Friday, March 21, 2008

ஈடுபாடு

சுய முன்னேற்ற நூல்கள்...

இக்கட்டுரைக்குள் நுழையும்முன் உங்களுக்கு ஒரு கேள்வி.
சுய முன்னேற்ற நூல்கள் அல்லது சுய முன்னேற்றக் கட்டுரைகள், நம் இந்தியாவில் எப்போது தோன்றியிருக்கும் அல்லது அடியெடுத்து வைத்திருக்கும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா?
பலர் சுய முன்னேற்ற நூல்கள் என்பவை இப்போதுதான் தோன்றியவை என நினைத்துக்கொண்டிருக்கலாம்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை சுய முன்னேற்ற நூல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்தாம். அதன்பின்னர் நினைவுக்கு வருபவர் வாழ்வியல் நூல்களான சுய முன்னேற்ற நூல்களை அதிக அளவில் எழுதிய திரு அப்துற் றஹீம் அவர்கள். அவரது பல நூல்களில் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிறையிலிருந்தபோது ஜேம்ஸ் ஆலன் என்பவரின் நூல்களைப் படித்தார். அப்போது வ.உ.சி.க்கு இந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் என்ன என்ற உந்துதல் தோன்றியது. அதன் விளைவாகத் தோன்றிய நூல்கள்தாம் சாந்திக்கு மார்க்கம், வலிமைக்கு மார்க்கம் போன்ற இன்னபிற நூல்கள்.
அதன்பின்னர் பி.சி. கணேசன், மெர்வின் மற்றும் எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் நினைவில் நிற்கும்.
எம்.எஸ்.உதயமூர்த்தியும் “ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்றொரு நூலை எழுதியுள்ளார்.
இவற்றிற்கெல்லாம் இடையில் சுப நாராயணன் என்பவர் “வாழப் பிறந்தோம்’ என்றொரு அதியற்புதமான வாழ்வியல் நூலை எழுதியுள்ளார். எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களும் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த ஆண்டு ஏப்ரல் 1947.
அந்நூலில் ஈடுபாடு என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன். அது அனைவருக்குமே ஈடுபாட்டைக் கொடுக்கக்கூடியது.
நீங்கள் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு படிக்கிறீர்களோ அந்த அளவுக்கு இது பயனளிக்கும் என்று மட்டும் சொல்லமுடியும்.
இனி, கட்டுரைக்குள் செல்லலாம்.

ஈடுபாடு

ஒரு வேலையை மூன்றுவிதமாகச் செய்யலாம். இதைச் செய்வது நல்லது. செய்யாவிட்டால் கெடுதல் வரும். ஆகவே, கடமையை முடிப்பதற்காகச் செய்து தீரவேண்டும் என்பது ஒரு வகை.
இதைச் செய்தால் நன்மை இருக்கலாம், தீமையும் இருக்கலாம். எப்படியானால் நமக்கென்ன? ஆனாலும் செய்யும்படி மற்றவர்கள் கட்டாயப்படுத்துகிறார்களே! ஏதோ செய்து தொலைப்போம் என்பது இன்னொரு வகை.
இதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மையுண்டு. நமக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு. இவைகளை நம்மால் மிக நன்றாகச் செய்யமுடியும். இப்பொழுதே இதில் ஈடுபட்டு விடுவோம் என்று, மனம் படிந்து வேலையில் இறங்கிவிடுவது மூன்றாவது வகை.
உணவு உட்கொள்ளுதல் தொடங்கி உலகச் சமாதானம் முடிய எல்லாக் காரியத்திலும் மேலே சொன்ன மூன்றுவகையான வேலை முறையும் ஒவ்வொரு சமயம் எல்லார்க்கும் அமைந்தே தீரும்.
ஆனால், மூன்றில் எந்த வகையான வேலை முறை அதிகமாகக் கையாளப்பட்டு வருகிறதோ, அதைப் பொறுத்தே ஒருவருடைய வாழ்வின் வெற்றி இருக்கும்.
கடமைக்காகச் செய்துமுடிக்கும் வேலை கடனுக்காகச் செய்த வேலையாகவே இருக்கும்.
கட்டாயத்துக்காகச் செய்கிற வேலை சிறப்படையாது.
மனம் படிந்து, முழு ஈடுபாட்டோடு செய்கிற வேலை பரிபூரணமாய் இருப்பதோடு, கலைப்பண்பின் மெருகும் பெற்றுப் பொலிவுறும்.

ஆகவே வெற்றி வாழ்வை விரும்புகிற ஒருவன், அவன் செய்யும் காரியம் அனைத்திலும் கலைப்பண்பின் மெருகை ஏற்றி, அது பூரணமாகப் பொலிவுறும்படிச் செய்யவே எண்ணுவான். அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு, எந்தக் காரியத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்ய அவன் பழகிக்கொள்ள வேண்டும்.
பழக்கம் எப்படி ஏற்படுகிறது?
ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் அது பழக்கப்பட்டு விடுகிறது. அந்தக் காரியத்திலே இயல்பான பிரியம் இருந்தால்தான் திரும்பத் திரும்ப அதைச் செய்ய மனம் வரும்.
பிறர் கட்டாயத்துக்காகவும், கடமை என்று நினைத்தும் அடிக்கடி செய்கிற காரியமும் பழக்கமாகிவிடத்தான் செய்யும். ஆனால் ஈடுபாடு இல்லாமல் போனால், நாம் நம்முடைய முழு ஆற்றலையும் இதில் பயன்படுத்த மாட்டோம்.
ஈடுபாடு எப்படி ஏற்படுகிறது?
ஒரு விஷயத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதனால் நமக்கு வரும் நன்மை இன்னதென்று தெளிவாகத் தெரிகிறது. ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய திறமை நம்மிடம் இருக்கிறது. தக்க சந்தர்ப்பமும் இருக்கிறது என்று தெரிந்ததும், நாம் அந்த விஷயத்தில் ஈடுபட்டுச் செயலில் இறங்கிவிடுகிறோம்.
சிறு விஷயங்களில் மாமூல் விவகாரங்களில், ஈடுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயன் என்னவோ ஒரே மாதிரியாகவே இருந்துவிடவும் கூடும்.
ஆனால், பெரிய விஷயங்களில் இப்படியல்ல.
மகத்தான ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்கு மகத்தான முயற்சி வேண்டும். மகத்தான திறமை வேண்டும். ஒருமித்த ஈடுபாடு வேண்டும். இல்லாவிட்டால் காரிய சித்தி ஏற்படாது.
இதைச் செய்யலாம், செய்யவேண்டும், செய்தால் நல்லது, செய்யமுடியும் என்று நினைப்பது மட்டும் போதாது. உடனே, செய்ய முற்பட்டுவிட வேண்டும். முயற்சியிலேயே முழுக்க மனம் படிந்து ஈடுபட்டுவிட வேண்டும்.
நமது சக்தி பூராவையும் செலுத்தி, ஒரே நிலையில், உற்சாகம் குன்றிவிடாதபடி உழைக்க முயன்றுவர வேண்டும்.
யாரும் எதையும் விரும்பிவிடலாம். ஆனால், மன திடமும் மாறா குறிக்கோளும் உடையவர்களே எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர்.
விரும்புவதற்கும் விரும்பியதைச் செய்து முடிப்பதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு.
விருப்பம் வெறும் தண்ணீர்தான். தண்ணீர் வெந்நீராக மாறிக் கொதித்து ஆவி கக்கும்படிச் செய்தால்தான் நீராவி யந்திரத்தை இயக்குகிறது.
நமது விருப்பம் ஈடுபாடாக மாறி, குறிக்கோளாய்க் கொதித்து, அயரா ஆற்றல் என்ற ஆவி கக்கினால்தான் காரியம் கைகூடும்.
ஒரு விஷயத்தில் நமக்கு ஈடுபாடு உண்டானால்தான், அதிலே நமக்கு முழுச் சிரத்தையும் ஒருமித்துப் படியும்.
வாழ்க்கையிலே ஈடுபாடு இல்லாமல் மேலோட்டமாகச் சோம்பித் திரிவதால், எவ்வளவோ சந்தர்ப்பங்களையும் இன்ப நலங்களையும் நாம் இழந்துவிடுகிறோம். வாழ்வு சப்பிட்டுப் போகிறது.
எதிலும் ஆழப் பதியாத காரணத்தால், ஒன்றிலும் நிலைத்து நிற்கிற விருப்பமில்லாமல் போய்விடுகிறது.
வாழ்க்கையில் மேலுக்கு வரவேண்டுமென்று எவ்வளவோ பேர் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்துவரும் வேலையில் முழு ஈடுபாட்டோடு ஆழப் பதிந்திராத காரணத்தால், அவர்களுடைய முழுத் திறமையும் பயன்படுத்தப் பெறாமலே வியர்த்தமாகி விடுகிறது.
தாம் பார்த்து வரும் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்ற நிச்சயம் அவர்களுக்கு இருப்பதில்லை. இடுக்கண் நேர்ந்தால் மனம் தளர்ந்துவிடுகிறது.
சமாளித்துக்கொள்ளவேண்டுமென்ற சிரத்தையில்லை. சிரத்தை இல்லாததால் முழு ஆற்றலும் பிரயோகமாவதில்லை.
ஆகக்கூடி, கடைசியில் தோல்வியும் ஏமாற்றமுமே மிச்சம்.
இதைச் செய்தால் லாபம் வருமா? அவன் அதைச் செய்து பணம் சேர்த்துவிட்டானே! நாமும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்று சதா சபலப்பட்டுக்கொண்டே இருப்பதால், ஒன்றையும் சிறப்பாகச் செய்துவிட முடியாது.
நம்முடைய குறிக்கோள் சரியானது என்ற நம்பிக்கை பிறந்துவிட்டால், அதில் திடமாக ஈடுபட்டுவிட வேண்டும். குரங்குப் பிடியாய் நின்று முன்னேற வேண்டும்.
நமக்கு வேண்டாதவர்கள் நம்மை முட்டித் தள்ளுவார்கள். கேலி செய்வார்கள். நயவஞ்சகம் புரிவார்கள். நாம் தொல்லை தொங்காமல் தெறிபட்டு ஓடிப்போய் நமக்குப் பிடிக்காத இடங்களில், சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும்படி செய்வார்கள்.
சந்தர்ப்ப பேதங்கள், எவ்வளவோ மனக் கசப்பையும் அசௌகரியங்களையும் அவமானங்களையும் பொறுக்கமுடியாத அளவில் நம்மேல் வாரி வாரி இறைக்கும். இவற்றைக் கண்டு வெருண்டடித்து ஓடிவிடக் கூடாது.
இவற்றையெல்லாம் சமாளிக்கச் செய்ய வல்லவை சரியான தெளிவான குறிக்கோளும், அதை அடைய உதவுகிற அசைக்கமுடியாத ஆழ்ந்த ஈடுபாடும் ஆகும்.
ஈடுபட்டு ஒரு காரியத்தைச் செய்யும்போது, இதற்குமுன் நாம் கண்டிராத ஒரு புதுச் சோபை அதில் ஒளிர்வது நமக்குப் புலனாகும். அப்போது பயம், சந்தேகம், திறமையின்மை எல்லாம் பறந்தோடிப் போகும். தன்னம்பிக்கை பிறந்துவிடும்.
வாழ்வின் தேக்கநிலை மாறி, சுறுசுறுப்பும் இயக்கச் சூழலால் உண்டாகும் இன்பவெறி நிலையும் உண்டாகி, மேலும் மேலும் நமது குறிக்கோளை நெருங்க நமக்கு ஆக்கம் உண்டாகிவிடும்.
உயிரும் உணர்வும், அறிவும் ஆற்றலும் ஒருங்கே படியும் வண்ணம் ஒரு காரியத்தில் ஆழ இறங்கி முயலும்போது, நமக்கு உண்டாகும் உற்சாகம் மகா இன்பகரமானது.இந்த இன்பநிலை நீடித்து நின்றால் ஒழியப் பயன் இல்லை.
உற்சாகமும் விடாமுயற்சியும் சேர்ந்தால் பயன் உண்டாகும்.
நிலையான ஈடுபாடு நமது குறிக்கோளை அடைய உதவுகிற மகா சக்தி வாய்ந்த ஒரு கருவி.
சிலவேளை, நம் மனத்தில் உற்சாகம் பொங்கித் ததும்பும். அப்போது எந்தக் காரியத்தையும் அனாயாசமாகச் செய்து முடித்துவிடலாம்போல் தோன்றும். இதே நிலை நீடித்து நிற்கும்படி நாம் அறிவையும் மனத்தையும் பழக்கிக்கொண்டுவிட்டோமானால், வாழ்க்கையில் எத்தனையோ மகத்தான காரியங்களைச் சாதித்துக்கொண்டு விடலாம்.
அறிவைத் தாபத்தோடு தேடியலைவதால் அறிவாளியாகலாம்.
நன்மையைத் தாபத்தோடு தேடியலைவதால் ஞானியாகலாம்.
உயர்ந்த செயல்களையும் லட்சியங்களையும் தாபத்தோடு தேடியலைவதால் கர்மவீரனாகலாம்.

Saturday, January 12, 2008

மண்ணில் மலருமா தமிழ்ப்படம்?

கீழ்வரும் கட்டுரையைப் படியுங்கள். இது பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரை. அவர் சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கையில், இன்றைக்கும் தமிழ் சினிமா மாறியிருக்கிறதா, இல்லையா என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள்.

மண்ணில் மலருமா தமிழ்ப்படம்?

கலைத்தன்மை என்பது நம்முடைய பகுதியின் வாழ்க்கையை அதன் இன்ப துன்பங்களோடு சுவையாகப் பிரதிபலிப்பதாகும்.

கலை என்பது வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கக் கூடாது. அப்படியே பிரதிபலித்தால் சப்பென்று இருக்கும். ரியாலிட்டி என்பது வேறு, ரியலிசம் என்பது வேறு. ரியலிசம் மட்டுமே கலைக்குத் தேவை.

ஒரு மலையாளப் படத்தில் நாம் கேரள நாட்டு வாழ்வைக் காண்பதுபோல் தமிழ்ப்படத்தில் தமிழ்நாட்டு வாழ்வைக் காண முடியவில்லை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். வங்காளிகள் வங்காளப் படங்களைத் தயாரிப்பதுபோல், தமிழர்கள் தமிழ்ப்படங்கள் தயாரிப்பதில்லை என்றும் சொல்லலாம்.

மேல்நாட்டுப் படங்களைப் பார்த்து, வடக்கத்திய படங்களைப் பார்த்து, மலையாளிகளும் வங்காளிகளும் கதம்பக் கதைகளைத் தயாரிப்பதென்றால் அவர்களால் முடியாதா என்ன?

நம்மவர்களைவிட மிகவும் எளிய முறைகளில் இன்னும் திறமையாகவே செய்துவிடுவார்கள்! ஆனால் அவர்கள் தங்களுக்குக் ‘கலைஞர்கள்‘ என்ற புகழ் வரவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். பணத்துக்கும் விளம்பரத்துக்கும் மேலானது புகழ்.

புகழ் என்பது அந்த மக்களிடமே அந்த மக்களின் வாழ்வைக் கலையாக மாற்றிக்காட்டிச் சம்பாதிப்பது. அதற்காகவும் அவர்கள் உழைக்கிறார்கள்.

இந்திப் படங்களில் பல, இந்தியாவை மறந்து வருகின்றன. தமிழ்ப்படங்கள் பல தமிழ்நாட்டையே மறந்துவிடுகின்றன. தமிழ்நாட்டை தமிழ்ப்படங்கள் மறந்துவருவதால் என்ன விளைவு என்று கேட்கிறீர்களா?

கூடிய சீக்கிரமே இப்போது கிராமப்புறங்களில் சிறிதளவாவது ஒட்டிக்கொண்டிருக்கும் கலை வாழ்வு அறவே மறைந்துபோகும்.

கும்மி, கோலாட்டம், தாலாட்டு, நாட்டியம் போன்றவற்றை நம்முடைய பெண்கள் அறவே மறந்துவிடுவார்கள். ஒயிலாட்டம், கரகம், நாதசுரம், பரதம், இசைப்பாடல் முதலியவற்றுக்கு இனி இங்கே வேலை இருக்காது.

பண்பாடு என்பது பழைய தலைமுறைக்கே உரிய சொத்தாகி விடும். நம்முடைய இளைஞர் உலகம் - நடை, உடை, பாவனை முதலியவற்றோடு காதல் செய்யும் முறைகளையும் படங்களிலிருந்து கற்றுக்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள், விவாகரத்துச் சட்டங்களில் தனிப்பயிற்சி பெறவேண்டிய அவசியம் ஏற்படும். எதிர்காலக் குடும்ப வாழ்வுக்கு அறைகூவல் இங்கிருந்துதான் கிளம்பியிருக்கிறது.

திரை மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். அதனால் வாழ்க்கையை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், மாற்றவும் முடியும். ‘குறுகிய காலத்தில் குறுகிய உழைப்பில், குறுகிய வட்டத்தில் நிறைந்த லாபம்‘ என்ற நோக்கத்தை மட்டுமே அது கொண்டிருக்குமானால், அது ஆக்கப்பாதைக்குத் திரும்புவது அபூர்வம்தான்.

வங்காளிகளும் மலையாளிகளும் நம்மைவிடக் குறைந்த செலவில்தான் படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் லாப நோக்கத்துடன்கூட தங்கள் தங்கள் மண்ணின் நலனுக்காகவும் மக்களின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவும் சேர்ந்தே எடுக்கிறார்கள்.

நாம்..?

(எழுத்தாளர் அகிலன் அவர்கள் 1967-ம் வருடம் திரைப்படப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையைத்தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.)

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.