Thursday, May 5, 2011

இந்தியத் திரைப்படத்தின் தந்தை - தாதா சாகிப் பால்கே



தாதா சாகிப் பால்கே

சமீபத்தில் தமிழ்த் திரையுலகப் பிதாமகனான இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது என்ற செய்தியை செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். அவருக்கு இந்த விருது வழங்கியது சரிதானா, சரியில்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அவற்றையெல்லாம் விடுங்கள். இந்த விருதுக்கு மூலகாரணமாக விளங்கும் தாதா சாகிப் பால்கே என்பவர் யார்? ஏன் அவர் பெயரால் இந்த விருதை வழங்குகிறார்கள் என்பதைப் பற்றி சற்றே தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

பம்பாய்க்கு அருகிலுள்ள நாசிக் எனுமிடத்தில் 1870&ல் பிறந்தார் தாதா சாகிப். சித்திரம் தீட்டுதல், நடிப்பு, பாடுதல், மாய வித்தைகள் செய்தல் போன்றவற்றில் சிறுவயது முதலே அளவற்ற ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் இந்த அளவற்ற ஆர்வமே இவரை இந்தியத் திரையுலகின் முன்னோடியாக விளங்க வைத்ததுடன், முதல் இந்தியத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடவைத்து, இந்தியத் திரையுலகின் தந்தை எனப் போற்றிக்கொண்டாடும் அளவுக்கு இவரை உயர்த்தியது எனலாம்.

பம்பாய் சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றார். 1910&ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, இயேசு கிறிஸ்துவின் வாழ்வியலைச் சித்திரிக்கும் திரைப்படமொன்றை வெளியிட்டுக் காட்டினார்கள். அப்படத்துக்கு மக்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பும் வரவேற்பும், ஏன் தாமும் கிருஷ்ண பரமாத்மாவின் கதையைத் திரைப்பட வடிவில் காட்டக் கூடாது என்ற எண்ணத்தை பால்கேவின் மனதுள் விதைத்தது.

இதன்பின்னர் தமது நண்பர்களிடம் பணத்தைக் கடனாகப் பெற்று இங்கிலாந்து சென்று திரைப்படம் தயாரிப்பதற்குத் தேவையான கருவிகளை வாங்கினார். மேலும், அக்கருவிகளைக் கையாளும் முறையையும் கற்றுக்கொண்டு தாயகத்துக்குத் திரும்பினார்.

கிருஷ்ண பரமாத்மாவின் கதையைப் படமாக்க எண்ணிய அவரின் முதல் நோக்கம், பின்னர் அப்படம் தயாரிப்பதற்கு உண்டாகும் நாட்செலவு மற்றும் பொருட்செலவையும் கருத்தில் கொண்டதால், இந்திய மக்களை எளிதில் கவரக்கூடிய அரிச்சந்திர அரசனின் கதையைப் படமாக்குவதென்ற முடிவுக்கு அவரை உந்தித் தள்ளியது. எனவே, அரிச்சந்திர அரசனின் கதையைப் படமாக்க முடிவெடுத்தார்.

பால்கே திரைப்படம் தயாரிக்க விழைந்த அன்றைய இந்தியாவில், பெண்கள் மேடையேறி நடிப்பதென்பது சமூகக் கோட்பாடுகளுக்கு ஒவ்வாத செயலாக இருந்த காலம். அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி பாத்திரத்தில் நற்குலப் பெண்கள்கூட நடிக்க இசைய மாட்டார்கள் என்பதை பால்கே நன்கு உணர்ந்திருந்தார். ஏனெனில், பெண்கள் திரைப்படத்தில் நடித்தால் அவர்கள் மானத்துக்குப் பங்கம் ஏற்படும் என்று கருதிய காலகட்டம் அது. எனவே, அந்தப் பாத்திரத்தில் விலைமாதரையாவது நடிக்க வைக்கலாம் என்று கருதி பால்கே அவர்களை அணுகினார். அவர்களும் மறுக்கவே, முடிவாகத் தமது படத்தில் சலுங்கே எனும் இளைஞனை அந்தப் பெண் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்தார்.

‘ராஜா ஹரிச்சந்திரா’ எனும் இந்த மௌனப்படமே, இந்திய மண்ணில் முதன்முதலில் தோன்றிய படமாகும். இப்படத்தின் நீளம் 3,700 அடி. 1912&ஆம் ஆண்டில், தாதா சாகிப் பால்கே இப்படத்தைத் தயாரித்து முடித்தார். 1913&ஆம் ஆண்டில் பம்பாய் நகரில் இப்படம் திரையிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டாண்டுகளுக்குள் நூற்றுக்கும் அதிகமான படங்களைத் தயாரித்து வெளியிட்ட செயல், பால்கேவின் அயராத உழைப்பினைப் பறைசாற்றும் ஒன்றாகும். இந்திய மக்களின் பெரும் சொத்துக்களாகக் கருதப்படும் ராமாயண, மகாபாரதக் கதைகளைத் தழுவியே அவர் தன் அத்தனைப் படங்களையும் தயாரித்து வெளியிட்டார். தன்னைத் திரையுலகுக்குள் செலுத்த மூலகாரணமாயிருந்த கிருஷ்ண பரமாத்மாவின் கதையையும் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டார் பால்கே.

1917&ல் நண்பர்கள் ஐவருடன் சேர்ந்து, ‘ஹிந்துஸ்தான் திரைப்படக் கம்பனி’யை பால்கே ஆரம்பித்தார். பின் அவர்களிடையே நிலவிய கொள்கை வேறுபாட்டால், ஓராண்டுக்குப் பின் அவர்களைவிட்டுப் பிரிந்தார். 1921&ஆம் ஆண்டில் மீண்டும் அவர்களுடன் ஒன்று சேர்ந்தார். 1927&ஆம் ஆண்டில் பால்கே ஹிந்துஸ்தான் திரைப்படக் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றார். இதன்பின் 1931&ஆம் ஆண்டில் ‘சேத்து பந்தன்‘, ‘கங்காவதாரென்’ என்ற இரு படங்களைத் தயாரித்தார். இந்தக் காலகட்டத்தில் மக்களின் கலாரசனைகளும் விருப்பு வெறுப்புகளும் பெரிதும் மாறுபட்டிருந்ததால், இவ்விரு படங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் பெருத்த ஏமாற்றமடைந்தார் பால்கே.

தம் வாழ்வு முழுவதையுமே திரைப்படத்துறைக்காக அர்ப்பணித்த அந்த மாமேதை, தம் இறுதி நாட்களில் எல்லோராலும் கைவிடப்பட்டவராக, ஏழையாக 1944&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16&ஆம் நாளில் தம் இன்னுயிரை நீத்தார்.

இப்படிப்பட்ட அந்த மாமேதையின் பெயராலேயே ‘தாதா சாகிப் பால்கே’ விருது என்ற இந்த விருது வழங்கப்படுகிறது.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.