தால் வந்திடும் ரோகம். இதில் குறிப்பிட்ட ஒரு வயது வரை வேண்டுமெனில், உடல் கண்டதையும் ருசிப்பதை ஏற்கலாம். ஆனால், வயது ஏற ஏற - குறிப்பாக, நாற்பது வயதை நெருங்குகையில் - உடல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும்.

எனவேதான், நீங்கள் உங்கள் உடலுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை அறிவது அவசியம். ஏனெனில், வயது ஏற ஏற, உடல் தன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. ஜீரண உறுப்புகளின் சக்தி குறைய ஆரம்பிக்கும். உணவை, நம் உடல் ஏற்கும் ஏற்புத்திறனும் படிப்படியாக சுருங்க ஆரம்பிக்கும்.

எனவே இக்கால கட்டங்களில் மட்டும்தான் என்றில்லாமல், எப்பொழுதுமே நேரத்துக்குச் சாப்பிடுவது என்பதை உங்கள் வழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுங்கள். ருசிக்குச் சாப்பிடலாம். ஆனால், அதே சமயம் அந்த ருசி நமக்குத் தொந்தரவாக ஆரம்பிக்கிறதென்றால், தயவுசெய்து அதைப் படிப்படியாகக் குறைக்கப் பாருங்கள்.

இக்காலகட்டங்களில், எண்ணெய்ப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதை படிப்படியாகக் குறைக்கப் பாருங்கள். அதேபோன்று கிழங்கு வகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வாருங்கள். வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, சமோசா - இதெல்லாம் சாப்பிடாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? என்று பிறர் தூண்டலாம் அல்லது உங்கள் மனமே ஆசைப்படலாம். இப்படிப்பட்டவர்கள், ஆவியில் வேகவைத்த உணவுப்பொருள்களை உண்ணலாம். எளிதில் ஜீரணமாவதுடன் உடல்சக்தியையும் விரைவில் பெறலாம். மேலும், கீரை வகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கலில் இருந்தும் விடுதலை கிடைக்கும். கீரை வகைகள் உடலுக்கு
ஒத்துக்கொள்ளாதவர்கள் இரவில் கனிவகைகளை உணவுடன் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலைப் பெருமளவு குறைக்க உதவும். எதையும் அளவோடு உண்ணுங்கள்.

சிலருக்குக் காபி குடிக்கவில்லையெனில் வேலையே ஓடாது என்பார்கள். வாஸ்தவம்தான். ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம் என உங்கள் உடம்பே சொல்லிவிடும். அந்த அளவு மட்டுமே அருந்திவந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அளவைத் தாண்டுகையில், உடலில் நெஞ்செரிச்சல் தோன்றி சமயங்களில் நம்மை எச்சரிக்கும். அதையும் மீறினால், வாந்தி எடுத்துதான் சாந்தி அடையவேண்டியிருக்கும். இருப்பினும் அந்த வாந்தியின் தாக்கமே, மீண்டும் மறுபடி மறுபடி வாந்தியை வரவழைக்கத் தூண்டுமாதலால், காபியையும் அளவோடு குடியுங்கள். காபி அளவுக்கதிகமாகக் குடிப்பது நம் உடலில் பித்தத்தைத்
தூண்டும். இந்த பித்தத்தைப் போக்க சில வீடுகளில் இஞ்சி சுரசம் வைத்தும் குடிப்பார்கள்.

சிலர், சில உணவுவகைகளைச் சாப்பிடுவதையே ஒவ்வாமையாகக் கருதுவார்கள். அவர்கள் அப்பொருள்களைச் சாப்பிடாமல் தவிர்த்தாலே போதும். பிரச்னைகள் வராது தடுக்கலாம். இதற்கு உதாரணமாக, மசாலாப் பொருள் கலந்த உணவு வகைகளைக் குறிப்பிடலாம்.

உடல் பலம்பெற விரும்புபவர்கள், கொண்டைக்கடலையை இரவில் நன்கு ஊறவைத்து,
அதை தினமும் அதிகாலையில் சாப்பிட்டுவிட்டு நடைபயின்று வந்தால் உடல் பலம் பெறும் என்பார்கள். இதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இதை அவசியம் நீங்கள் கடைப்பிடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் பாகற்காயைச் சேர்த்துக்கொண்டால், சர்க்கரை வியாதியிலிருந்து விரைவில் விடுதலை பெறலாம் எனக்கூறக் கேட்டிருப்பீர்கள். அதேபோன்று, ஒரு சிட்டிகை அளவு நாகற்பழ பொடியை (நாட்டு
மருந்துக்கடைகளில் கிடைக்கும்) காலையில் வெறும்வயிற்றில் பொடிசெய்து நீருடன் கலந்து சாப்பிட்டால், சர்க்கரை வியாதி மட்டுப்படும் என்று கூறுகிறார்கள். மேலும், இது கிடைக்காத பட்சத்தில், வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த வெந்தயப் பொடியையும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் கலந்து சாப்பிடலாம். சிலர் கேழ்வரகுக் கஞ்சியோ அல்லது கூழோ குடிப்பார்கள். உங்கள் உடலுக்கு எது ஒத்துக்கொள்கிறதோ அந்த எளிய
வழிமுறையைப் பின்பற்றுங்கள் போதும். காய்கறிகள் உணவில் அதிகமாகட்டும். கிழங்கு வகைகள் குறையட்டும்.

இறுதியாக எது எப்படியாயினும், நீங்கள் நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பிறர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தாதீர்கள். பிறர் கூறுவதையெல்லாம் பொருட்படுத்த ஆரம்பித்தீர்களானால், பிறகு மாத்திரைகளைச் சாப்பிடவேண்டி வரலாம். அதற்கு, இது எவ்வளவோ தேவையல்லவா! நீங்கள், உங்கள் உடலியல் கடிகாரம் கூறுவதைக் கேட்டு, உங்களுக்காக மட்டுமே வாழுங்கள். அப்படி வாழ்ந்தால்தான் நீங்கள் உங்களையும் காதலிக்க முடியும்; உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மற்றும் இந்த வாழ்வையும் காதலிக்க முடியும்!

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.