Thursday, January 12, 2017

சென்னையில் ஒரு தட்சிணேஸ்வரம்

சென்னையில் ஒரு தட்சிணேஸ்வரம்
- சைதை முரளி
தச மஹா வித்தையில் தலையாய இடத்தை வகிப்பவள் காளி. அந்தக் காளி கோயில் கொண்டுள்ள தலையாய இடமோ கொல்கத்தாவிலுள்ள தட்சிணேஸ்வரம்.
தன்னை வணங்குபவர்களுக்கு அதியற்புத சக்திகளை வழங்கவல்ல காளியே, அச்சக்திகளை ஒருவர் தவறுதலாக அழிவுக்குப் பயன்படுத்தினால் அவர்களை அடக்கவும் வல்லவள்.
“தாயினும் சாலப் பரிந்து பாதுகாப்பவள் என் அன்னை’ என, காளியின் பேரன்பில் திளைத்துக் கூறுகிறார் இராமகிருஷ்ண பரமஹம்ஸர். இவரின் சீடரான விவேகானந்தரோ, “தீமைகளை எதிர்த்துப் போரிடக்கூடிய துணிவைத் தருபவள் காளி’ என்கிறார்.
காளிதாசனுக்குக் கவிதையாற்றலை நல்கிக் கருணை புரிந்தவள்.
நம் மனோபலம் பெருகவும், மனோவியாதி நிவாரணம் அடையவும், ஞாபக சக்தி வளரவும், எதிரிகளை வெல்லவும், அவமானங்களிலிருந்து காப்பாற்றப்படவும், தரித்திரம் நீங்கவும் வேண்டி நாம் காளியை வழிபடலாம்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸரும், விவேகானந்தரும், பரமஹம்ச யோகானந்தரும் வழிபட்ட காளியை நாம் தட்சிணேஸ்வரம் சென்றுதான் வணங்கவேண்டும் என்றில்லாமல், ஸர்வ வியாபியான அவளைச் சென்னையிலேயே கண்டு வழிபடும்படியாக தட்சிணேஸ்வரக் கோயில் அமைப்பிலேயே அமைத்து வழிபடும் படியாகச் செய்திருக்கிறது சென்னை காளி பாரி (Mச்ஞீணூச்ண் ஓச்டூடி ஆச்ணூடி).
இக்காளி கோயிலுக்கான அடிக்கல் சுவாமி தபஸ்யானந்தரால் 1975ஆம் வருடம் ஜூன் மாதம் 21ஆம் தேதி நாட்டப்பட்டு, 17,400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட இக்காளி கோயில் 1981ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி சுவாமி லோகேஸ்வரானந்தாவால் திறக்கப்பட்டது.

தட்சிணேஸ்வர காளியின் நாமமான “பவதாரிணி’ என்ற நாமமே இங்குள்ள காளிக்கும் வழங்கப்படுகிறது. மேற்கு மாம்பலம் உமாபதி தெரு விரிவில் அமைந்துள்ள இக்காளி கோயிலில் காளி சிவனின் மீது ஏறி நின்ற வண்ணமாகக் காட்சியளிக்கிறாள். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் மற்றும் அன்னை சாரதாதேவியின் திருவுருவச் சிலைகள் சன்னிதி முன்பாக குரு தரிசனமாகக் கிடைக்கிறது. அன்னையைச் சுற்றிவரும் பிராகாரத்தில் பின்புறமாக ஈஸ்வரனும் (பவானீஸ்வரர்) கணபதியுமாக (பவானி நந்தன்) அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
காளி என்றால் செயல்பாட்டின் வடிவம். மின்காந்த சக்தியாக வெளி எங்கும் பரவி நிற்பவள் காளி. மின்காந்த சக்தி வெளியுடன்(குணீச்ஞிஞு) கலந்து உறவாடும்பொழுது அது காலத்தை உருவாக்குகிறது.
கலந்து உறவாடல் என்பது அடிப்படை நிகழ்ச்சி. சக்தியானது விரைந்து செயலாற்றக் கூடியது எனில், மூலமாகிய வெளியோ இயக்கமற்ற நிலையில் இருக்கிறது.
இயக்கமற்ற நிலையில் வெளியானது இருப்பினும் அதற்கு சக்தி இல்லையென்று அர்ததம் கொண்டுவிடக் கூடாது. வெளியானது ஓய்வில் இருக்கும் சக்தி. அதாவது, சக்திக்கே சக்தியைத் தரும் ஆதார சக்தி. பாரதியார் இதனையே, “ஆத்மா உணர்வு; சக்தி செய்கை’ என்று குறிப்பிடுகிறார்.
சக்தியானது செயல்வடிவமாக வடிவம் பெறும்வரை உணர்வுமயமான உடையைப் போர்த்திக் கொள்கிறது. செயல்பாட்டில் இறங்கிவிட்டாலோ உணர்வு என்கிற உடை உதறப்படுகிறது. இக்கருத்தின் காரணமாகவே, “காளி’யானவள் சித்திரப் படங்களில் ஆடைகள் அற்ற நிலையில் சித்திரிக்கப்படுகிறாள்.
மேலும் பரவெளியாக எங்கும் உள்ள நிலையான சிவத்தின் மீது, “காலத்தை வெளிக்கொணரும் காளி’ நின்று செயல்படுவதால், கோயிலில் சிவனின்மீது காளி நிற்பது போன்ற கோலம் சித்திரிக்கப்படுகிறது.
மாயை வடிவினள் காளி. மாயையாக இருக்கும் இவள் செயல்படத் தொடங்கினால், காலமும் வெளியும் மாறும் தன்மை உடையதாக மாறிவிடும்.
தசமஹா வித்தையில் காளி இருவிதங்களில் வணங்கப்படுகிறாள். தட்சிணக் காளி - வாழும் இல்வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தருபவள்; சம்ஹாரக் காளியோ இல்வாழ்க்கையிலிருந்து நம்மை மீட்டு வீடுபேற்றை அளிப்பவள்.
“பவதாரிணி’ என்ற நாமத்திற்கே, பிறப்பு இறப்பினின்றும் நம்மைக் காப்பாற்றுபவள் என்று பொருள்.
தட்சிணக் காளியை பக்தர்கள் சரணடையும் பொழுது அகம் மகிழ்ந்து நமக்கு மகிழ்ச்சியை நல்குவதுடன், சம்ஹாரக் காளியாக மாறி நம் மீது கருணை வைத்து மாயையினின்று நம்மை விடுவித்து மஹா சமாதி நிலையைத் தந்து மீண்டும் பிறப்பில்லா நிலையை நல்குகிறாள்.
காளி தன் கையில் ரத்தம் சொட்டும் தலையை ஏந்தியிருப்பதானது, உடல் மற்றும் செய்கையிலிருந்து ஒட்டுதல் இல்லாமல் தூய அறிவை, அதாவது, மரணத்தைப் போன்ற சமாதியை உயிர்களுக்கு அவள் நல்குவதையே அது குறிக்கிறது. காளி ஏந்தியிருக்கும் தலை, உயிருள்ள தலையே! காயியே ஏந்திய பிறகு, எவ்விதம் அது இறக்க முடியும்?
ராமநவமி, கிருஷ்ண ஜயந்தி மற்றும் துர்க்கா பூஜை பண்டிகைக் காலங்களில் காளிக்கு பூஜைகள் பெரிய அளவில் நடத்தப் பெறுகின்றன. இக்காலங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. அமாவாசை தினங்களில் இங்கு காளிக்கு சிறப்புப் பூஜை நடைபெறுவதுடன் அன்றிரவு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும் என்பார்கள்.

“”கடவுளை நேரில் காணமுடியுமா? அவரின் தரிசனம் கிட்டுமா?’’ என நரேன் எனும் விவேகானந்தர் குருதேவரிடம் கேட்க, “”இதோ நீ இப்போது என்னைக் காண்பதுபோல் அன்னை பவதாரிணியைக் காணமுடியும்’’ எனக் கூறுகிறார் குருதேவர்.
“”அன்னையிடம் எது கேட்டாலும் கிடைக்குமா? எனக்கு வாழ்க்கைக்குப் பொருள் வேண்டியிருக்கிறது’’ என குருதேவரிடம் குழந்தையாகக் கேட்கிறான் நரேன்.
“”நிச்சயம் கிடைக்கும்’’ என உறுதி கூறுகிறார் குருதேவர்.
“”எனக்காக நீங்கள் கேட்கக் கூடாதா?’’
“”நீயே உனக்கு வேண்டியதைக் கேள். அன்னை நிச்சயம் அருள்வாள்’’ என்கிறார் குருதேவர்.
“”அப்படியானால் அன்னையை நீங்களே எனக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும்’’ என வேண்டுகோள் வைக்கிறான் நரேன்.
“”நாளை காலையில் குளித்துவிட்டு பக்தி சிரத்தையுடன் வா. அவள் உனக்கு தரிசனம் தருவாள்’’ என்கிறார்.
இரவு முழுவதும் உறங்கவில்லை நரேன். அன்னையின் தரிசனத்தைவிட அன்னையிடம் என்னவெல்லாம் கேட்கலாம் என்ற யோசனையே முன் நிற்கிறது.
பொழுது புலர்ந்ததுதான் தாமதம். குளித்துவிட்டு வேகமாக குருதேவரை நோக்கி ஓடுகிறான் நரேன்.
அன்னைக்கான பூஜைகளை முடித்துவிட்டு இந்தப் பிரிய சீடனின் வரவுக்காகக் காத்திருக்கிறார் குருதேவர்.
“”வா குழந்தாய்! உள்ளே அன்னையிடம் சென்று உனக்குப் பிரியமானதை, தேவையானவற்றை நீயே கேட்டுப் பெறு. அன்னையும் உன் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்’’ என சன்னிதியின் உள்ளே அனுப்பினார்.
அன்னையின் முன்சென்று நிற்கிறான் நரேன். மற்றவர்களுக்குச் சிலா ரூபமாகக் காட்சி தரும் அன்னை குருவருளால் நரேனுக்கு சித் ஸ்வரூபமாகக் காட்சி தருகிறாள். பார்த்துக்கொண்டே நிற்கிறான் நரேன். சிலை உயிர்பெற்று வந்தால், பக்தர்கள் சிலையாகி விடுவர் போலும்! அன்னையின் அழகை அள்ளிப் பருகுகிறான். அன்னை, ““நரேந்திரா! உனக்கு என்ன வேண்டும்?’’ எனக் கேட்கிறாள். அன்னையின் கேள்வி நரேனின் காதில் உட்புகவில்லை. அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறான். காட்சி முடித்து அன்னை சிலா ரூபமாகி விடுகிறாள். வெளியே வருகிறான் நரேன்.
கேட்கிறார் குருதேவர்: “”என்ன நரேன்? அன்னையைக் கண்டாயா? உன் குறைகளைச் சொல்லி தீர்வு கண்டாயா?’’ எனச் சிரித்துக்கொண்டே கேட்கிறார். குருவுக்குத் தெரியாததா?
சுய உணர்வு பெறும் நரேன், “”அன்னையைக் கண்டேன். ஆனால், எதுவும் கேட்கத் தோன்றவில்லை. மெய்மறந்து நின்றுவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் அனுமதித்தால், அன்னையிடம் நிச்சயம் கேட்டுவிடுவேன்’’ என்கிறான்.
“”சரி, நாளை வா’’ என அனுப்பி வைக்கிறார் குருதேவர்.
மறுநாளும் வருகிறான். இதேபோலவே நிகழ்வு நடக்கிறது. எதுவும் கேட்கவில்லை. 
“”இன்னும் ஒரேமுறை. எப்படியிருந்தாலும் இம்முறை கேட்டுவிடுவேன்’’ என்கிறான் பாலகன் நரேன்.
அதற்கடுத்த நாளும் நிகழ்வில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
குருதேவர் நரேனைப் பார்த்து, “”என்ன இம்முறையாவது கேட்டாயா? அன்னை அருளை வாரி வழங்கினாளா?’’ அவர் குழந்தையாகிக் கேட்டார்.
“”இல்லை.. இல்லை.. இல்லை.. அன்னையின் முன்னால் சென்று அவள் திருவுருவைத் தரிசிக்கும்போது எதுவுமே எனக்குக் கேட்கத் தோன்றவில்லை. என் இருப்பே அங்கு இல்லாமல் அவள் திருவருளின் முன்னே கரைந்துவிடுகிறது. பின்னர் எதைக் கேட்கமுடியும்? நினைப்பு என்ற ஒன்றிருந்தால் அல்லவா எதுவும் கேட்க முடியும்? எனக்காக நீங்கள் கேட்கக் கூடாதா?’’ என்று உள்ளம் குழைந்து கேட்கிறான் நரேன்.
“”உனக்கே அப்படியென்றால், சதா சர்வகாலமும் அவளையே தியானம் செய்து தரிசித்துக்கொண்டிருக்கும் எனக்கு எப்படியப்பா கேட்க முடியும்? என்னால் முடியாது என்பதால்தானே உன்னையே அவளிடம் கேட்கச் சொன்னேன். இனி, அவள் உனக்குக் காட்சி தர மாட்டாள். உனக்கு அருளப்பட்ட சந்தர்ப்பம் முடிவுபெற்றது’’ என குருதேவர் கூறிமுடிக்க, நரேன் அவர் காலில் விழுந்து கதறுகிறான்.
“”எனக்கு எதுவும் வேண்டாம் குருதேவா. அன்னையின் காட்சி மட்டும் கிடைத்துக் கொண்டிருந்தால் போதும். அருள்புரியுங்கள்’’ என குருதேவரிடம் மன்றாடுகிறான்.
“”இனி, உனக்கு இறை காட்சி கிட்டாது’’ என ஆணித்தரமாக மறுத்துவிடுகிறார் குருதேவர்.
இதன்பின்னர் மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் இல்லாமல், ஊண் உறக்கமின்றி அழுதவாறே அன்னையின் நினைவாகவே உன்மத்தனாக இருந்தான் நரேன். மூன்றாம் நாள் முடிவில் அன்னை பவதாரிணி அவருக்குக் காட்சி தந்து மறைந்தாள். உடன் குருதேவரை நோக்கி ஓடினான் நரேன்.
“”குருதேவா! அன்னையின் காட்சி இனி எனக்குக் கிடைக்காது என்று ஏன் அப்படிச் சொன்னீர்கள்? அன்னை இன்று எனக்குக் காட்சி தந்தாள்’’ என்று பூவாகி மலர்ந்து சிரித்தான் விவேகானந்தராய்.
“”அன்னையின் தரிசனம் உனக்கு எப்படிக் கிடைத்தது?’’ என அவரும் ஒன்றுமறியாத பாலகராய் கேட்டார்.
நடந்ததைச் சொன்னார் விவேகானந்தர்.
“”இன்று உன்னை ஆதாரமாக வைத்துச் சொல்கிறேன். எவர் ஒருவர் இறை தரிசனத்துக்காக மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி, ஊண் உறக்கமில்லாமல் இறை நினைவாகவே அவரை நினைந்து அழுகிறாரோ அவருக்கும் இறை தரிசனம் நிச்சயம் கிட்டும்’’ என்ற வரத்தை அளித்தார்.

அந்த அன்னையின் பாதார விந்தங்களைப் பணிவோம். சிவத்தின் மீதுதான் அன்னை நிற்கிறாள் என நினைக்காதீர்கள். நம் மனத்திலும் இருத்துங்கள் அவளை. அவளும் எப்போதும் அன்பு செய்யும் வரத்தைத் தப்பாது தந்தருள்வாள் என்பதில் ஐயமே இல்லை.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.