Monday, May 10, 2010

அமுதசுரபி மே 2010 / உதவி தேவை

அன்புள்ள நண்பர்களுக்கு...

அமுதசுரபி மே 2010 இதழில், பக்கம் 73-ல் முத்துராமனுக்கு உதவி கேட்டு செய்தி வெளியாகியுள்ளது. இணைய அன்பர்களும் அவர்களுக்குத் தெரிந்த வகையில், விதத்தில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நெகிழ்ச்சிக்குரியது. இதைக் காணும் பிற அன்பர்களும் அவருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம், சத்தம் இல்லாமல்.

Monday, April 19, 2010

உதவுங்கள் பூச்செண்டாக...

முத்துராமன். 33 வயது இளைஞர். நல்ல எழுத்தாளர், சிறுகதையாளர். பழகுவதற்கு வெகு இனிமையானவர். மனித நேயம் மிக்கவர். தமிழின் பிரபல முன்னணி எழுத்தாளர்கள் பலருடனும் நல்ல பரிச்சயம் இவருக்கு உண்டு.

இவரது சிறுகதைகள் கல்கி, குமுதம் ஜங்ஷன் உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும், தமிழ்சிஃபி, சமாச்சார், தமிழோவியம் உள்ளிட்ட சில இணைய தளங்களிலும் வெளியாகியிருக்கின்றன. வெகுஜன பத்திரிகைகள் பலவற்றில் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

‘சதுரங்கச் சிப்பாய்கள்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. அந்நூலின் முன்னுரையில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன, ‘இவரது சிறுகதைகளின் தொனி அடக்கமானது. புனைகதையில் அடக்கம், இன்னும் இந்தியரிடையே பழக்கப்படவில்லை. முத்துராமன் இந்தியப் புனைகதையில் அடக்கமான தொனி நிலைபெற ஒரு காரணமாயிருப்பார் என்ற நம்பிக்கை தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கையைச் சொல்லும் ‘சிரிப்பு டாக்டர்’ என்ற நூலை எழுதியிருக்கிறார். பகத் சிங்கின் வரலாறைச் சொல்லும் ‘துப்பாக்கி விடு தூது’ என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

முத்துராமன் தற்போது சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வருகிறார். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் தற்போது தாற்காலிகமாக ‘டயாலிஸிஸ்’ சிகிச்சை எடுத்து வருகிறார். இவரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்குப் பிறகான மருத்துவச் செலவுகளுக்கு ரூபாய் நான்கு லட்சத்துக்கும் மேல் தேவைப்படுகிறது.

கிழக்கு பதிப்பகத்தில் பணிபுரியும் நண்பர் முகிலும், இந்த விவரத்தை அவரின் இணையதளத்தில் உதவி கேட்டு வெளியிட்டுள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள அந்த இணைப்புகளின் விவரம்...

உதவி தேவை

நன்றி

எழுத்துலக நண்பர்களும் வாசகர்களும், தங்களால் இயன்ற உதவியை அவருக்குச் செய்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறேன். ‘சிரிப்பு டாக்டர்’ எழுதிய அந்தக் கலைஞனின் வாழ்விலும் புன்னகைப் பூக்கள் மலரட்டும். நம் உதவியானது ஒரு பூச்செண்டாக மாறி, அவரின் வாழ்வைப் பூத்துக் குலுங்கச் செய்யட்டும்.

அன்புடன்,
சைதை முரளி.

முத்துராமனுடைய வங்கிக் கணக்கு எண் :

SBI Mogappair Branch – A/c No: 30963258849
Branch Code : 5090
MICR No: 600002118
IFS Code : SBI 0005090

MUTHURAMAN என்ற பெயரில் காசோலை / டிராஃப்ட்கள் கொடுக்கலாம்.

முகவரி :

முத்துராமன்,
22, எச்.ஐ.ஜி. ப்ளாட்,
7வது தெரு, ஏரித்திட்டம்,
முகப்பேர் மேற்கு,
சென்னை – 600037.
muthuraman@gmail.com

Monday, October 19, 2009

திருலோக சீதாராம்



எனது முந்தைய பதிவொன்றில் திருலோக சீதாராம் அவர்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். கவிஞர் மற்றும் எழுத்தாளரான திருலோக சீதாராம் குறித்து கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்கள் இலக்கியச் சிந்தனை கூட்டமொன்றில் பேசியதன் மூலமே அவரைப் பற்றி அறிந்தேன். அவரின் எண்ணங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அவரின் எண்ணங்களை அறிய விரும்புவோர் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘இலக்கியப்படகு’ என்ற நூலை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும். திருலோக சீதாராம் அவர்கள் குறித்த கட்டுரையை ‘திரிசக்தி’ தீபாவளி மலரில் எழுதியுள்ளேன். ஸ்ரீரங்கம் மோகனரங்கன் திருலோக சீதாராமைப் பற்றிப் பேசவில்லை என்றால், எனக்கு அவரைப் பற்றித் தெரிய வந்திருக்காது. அவருக்கு இந்நேரத்தில் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




தினமலரில் திரிசக்தி தீபாவளி மலர் குறித்த பார்வையும் இடம் பெற்றுள்ளது. அப்பார்வையில் என் கட்டுரை குறித்த பார்வையும் இடம் பெற்றுள்ளதால், அதை மட்டும் இங்கு தந்துள்ளேன். திருலோக சீதாராம் அவர்களின் புகைப்படம் நெட்டில் ஒரே ஒரு வலைத்தளத்தில் மட்டுமே இருந்தது.



அவர் புகைப்படத்துக்குக் காட்டிய ஆர்வத்தை ஸ்ரீரங்கம் மோகனரங்கன் புகைப்படத்துக்குக் காட்டத் தவறிவிட்டேன். அவர் என்னை மன்னிப்பாராக. அவரின் புகைப்படத்தையும் ஒரு வலைத்தளத்திலிருந்துதான் இங்கு எடுத்துத் தந்துள்ளேன்.

Thursday, August 13, 2009

தீராத விளையாட்டுப் பிள்ளை...

தீராத விளையாட்டுப் பிள்ளை...

கிருஷ்ணன்.

ஸர்வ வ்யாபி அவன். அதாவது, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.

கிருஷ்ணர் என்ற பெயருக்கே வசீகரம் நிறைந்தவர் என்றுதான் பொருள். அதே சமயம் எல்லா வகைகளிலும் ஸர்வ வல்லமையும் உடையவர். வல்லமை இல்லாத வசீகரம்தான் ஏது? கிருஷ்ணரால் வசீகரிக்கப்படாதவர்கள் இவ்வுலகில் யாராவது இருக்கிறார்களா?




இத்தனைக்கும் அவனைப் போக்கிரி, நயவஞ்சகன், கள்ளங்கபடக்காரன் என்றெல்லாம் ஏசிக்கொண்டே அவன் லீலைகளைப் புகழ்கிறார்கள், லீலா விநோதங்களில் மயங்குகிறார்கள். அதேசமயம் நாம் மட்டும் போக்கிரித்தனம் செய்தால் ஏன் ஏசுகிறார்கள் என்ற கேள்வியும் எல்லோருள்ளும் இருக்கவே செய்கிறது. அவன் செய்யும் போக்கிரித்தனங்கள் நேர்த்தியானதாகவும் நன்மைக்காகவும் மட்டுமே இருக்கும். நாம் செய்யும் போக்கிரித்தனங்கள் நேர்த்தியானதல்ல. நன்மைக்காகவும் இருப்பதில்லை. ஏனெனில், அவன் பரிபூரணமானவன். நாமோ பூரணத்தை நோக்கிப் பயணிப்பவர்கள்.




அவதாரம் என்றாலே சட்டென்று நமக்குத் தோன்றுவது தசாவதாரம்தான். அந்த தசாவதாரத்திலும் நரஸிம்ம, ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களைச் சிறப்பாகச் சொல்வார்கள். சிறப்பாகச் சொல்லும் இந்த மூன்றிலும் அதிசிறப்பு வாய்ந்தது கிருஷ்ண அவதாரம். அதிலும் ‘கோவிந்தன்’ என்னும் திருநாமம்.




கிருஷ்ணர் இந்திரனின் கர்வத்தை அடக்கியதால், இந்திரன் கிருஷ்ணருக்குச் சூட்டிய திருநாமமே கோவிந்தன். துவாதச நாமாக்கள் எனப்படும் விஷ்ணுவின் 12 விசேஷ திருநாமங்களில் கோவிந்தன் என்கிற நாமமும் அடக்கம். சந்தியாவந்தனத்தில் வரும் ஆசமனத்திலும் கோவிந்தாய நம: என்ற நாமாவளி இடம் பெறுகிறது.




அது ஒருபுறம் இருக்கட்டும். கிருஷ்ண அவதாரத்தில் மட்டும் ‘கீதை’ என்கிற இவ்வளவு நீண்ட பிரசங்கம் ஏன்? மற்ற அவதாரங்களில் பகவான் இப்படி எதுவும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லையே! மற்ற அவதாரங்களில் பகவான் அதைச் செயல்களில் காட்டியதால் எல்லோரும் அதை பிரமிப்போடு மட்டுமே பார்த்தார்கள். இருப்பினும் அவர்கள் பகவான் ஏன் அப்படிச் செய்தார் என்று புரிந்துகொள்ளவில்லை. எனவே, பார்த்தார் பகவான். இன்னும் மக்களோடு அதிநெருக்கமாகக் கலந்து பழகி அவர்களை தன்வசம் ஈர்ப்போம் என எண்ணி கிருஷ்ணராக அவதாரம் பண்ணினார். ‘கிருஷ்’ என்ற பதத்துக்கே ஈர்ப்பது என்றுதான் பொருள்.




கண்ணனை, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்பார் மகாகவி பாரதியார். அதென்ன தீராத விளையாட்டுப் பிள்ளை? விளையாட்டு என்றாலே ஒரு கட்டத்தில் முடிந்துவிடக் கூடியதுதானே! அதுவும் பிள்ளைகளால் மட்டும் எவ்வளவு நேரத்துக்குத்தான் விளையாட முடியும் என்றெல்லாம் கேள்விகள் எழுகிறதல்லவா!




இந்தப் பிள்ளையோ அலகிலா விளையாட்டுடையவன். இவனுக்கு எல்லாமே விளையாட்டுதான். எவ்வித முகச்சுளிப்பும் இவனிடம் அறவே இல்லை. பிறக்கும்போதே விளையாட்டை ஆரம்பித்துவிட்டவன்! வசுதேவர்-தேவகிக்கு மட்டும் தன் அவதாரக் காட்சியை பிறக்கையிலே தந்து பின் அவர்களையும் மாயையில் ஆழ்த்தியவன்.




பிறப்பிலேயே ஆரம்பித்துவிட்டது அவனின் மாயா-விநோத லீலைகள். அவன் அரக்கர்களை வதம் செய்த விதம்தான் என்ன! கோபியரோடு செய்த ராசலீலைகள்தான் என்னே! எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். அந்த வெண்ணெய் திருடும் செயல்தான் எத்தனை உள்ளங்களைத் திருடிவிட்டது, இன்னமும் திருடிக்கொண்டிருக்கிறது! அதன் வெளிப்பாடாகத்தானே, அவனுக்கு அவன் பிறந்த நாளன்று, அவனின் வாயில் வெண்ணெயை ஈசுகிறோம் நம் அன்பின் வெளிப்பாடாக! எல்லாவற்றுக்கும் மேலாக அவன் குழந்தையாகத் தவழ்ந்து வருகிற அம்சம் எத்தனை பேரின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறது! கிருஷ்ணனே எங்கள் வீட்டுக்குத் தவழ்ந்து வந்துவிட்டான் என்பதை வெளிப்படுத்தும் வெளிப்பாடுதானே கையால் கால் போடும் களிக்கோலம்! அது ஒரு கவிக்கோலம்!




கோபியருக்கும் சரி, கோவர்த்தனகிரி மலையைக் குடையாகப் பிடித்து இந்திரனுக்குப் பாடம் புகட்டியபோதும் சரி, ‘நான்‘ என்கிற அகந்தையைவிட்டு என்னைச் சரணடைந்தால், ‘க்ருஷ்ணார்ப்பணம்’ என்று சகல விஷயங்களையும் எனக்கு அர்ப்பணம் செய்தால் போதும், நான் காப்பேன் என்பதுதானே அவனது சித்தாந்தம். மேலும் அவன் கையில் வைத்திருப்பதோ தம்மாத்துண்டு புல்லாங்குழல்! அதில் அவன் செய்யும் ராக விநோதங்கள்தான் எத்தனை உயிர்களைக் கிறங்கடிக்கிறது! இதில் அவன் சொல்லவரும் விஷயம்தான் என்ன? துன்பம் நேர்கையில் துவண்டுவிடாமல் இசையோடு ஒன்றிவிடுங்கள் என்பதுதானே!

‘கிருஷ்ணரின் பரிமாணங்களுள் நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த பரிமாணம் கோபீஜன வல்லபர் - பிருந்தாவன கோபியரின் காதலன்தான். அந்த அன்புப்பித்து உங்கள் மூளையில் புகுமானால், ஆசிர்வதிக்கப்பட்ட அந்தக் கோபியரை நீங்கள் புரிந்துகொள்ள முடியுமானால், அப்போதுதான் அன்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உலகமே மறந்துபோய், மற்ற எல்லா எதிர்பார்ப்புகளும் ஒழிந்துபோய், வேறெந்த நோக்கமும், உண்மையைத் தேடும் ஆசைகூட இல்லாமல் உங்கள் இதயம் தூய்மை அடைய வேண்டும். அப்போது, அப்போது மட்டுமே அந்தப் பிரேமை வெறி உங்களுக்கு வரும்; கோபியர் கொண்டிருந்த எல்லையற்ற அந்த அன்பின் சக்தியும் பலமும் உங்களுக்கு வரும்; அன்பிற்காகவே அன்பு செய்ய உங்களால் முடியும். அதுதான் லட்சியம். அதைப் பெற்றால் நீங்கள் எல்லாவற்றையும் பெற்றுவிட்டீர்கள்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.





எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். முக்கியமாகச் சொல்லவேண்டியது ஒன்றுண்டு. அது கிருஷ்ண ப்ரேமை. அன்பு மட்டும் இல்லாமல் இருக்காதீர்கள் என்பதுதான் அது! என்னைக் கொண்டாட எந்தவிதமான ஆடம்பரமும் தேவையில்லை. அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஒரு இலையோ பூவோ, பழமோ நீரோ அளித்தால்கூட போதும். அதை நான் ஏற்பேன் என்கிறான் அந்த தீராத விளையாட்டுப் பிள்ளை. எனவே, கிருஷ்ணருக்குப் பிடித்தமானதை அளிக்க முயற்சி செய்வோம். அதேசமயம், அது கிடைக்காத பட்சத்தில் - பூவோ இலையோ பழமோ நீரோ - கிடைப்பதை அவருக்களித்து அந்தப் பிரசாதத்தைப் புசிப்போம். அவனைப் போன்றே எப்போதும் சந்தோஷமாக இருக்கும் கலையை அவன் நமக்கு அருள்வான்.




அண்மையில, ‘மனத்தில் எப்போதும் சந்தோஷத்தோடு இருக்க என்ன செய்ய வேண்டும்?’ எனறு ஒரு வாசகர் மாதப் பத்திரிகையொன்றில் கேள்வி கேட்டிருந்தார். ‘நேர்மறைச் சிந்தனைகளையே எண்ணுவது, நம் பாக்கியங்களை நினைத்து மகிழ்வது, கிட்டாதவற்றுக்கு ஏங்காதிருப்பது, அடுத்தவர்க்கு உதவுவது - இவற்றை விடாது பழகினால் மனம் எப்போதும் சந்தோஷம் கொள்ளும்’ என்றிருந்தது பதில்.



இவையும் கிருஷ்ண நிலையை அடைய நமக்கு உதவக்கூடியவைதான்.

கிருஷ்ணார்ப்பணம்.

- சைதை முரளி.

Friday, March 21, 2008

ஈடுபாடு

சுய முன்னேற்ற நூல்கள்...

இக்கட்டுரைக்குள் நுழையும்முன் உங்களுக்கு ஒரு கேள்வி.
சுய முன்னேற்ற நூல்கள் அல்லது சுய முன்னேற்றக் கட்டுரைகள், நம் இந்தியாவில் எப்போது தோன்றியிருக்கும் அல்லது அடியெடுத்து வைத்திருக்கும் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா?
பலர் சுய முன்னேற்ற நூல்கள் என்பவை இப்போதுதான் தோன்றியவை என நினைத்துக்கொண்டிருக்கலாம்.
என் சிற்றறிவுக்கு எட்டியவரை சுய முன்னேற்ற நூல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள்தாம். அதன்பின்னர் நினைவுக்கு வருபவர் வாழ்வியல் நூல்களான சுய முன்னேற்ற நூல்களை அதிக அளவில் எழுதிய திரு அப்துற் றஹீம் அவர்கள். அவரது பல நூல்களில் வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும்.
வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிறையிலிருந்தபோது ஜேம்ஸ் ஆலன் என்பவரின் நூல்களைப் படித்தார். அப்போது வ.உ.சி.க்கு இந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டால் என்ன என்ற உந்துதல் தோன்றியது. அதன் விளைவாகத் தோன்றிய நூல்கள்தாம் சாந்திக்கு மார்க்கம், வலிமைக்கு மார்க்கம் போன்ற இன்னபிற நூல்கள்.
அதன்பின்னர் பி.சி. கணேசன், மெர்வின் மற்றும் எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோரின் பெயர்கள் நினைவில் நிற்கும்.
எம்.எஸ்.உதயமூர்த்தியும் “ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’ என்றொரு நூலை எழுதியுள்ளார்.
இவற்றிற்கெல்லாம் இடையில் சுப நாராயணன் என்பவர் “வாழப் பிறந்தோம்’ என்றொரு அதியற்புதமான வாழ்வியல் நூலை எழுதியுள்ளார். எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களும் இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த ஆண்டு ஏப்ரல் 1947.
அந்நூலில் ஈடுபாடு என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்தேன். அது அனைவருக்குமே ஈடுபாட்டைக் கொடுக்கக்கூடியது.
நீங்கள் எவ்வளவு தூரம் ஈடுபாட்டோடு படிக்கிறீர்களோ அந்த அளவுக்கு இது பயனளிக்கும் என்று மட்டும் சொல்லமுடியும்.
இனி, கட்டுரைக்குள் செல்லலாம்.

ஈடுபாடு

ஒரு வேலையை மூன்றுவிதமாகச் செய்யலாம். இதைச் செய்வது நல்லது. செய்யாவிட்டால் கெடுதல் வரும். ஆகவே, கடமையை முடிப்பதற்காகச் செய்து தீரவேண்டும் என்பது ஒரு வகை.
இதைச் செய்தால் நன்மை இருக்கலாம், தீமையும் இருக்கலாம். எப்படியானால் நமக்கென்ன? ஆனாலும் செய்யும்படி மற்றவர்கள் கட்டாயப்படுத்துகிறார்களே! ஏதோ செய்து தொலைப்போம் என்பது இன்னொரு வகை.
இதைச் செய்தால் எல்லோருக்கும் நன்மையுண்டு. நமக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டு. இவைகளை நம்மால் மிக நன்றாகச் செய்யமுடியும். இப்பொழுதே இதில் ஈடுபட்டு விடுவோம் என்று, மனம் படிந்து வேலையில் இறங்கிவிடுவது மூன்றாவது வகை.
உணவு உட்கொள்ளுதல் தொடங்கி உலகச் சமாதானம் முடிய எல்லாக் காரியத்திலும் மேலே சொன்ன மூன்றுவகையான வேலை முறையும் ஒவ்வொரு சமயம் எல்லார்க்கும் அமைந்தே தீரும்.
ஆனால், மூன்றில் எந்த வகையான வேலை முறை அதிகமாகக் கையாளப்பட்டு வருகிறதோ, அதைப் பொறுத்தே ஒருவருடைய வாழ்வின் வெற்றி இருக்கும்.
கடமைக்காகச் செய்துமுடிக்கும் வேலை கடனுக்காகச் செய்த வேலையாகவே இருக்கும்.
கட்டாயத்துக்காகச் செய்கிற வேலை சிறப்படையாது.
மனம் படிந்து, முழு ஈடுபாட்டோடு செய்கிற வேலை பரிபூரணமாய் இருப்பதோடு, கலைப்பண்பின் மெருகும் பெற்றுப் பொலிவுறும்.

ஆகவே வெற்றி வாழ்வை விரும்புகிற ஒருவன், அவன் செய்யும் காரியம் அனைத்திலும் கலைப்பண்பின் மெருகை ஏற்றி, அது பூரணமாகப் பொலிவுறும்படிச் செய்யவே எண்ணுவான். அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு, எந்தக் காரியத்தையும் முழு ஈடுபாட்டோடு செய்ய அவன் பழகிக்கொள்ள வேண்டும்.
பழக்கம் எப்படி ஏற்படுகிறது?
ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் அது பழக்கப்பட்டு விடுகிறது. அந்தக் காரியத்திலே இயல்பான பிரியம் இருந்தால்தான் திரும்பத் திரும்ப அதைச் செய்ய மனம் வரும்.
பிறர் கட்டாயத்துக்காகவும், கடமை என்று நினைத்தும் அடிக்கடி செய்கிற காரியமும் பழக்கமாகிவிடத்தான் செய்யும். ஆனால் ஈடுபாடு இல்லாமல் போனால், நாம் நம்முடைய முழு ஆற்றலையும் இதில் பயன்படுத்த மாட்டோம்.
ஈடுபாடு எப்படி ஏற்படுகிறது?
ஒரு விஷயத்தில் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதனால் நமக்கு வரும் நன்மை இன்னதென்று தெளிவாகத் தெரிகிறது. ஆசையைப் பூர்த்தி செய்துகொள்ளக்கூடிய திறமை நம்மிடம் இருக்கிறது. தக்க சந்தர்ப்பமும் இருக்கிறது என்று தெரிந்ததும், நாம் அந்த விஷயத்தில் ஈடுபட்டுச் செயலில் இறங்கிவிடுகிறோம்.
சிறு விஷயங்களில் மாமூல் விவகாரங்களில், ஈடுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பயன் என்னவோ ஒரே மாதிரியாகவே இருந்துவிடவும் கூடும்.
ஆனால், பெரிய விஷயங்களில் இப்படியல்ல.
மகத்தான ஒரு காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்கு மகத்தான முயற்சி வேண்டும். மகத்தான திறமை வேண்டும். ஒருமித்த ஈடுபாடு வேண்டும். இல்லாவிட்டால் காரிய சித்தி ஏற்படாது.
இதைச் செய்யலாம், செய்யவேண்டும், செய்தால் நல்லது, செய்யமுடியும் என்று நினைப்பது மட்டும் போதாது. உடனே, செய்ய முற்பட்டுவிட வேண்டும். முயற்சியிலேயே முழுக்க மனம் படிந்து ஈடுபட்டுவிட வேண்டும்.
நமது சக்தி பூராவையும் செலுத்தி, ஒரே நிலையில், உற்சாகம் குன்றிவிடாதபடி உழைக்க முயன்றுவர வேண்டும்.
யாரும் எதையும் விரும்பிவிடலாம். ஆனால், மன திடமும் மாறா குறிக்கோளும் உடையவர்களே எண்ணிய எண்ணியாங்கு எய்துபவர்.
விரும்புவதற்கும் விரும்பியதைச் செய்து முடிப்பதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு.
விருப்பம் வெறும் தண்ணீர்தான். தண்ணீர் வெந்நீராக மாறிக் கொதித்து ஆவி கக்கும்படிச் செய்தால்தான் நீராவி யந்திரத்தை இயக்குகிறது.
நமது விருப்பம் ஈடுபாடாக மாறி, குறிக்கோளாய்க் கொதித்து, அயரா ஆற்றல் என்ற ஆவி கக்கினால்தான் காரியம் கைகூடும்.
ஒரு விஷயத்தில் நமக்கு ஈடுபாடு உண்டானால்தான், அதிலே நமக்கு முழுச் சிரத்தையும் ஒருமித்துப் படியும்.
வாழ்க்கையிலே ஈடுபாடு இல்லாமல் மேலோட்டமாகச் சோம்பித் திரிவதால், எவ்வளவோ சந்தர்ப்பங்களையும் இன்ப நலங்களையும் நாம் இழந்துவிடுகிறோம். வாழ்வு சப்பிட்டுப் போகிறது.
எதிலும் ஆழப் பதியாத காரணத்தால், ஒன்றிலும் நிலைத்து நிற்கிற விருப்பமில்லாமல் போய்விடுகிறது.
வாழ்க்கையில் மேலுக்கு வரவேண்டுமென்று எவ்வளவோ பேர் துடிதுடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் செய்துவரும் வேலையில் முழு ஈடுபாட்டோடு ஆழப் பதிந்திராத காரணத்தால், அவர்களுடைய முழுத் திறமையும் பயன்படுத்தப் பெறாமலே வியர்த்தமாகி விடுகிறது.
தாம் பார்த்து வரும் தொழிலில் வெற்றி கிடைக்கும் என்ற நிச்சயம் அவர்களுக்கு இருப்பதில்லை. இடுக்கண் நேர்ந்தால் மனம் தளர்ந்துவிடுகிறது.
சமாளித்துக்கொள்ளவேண்டுமென்ற சிரத்தையில்லை. சிரத்தை இல்லாததால் முழு ஆற்றலும் பிரயோகமாவதில்லை.
ஆகக்கூடி, கடைசியில் தோல்வியும் ஏமாற்றமுமே மிச்சம்.
இதைச் செய்தால் லாபம் வருமா? அவன் அதைச் செய்து பணம் சேர்த்துவிட்டானே! நாமும் ஏன் அப்படிச் செய்யக் கூடாது என்று சதா சபலப்பட்டுக்கொண்டே இருப்பதால், ஒன்றையும் சிறப்பாகச் செய்துவிட முடியாது.
நம்முடைய குறிக்கோள் சரியானது என்ற நம்பிக்கை பிறந்துவிட்டால், அதில் திடமாக ஈடுபட்டுவிட வேண்டும். குரங்குப் பிடியாய் நின்று முன்னேற வேண்டும்.
நமக்கு வேண்டாதவர்கள் நம்மை முட்டித் தள்ளுவார்கள். கேலி செய்வார்கள். நயவஞ்சகம் புரிவார்கள். நாம் தொல்லை தொங்காமல் தெறிபட்டு ஓடிப்போய் நமக்குப் பிடிக்காத இடங்களில், சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும்படி செய்வார்கள்.
சந்தர்ப்ப பேதங்கள், எவ்வளவோ மனக் கசப்பையும் அசௌகரியங்களையும் அவமானங்களையும் பொறுக்கமுடியாத அளவில் நம்மேல் வாரி வாரி இறைக்கும். இவற்றைக் கண்டு வெருண்டடித்து ஓடிவிடக் கூடாது.
இவற்றையெல்லாம் சமாளிக்கச் செய்ய வல்லவை சரியான தெளிவான குறிக்கோளும், அதை அடைய உதவுகிற அசைக்கமுடியாத ஆழ்ந்த ஈடுபாடும் ஆகும்.
ஈடுபட்டு ஒரு காரியத்தைச் செய்யும்போது, இதற்குமுன் நாம் கண்டிராத ஒரு புதுச் சோபை அதில் ஒளிர்வது நமக்குப் புலனாகும். அப்போது பயம், சந்தேகம், திறமையின்மை எல்லாம் பறந்தோடிப் போகும். தன்னம்பிக்கை பிறந்துவிடும்.
வாழ்வின் தேக்கநிலை மாறி, சுறுசுறுப்பும் இயக்கச் சூழலால் உண்டாகும் இன்பவெறி நிலையும் உண்டாகி, மேலும் மேலும் நமது குறிக்கோளை நெருங்க நமக்கு ஆக்கம் உண்டாகிவிடும்.
உயிரும் உணர்வும், அறிவும் ஆற்றலும் ஒருங்கே படியும் வண்ணம் ஒரு காரியத்தில் ஆழ இறங்கி முயலும்போது, நமக்கு உண்டாகும் உற்சாகம் மகா இன்பகரமானது.இந்த இன்பநிலை நீடித்து நின்றால் ஒழியப் பயன் இல்லை.
உற்சாகமும் விடாமுயற்சியும் சேர்ந்தால் பயன் உண்டாகும்.
நிலையான ஈடுபாடு நமது குறிக்கோளை அடைய உதவுகிற மகா சக்தி வாய்ந்த ஒரு கருவி.
சிலவேளை, நம் மனத்தில் உற்சாகம் பொங்கித் ததும்பும். அப்போது எந்தக் காரியத்தையும் அனாயாசமாகச் செய்து முடித்துவிடலாம்போல் தோன்றும். இதே நிலை நீடித்து நிற்கும்படி நாம் அறிவையும் மனத்தையும் பழக்கிக்கொண்டுவிட்டோமானால், வாழ்க்கையில் எத்தனையோ மகத்தான காரியங்களைச் சாதித்துக்கொண்டு விடலாம்.
அறிவைத் தாபத்தோடு தேடியலைவதால் அறிவாளியாகலாம்.
நன்மையைத் தாபத்தோடு தேடியலைவதால் ஞானியாகலாம்.
உயர்ந்த செயல்களையும் லட்சியங்களையும் தாபத்தோடு தேடியலைவதால் கர்மவீரனாகலாம்.

Saturday, January 12, 2008

மண்ணில் மலருமா தமிழ்ப்படம்?

கீழ்வரும் கட்டுரையைப் படியுங்கள். இது பிரபல எழுத்தாளர் ஒருவர் எழுதிய கட்டுரை. அவர் சொன்ன கருத்துகளை வைத்துப் பார்க்கையில், இன்றைக்கும் தமிழ் சினிமா மாறியிருக்கிறதா, இல்லையா என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள்.

மண்ணில் மலருமா தமிழ்ப்படம்?

கலைத்தன்மை என்பது நம்முடைய பகுதியின் வாழ்க்கையை அதன் இன்ப துன்பங்களோடு சுவையாகப் பிரதிபலிப்பதாகும்.

கலை என்பது வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கக் கூடாது. அப்படியே பிரதிபலித்தால் சப்பென்று இருக்கும். ரியாலிட்டி என்பது வேறு, ரியலிசம் என்பது வேறு. ரியலிசம் மட்டுமே கலைக்குத் தேவை.

ஒரு மலையாளப் படத்தில் நாம் கேரள நாட்டு வாழ்வைக் காண்பதுபோல் தமிழ்ப்படத்தில் தமிழ்நாட்டு வாழ்வைக் காண முடியவில்லை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். வங்காளிகள் வங்காளப் படங்களைத் தயாரிப்பதுபோல், தமிழர்கள் தமிழ்ப்படங்கள் தயாரிப்பதில்லை என்றும் சொல்லலாம்.

மேல்நாட்டுப் படங்களைப் பார்த்து, வடக்கத்திய படங்களைப் பார்த்து, மலையாளிகளும் வங்காளிகளும் கதம்பக் கதைகளைத் தயாரிப்பதென்றால் அவர்களால் முடியாதா என்ன?

நம்மவர்களைவிட மிகவும் எளிய முறைகளில் இன்னும் திறமையாகவே செய்துவிடுவார்கள்! ஆனால் அவர்கள் தங்களுக்குக் ‘கலைஞர்கள்‘ என்ற புகழ் வரவேண்டும் என்று பாடுபடுகிறார்கள். பணத்துக்கும் விளம்பரத்துக்கும் மேலானது புகழ்.

புகழ் என்பது அந்த மக்களிடமே அந்த மக்களின் வாழ்வைக் கலையாக மாற்றிக்காட்டிச் சம்பாதிப்பது. அதற்காகவும் அவர்கள் உழைக்கிறார்கள்.

இந்திப் படங்களில் பல, இந்தியாவை மறந்து வருகின்றன. தமிழ்ப்படங்கள் பல தமிழ்நாட்டையே மறந்துவிடுகின்றன. தமிழ்நாட்டை தமிழ்ப்படங்கள் மறந்துவருவதால் என்ன விளைவு என்று கேட்கிறீர்களா?

கூடிய சீக்கிரமே இப்போது கிராமப்புறங்களில் சிறிதளவாவது ஒட்டிக்கொண்டிருக்கும் கலை வாழ்வு அறவே மறைந்துபோகும்.

கும்மி, கோலாட்டம், தாலாட்டு, நாட்டியம் போன்றவற்றை நம்முடைய பெண்கள் அறவே மறந்துவிடுவார்கள். ஒயிலாட்டம், கரகம், நாதசுரம், பரதம், இசைப்பாடல் முதலியவற்றுக்கு இனி இங்கே வேலை இருக்காது.

பண்பாடு என்பது பழைய தலைமுறைக்கே உரிய சொத்தாகி விடும். நம்முடைய இளைஞர் உலகம் - நடை, உடை, பாவனை முதலியவற்றோடு காதல் செய்யும் முறைகளையும் படங்களிலிருந்து கற்றுக்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள், விவாகரத்துச் சட்டங்களில் தனிப்பயிற்சி பெறவேண்டிய அவசியம் ஏற்படும். எதிர்காலக் குடும்ப வாழ்வுக்கு அறைகூவல் இங்கிருந்துதான் கிளம்பியிருக்கிறது.

திரை மிகவும் சக்தி வாய்ந்த சாதனம். அதனால் வாழ்க்கையை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், மாற்றவும் முடியும். ‘குறுகிய காலத்தில் குறுகிய உழைப்பில், குறுகிய வட்டத்தில் நிறைந்த லாபம்‘ என்ற நோக்கத்தை மட்டுமே அது கொண்டிருக்குமானால், அது ஆக்கப்பாதைக்குத் திரும்புவது அபூர்வம்தான்.

வங்காளிகளும் மலையாளிகளும் நம்மைவிடக் குறைந்த செலவில்தான் படங்களை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் லாப நோக்கத்துடன்கூட தங்கள் தங்கள் மண்ணின் நலனுக்காகவும் மக்களின் சிறப்பை வெளிப்படுத்துவதற்காகவும் சேர்ந்தே எடுக்கிறார்கள்.

நாம்..?

(எழுத்தாளர் அகிலன் அவர்கள் 1967-ம் வருடம் திரைப்படப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய கட்டுரையைத்தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.)

Sunday, March 25, 2007

உடம்பு கூறுவதையும் கேளுங்கள்!

'ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். அதற்கு முன்னாலே வா, வா, வா வா!'
என்பது காதலியை அழைக்கும் அக்கால பழைய திரைப்பாடல்களில் பிரபல்யமான
பாடல். அந்தப் பாடல் இக்காலத்துக்கும் பொருந்துவதாகத்தான் உள்ளது.

வயது ஏற ஏற, வாலிபம் தேய்கிறது. பலவித உடல் உபாதைகள் நம்முள்ளே தோன்றுகின்றன. நோய்கள் என்று நம் உடலில் வந்துவிட்டாலே, என்றும் வாலிபமாக
இருக்கவேண்டும் என்ற வைராக்கியமும் நம் எல்லோருக்கும் தவிர்க்கமுடியாமல் எழுகிறது. இவற்றுக்கு நிரந்தர அடைக்கலம் கொடுத்து தங்கவைப்பதும் நாம்தான். வந்த இந்த நோய்களை, விருந்தினரைப் போல விடைகொடுத்து அனுப்பிவைப்பதும் நாம்தான்.

'என்றும் நோய் நொடியில்லாமல் வாழத்தான் நான் ஆசைப்படுகிறேன். அதற்கான
வழிவகைகள்தான் எனக்குத் தெரியவில்லை. எனது இந்த ஆசை செயல்வடிவம் பெறுவது
சாத்தியமா? இதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என்ற பதில் தெரியாத கேள்வி, சிலசமயம் உங்களுக்குள் தோன்றி மறையலாம்.

இப்படியொரு கேள்வி உங்கள் மனத்தில் எழும்பட்சத்தில் நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! அது வேறொன்றுமில்லை. உங்களைப்
பற்றிய, உங்கள் உடல்நிலையைப் பற்றிய தெளிவான அறிவு உங்களிடம் உள்ளதா என
எண்ணிப் பாருங்கள். அப்படி எண்ணிப் பார்க்கத் துணிந்தால், நீங்கள் நோய் நொடியில்லாமல் என்றும் மார்க்கண்டேயனாக இருப்பதும் சாத்தியம்தான்.

அதாவது, உடல்நிலை சரியில்லை என்று நீங்கள் டாக்டரிடம் செல்கிறீர்கள். உங்களைப் பரிசோதிக்கும் டாக்டர் நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள், பரம்பரை வியாதி எதாவது உங்களுக்கு உண்டா என்று உங்களிடமே விசாரித்தபிறகுதான், அதற்குரிய மருந்து மாத்திரைகளை எழுதித் தருகிறார். இதற்கு வேலையே வைக்காமல், உங்கள் உடம்பு என்ன சொல்கிறது என்பதை மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனிக்கத் தொடங்கினாலே போதும். அது எந்தப் பொருள்களை ஏற்றுக்கொள்கிறது. எந்தப் பொருள்களை ஏற்காமல் தவிர்க்கிறது என்கிற விஷயத்தை
மட்டும் கவனிக்கத் தொடங்கினால் போதும். உடல் நோய்கள் வருவதை பெருமளவில்
குறைக்க முடியும். உங்கள் உடல்மேல் பிரியம் செலுத்துபவர் உங்களைவிட உலகத்தில் வேறுயார் இருக்கப் போகிறார்கள்?

'இந்த அவசர யுகத்தில் இது குறித்தெல்லாம் சிந்திப்பதற்கு எங்கே சார் நேரம் இருக்கிறது? ஏதோ கிடைச்சதைச் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டினோமான்னு பார்ப்பீங்களா? அதை விட்டுட்டு, உங்கள் உடல்நிலையைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்கான்னு சும்மா கேள்வி
கேட்டுக்கிட்டு' என்று அங்கலாய்க்கத் தோன்றுகிறதா?

நீங்கள் நினைப்பதொன்றும் தவறே இல்லை. அதற்குக் காரணம், இப்போது நிலவும்
அவசர யுகம்தான். எங்கும் அவசரம், எதிலும் அவசரம்! நிதானமே, நிதானத்தை
இழந்துவிட்டிருக்கும் யுகம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரையில் எல்லா வேலைகளுமே அவசர கதியில்தான். இந்நிலையில் தன் உடம்பைப் பற்றி எண்ணிப் பார்க்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?

நம் உடலில் நோய்கள் வந்து குடியேற இந்த அவசர கதியிலான மனநிலை முக்கியக்
காரணமெனில், முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. கண்டது கற்கப் பண்டிதனாகலாம். ஆனால், கண்டமேனிக்குப் பு(ரு)சித்தால் வந்திடும் ரோகம். இதில் குறிப்பிட்ட ஒரு வயது வரை வேண்டுமெனில், உடல் கண்டதையும் ருசிப்பதை ஏற்கலாம். ஆனால், வயது ஏற ஏற - குறிப்பாக, நாற்பது வயதை நெருங்குகையில் - உடல் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும்.

எனவேதான், நீங்கள் உங்கள் உடலுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை அறிவது அவசியம். ஏனெனில், வயது ஏற ஏற, உடல் தன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்குகிறது. ஜீரண உறுப்புகளின் சக்தி குறைய ஆரம்பிக்கும். உணவை, நம் உடல் ஏற்கும் ஏற்புத்திறனும் படிப்படியாக சுருங்க ஆரம்பிக்கும்.

எனவே இக்கால கட்டங்களில் மட்டும்தான் என்றில்லாமல், எப்பொழுதுமே நேரத்துக்குச் சாப்பிடுவது என்பதை உங்கள் வழக்கமாகவே ஆக்கிக்கொள்ளுங்கள். ருசிக்குச் சாப்பிடலாம். ஆனால், அதே சமயம் அந்த ருசி நமக்குத் தொந்தரவாக ஆரம்பிக்கிறதென்றால், தயவுசெய்து அதைப் படிப்படியாகக் குறைக்கப் பாருங்கள்.

இக்காலகட்டங்களில், எண்ணெய்ப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதை படிப்படியாகக் குறைக்கப் பாருங்கள். அதேபோன்று கிழங்கு வகைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து வாருங்கள். வாழைக்காய் பஜ்ஜி, உருளைக்கிழங்கு போண்டா, சமோசா - இதெல்லாம் சாப்பிடாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? என்று பிறர் தூண்டலாம் அல்லது உங்கள் மனமே ஆசைப்படலாம். இப்படிப்பட்டவர்கள், ஆவியில் வேகவைத்த உணவுப்பொருள்களை உண்ணலாம். எளிதில் ஜீரணமாவதுடன் உடல்சக்தியையும் விரைவில் பெறலாம். மேலும், கீரை வகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கலில் இருந்தும் விடுதலை கிடைக்கும். கீரை வகைகள் உடலுக்கு
ஒத்துக்கொள்ளாதவர்கள் இரவில் கனிவகைகளை உணவுடன் சேர்த்துக்கொள்வது மலச்சிக்கலைப் பெருமளவு குறைக்க உதவும். எதையும் அளவோடு உண்ணுங்கள்.

சிலருக்குக் காபி குடிக்கவில்லையெனில் வேலையே ஓடாது என்பார்கள். வாஸ்தவம்தான். ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம் என உங்கள் உடம்பே சொல்லிவிடும். அந்த அளவு மட்டுமே அருந்திவந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. அளவைத் தாண்டுகையில், உடலில் நெஞ்செரிச்சல் தோன்றி சமயங்களில் நம்மை எச்சரிக்கும். அதையும் மீறினால், வாந்தி எடுத்துதான் சாந்தி அடையவேண்டியிருக்கும். இருப்பினும் அந்த வாந்தியின் தாக்கமே, மீண்டும் மறுபடி மறுபடி வாந்தியை வரவழைக்கத் தூண்டுமாதலால், காபியையும் அளவோடு குடியுங்கள். காபி அளவுக்கதிகமாகக் குடிப்பது நம் உடலில் பித்தத்தைத்
தூண்டும். இந்த பித்தத்தைப் போக்க சில வீடுகளில் இஞ்சி சுரசம் வைத்தும் குடிப்பார்கள்.

சிலர், சில உணவுவகைகளைச் சாப்பிடுவதையே ஒவ்வாமையாகக் கருதுவார்கள். அவர்கள் அப்பொருள்களைச் சாப்பிடாமல் தவிர்த்தாலே போதும். பிரச்னைகள் வராது தடுக்கலாம். இதற்கு உதாரணமாக, மசாலாப் பொருள் கலந்த உணவு வகைகளைக் குறிப்பிடலாம்.

உடல் பலம்பெற விரும்புபவர்கள், கொண்டைக்கடலையை இரவில் நன்கு ஊறவைத்து,
அதை தினமும் அதிகாலையில் சாப்பிட்டுவிட்டு நடைபயின்று வந்தால் உடல் பலம் பெறும் என்பார்கள். இதை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இதை அவசியம் நீங்கள் கடைப்பிடிக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவில் பாகற்காயைச் சேர்த்துக்கொண்டால், சர்க்கரை வியாதியிலிருந்து விரைவில் விடுதலை பெறலாம் எனக்கூறக் கேட்டிருப்பீர்கள். அதேபோன்று, ஒரு சிட்டிகை அளவு நாகற்பழ பொடியை (நாட்டு
மருந்துக்கடைகளில் கிடைக்கும்) காலையில் வெறும்வயிற்றில் பொடிசெய்து நீருடன் கலந்து சாப்பிட்டால், சர்க்கரை வியாதி மட்டுப்படும் என்று கூறுகிறார்கள். மேலும், இது கிடைக்காத பட்சத்தில், வெந்தயத்தைப் பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த வெந்தயப் பொடியையும் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் கலந்து சாப்பிடலாம். சிலர் கேழ்வரகுக் கஞ்சியோ அல்லது கூழோ குடிப்பார்கள். உங்கள் உடலுக்கு எது ஒத்துக்கொள்கிறதோ அந்த எளிய
வழிமுறையைப் பின்பற்றுங்கள் போதும். காய்கறிகள் உணவில் அதிகமாகட்டும். கிழங்கு வகைகள் குறையட்டும்.

இறுதியாக எது எப்படியாயினும், நீங்கள் நேரத்துக்குச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதைப் பிறர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தாதீர்கள். பிறர் கூறுவதையெல்லாம் பொருட்படுத்த ஆரம்பித்தீர்களானால், பிறகு மாத்திரைகளைச் சாப்பிடவேண்டி வரலாம். அதற்கு, இது எவ்வளவோ தேவையல்லவா! நீங்கள், உங்கள் உடலியல் கடிகாரம் கூறுவதைக் கேட்டு, உங்களுக்காக மட்டுமே வாழுங்கள். அப்படி வாழ்ந்தால்தான் நீங்கள் உங்களையும் காதலிக்க முடியும்; உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் மற்றும் இந்த வாழ்வையும் காதலிக்க முடியும்!

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.