Saturday, January 6, 2007

போகியும் பொங்கலும்...

விழாக்களுக்குப் பேர்போனது தமிழகம். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக என்பது போல வருடம் முழுவதுமே ஏதாவதொரு விழா வந்து சென்றுகொண்டுதான் இருக்கும். இவ்விழாக்களில் வேடிக்கைகள் தென்பட்டாலும் அவற்றின் முக்கிய நோக்கம் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப வீடும் நாடும் பயன்பெறும் விதமாக அமைந்திருக்கும். நம் உள்ளங்களில் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யும் பொங்கலும் இவ்வித விழாக்களில் ஒன்று.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

பொங்கல், உழவர் சிறப்பினை எடுத்துரைக்கும் விழா. 'உழவர் விழா' என்றும் இவ்விழாவினை அழைப்பர். பிறர் வாழ்வில் வளம் பொங்க பாடுபடும் உழவர்கள், மற்றவர்களுக்கும் உதவிகளை வாரி வழங்கும் விழாவே பொங்கல்.

தைத் திங்கள் முதல்நாளில் இவ்விழா கொண்டாடப்பட்டாலும், அடுத்துவரும் இருநாட்களுமே தொடர்ந்து சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்

எனப் பாரதியார் பாடியுள்ளார். தத்தம் வாழ்வின் தேவைகளை மக்கள் தாமே தேடிக்கொள்ள வேண்டும் என்பது நியதி. அதுதான் முறையும்கூட. இதனையே மேற்கூறிய பாரதியாரின் பாடல் வரிகளும் உறுதி செய்கின்றன.

உழவுக்கு வந்தனையாக இருப்பவை எவை?

'நீரின்றி அமையாது உலகு' என்கிறது திருக்குறள். நீருக்கு மூலம் மேகம். அந்த மேகங்களுக்குத் தலைவன் இந்திரன். அந்த இந்திரனின் இன்னொரு பெயர் 'போகி'.

தமிழர்கள் செய்நன்றி மறவாதவர்கள். உழவு சிறக்க உறுதுணையாக விளங்கும் இந்திரனுக்கும், மறைமுகமாக 'போகி' என்ற பெயரிலே தைத் திங்களுக்கு முதல் நாளன்று கொண்டாடுகிறார்கள். வடநாட்டினர் இப்போகித் திருநாளன்று இந்திரனை நினைந்து வழிபடுபவர். எனவே, உழவர்தம் வந்தனைக்கு இந்திர வணக்கம் உரியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

என்கிறது உலகப் பொதுமறை. புறத் தூய்மைக்கு ஆதாரமாக விளங்கும் நீரேஅகத் தூய்மைக்கும் வழி வகுக்கிறது எனலாம். ஏனெனில், உள்ளமும் இதில் குளிர்கிறது அல்லவா! மழை இல்லையென்று மதி கலங்கி நிற்கும் மாந்தர்கள்தாம் எத்தனை பேர்? நீர் நம் புற அழுக்கைப் போக்குவது போல், மழை மனவேதனையைப் போக்குகிறது. நம் உள்ளத்திலுள்ள, வீட்டிலுள்ள, நாட்டிலுள்ள அக அழுக்குகளைக் களைவதே போகியாகக்கொண்டாடப்படுகிறது.

உழவுக்கு உற்ற தோழனாய் விளங்குபவன் கதிரவன். அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடும் விழாவே பொங்கல். ஆடியில் விதைவிதைத்து, கார்த்திகையில் 'கார்' நெல்லுக்குப் பிறகு பெறும் பயன் மார்கழியில் மகிழ்வூட்ட வரும். அவ்வாறு முதன்முதலாக வரும் அரிசியைக் கொண்டு, பொங்கலன்று கதிரவனுக்குப் பொங்கலிட்டு மகிழ்வர். அன்று விடியலில் எழுந்து குளித்து, வீட்டினைத் தூய்மை செய்து
மணலாலும், செங்கற் பொடியாலும் புதுமுறைக் கோலங்கள் அமைத்து, புத்தாடைகள் உடுத்தி, புத்தடுப்பு மூட்டி, புதுப்பானையில் பாலும் அரிசியும் இட்டுப் பொங்கலிடுவதுடன், உடன் பயிரிட்ட காய்கறிகளையும் உணவாக்கி அனைத்துக்கும் மூலகாரணனான பாஸ்கரனுக்கு முன் படைத்து பின் தாமும் உண்பர்.

உழவுக்கு வந்தனையாக விளங்குவதில் இந்திரனும் சூரியனும் மட்டுமா விளங்குகின்றனர்? செல்வம் என்ற பொருளுக்கு சிறப்பு சேர்க்கும் மாடும், அந்தச் செல்வத்தை உருவாக்கிய சக மனிதர்களும் அல்லவா இதில் பங்கு வகிக்கின்றனர்.

'மாடு' என்ற சொல்லுக்கே 'செல்வம்' என்ற பொருளுண்டு. உழவின் ஓர் அங்கமாக விளங்கும் மாடு, உழைப்புக்கும் பெயர் போனது. ஒருவரது கடின உழைப்பைக் குறிப்பிடும் போது, 'மாடு போல' உழைக்கிறான் எனக் குறிப்பிடுவார்கள். கடின உழைப்புக்கு அஞ்சாதவனை, செல்வத் திருமகள் தேடி வருவாள். இதனைத் திருக்குறள்,

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

எனக் குறிப்பிடுகிறது. உழைப்புக்கு அஞ்சாது உடன் உழைத்த அந்த மாட்டுக்கு மரியாதை செலுத்துமுகமாக, அவற்றை நன்கு குளிப்பாட்டி மாலையிட்டு, மணி கட்டி பொட்டிட்டு, பூ அலங்காரம் செய்வித்துப் பொங்கலும் படைத்துப் போற்றி, வீதியுலா வரும் காட்சியே 'மாட்டுப் பொங்கல்'.

மேலும், கிராமங்களில் 'ஏறு தழுவுதல்' எனப்படும் 'மஞ்சுவிரட்டு' விழாவும் இந்த மாட்டுப் பொங்கல் அன்றுதான் நடைபெறுகிறது. ஏறு தழுவும் காட்சி, பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், இதன்மூலம் அவனைக் கணவனாக அடைய இருப்பவளுக்கோ உளவியல் ரீதியிலான போராட்டத்தை ஏற்படுத்திவிடுகிறது. இவ்விழாவில் காளையை அடக்கி வெற்றி மாலை சூடி, களம் கண்ட காளையாக அவன் வெற்றிவாகை சூடி வெளியே வரும்வரை, தலைவியின் தத்தளிப்பு ததியுறு மத்தில் சுழலும் ஆவியின் நிலையைப் போன்றது. இதில் இன்னொரு உட்பொருளும் ஆழ்ந்து நோக்கினால் புரிபடும். கடின உழைப்பில் பெறும் செல்வத்தைக் கட்டிக்காக்க வழி தெரியாமல் கண்டபடி செலவிட்டால் எவ்விதம் முன்னேறுவது?

'ஏறு தழுவுதல்' நமக்கு மறைமுகமாக ஒரு செய்தியைத் தெரிவிக்கிறது. 'மாடு' என்றால் செல்வம் எனக் கண்டோம். செல்வத்தைப் போற்றி, அதனைக் கட்டி அடக்கியாளத் தெரியாதவனை, 'செல்வத் திருமகளும்' கைவிட்டுச் சென்றுவிடுவாள் என்பதையே 'மஞ்சுவிரட்டு' மறைமுகமாக வழிமொழிகிறது.

செல்வம் வேண்டுமென்பதற்காக ஓடியாடி உழைத்துவிட்டு, அதனைக் காக்கும் வகை தெரியாதவர்களை என்னவென்று சொல்லுவது? இதனையே வள்ளுவப் பெருந்தகையும்,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்ற உலகப் பொதுமறை மூலம் நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல் குறிப்பிடுகிறார்.

கடைசியாக, 'காணும் பொங்கல்'. காணும் பொங்கல் என்றால் பல்வேறு இடங்களுக்குச் சென்று கண்டுவருதல் என்பது இப்போதைய வழக்காக உள்ளது. தான் பெற்ற சந்தோஷத்தை மற்றவர்களும் பெற்றுள்ளனரா என அறியும்வகையாக வீட்டைவிட்டு வெளிவந்து வெளி உலகத்தாரிடம் 'உங்கள் வீட்டில் பால் பொங்கிற்றா?' எனக் கேட்பதுடன், உற்றார் உறவினர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உதவி செய்யும் முகமாகக் கொண்டாடும்
விழாவே 'காணும் பொங்கல்'. இந்நாளில், தம்முடன் ஒத்துழைத்த பணியாளர்களுக்குப் புத்தாடைகளும் அணிகலன்களும் கொடுத்து மகிழ்வதுடன், சாதி சமய வேறுபாடின்றி வறியவர்களுக்கும் உதவி மகிழ்வர். மேலும், உற்றார் உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து, உணவளித்து சிறப்பும் செய்து வழியனுப்புவதுடன், மணமான புது மணமக்களுக்கு நல்லதொரு விருந்தும் தந்து ஆடை அணிகலன்களையும் நல்குவர்.

பொங்கல் விழாவினை ஆதித்தனோடு பிணைப்பதற்கு பிறிதொரு காரணமும் உள்ளது. தென்திசை பயணம் மேற்கொள்ளும் ஆதவன் தனது பயணத்தை வடதிசை நோக்கி மாற்றிக்கொள்ளும் திருநாளையே பொங்கல் விழாவாகக் கொண்டாடுகின்றனர். ஆம். சூரியன் தென்திசையில் பயணம் மேற்கொண்டபோது இதுவரை தோற்றுவித்த வாடையை, வட திசையில் பயணம் மேற்கொள்ளும்போது மாற்றி, நம் வாழ்வில் இளந்தென்றலை வீசச்
செய்கிறான்.

தொடர்ந்து மழை என்றாலோ மனம் கலங்கும். தொடர்ந்து வெயில் என்றாலோ மனம் வாடும். பொதுவில், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும். இன்பமும் வாழ்வின் இயல்புதான். துன்பமும் வாழ்வின் இயல்புதான். ஒன்றில்லையேல் மற்றொன்று இல்லை. இவையிரண்டும் இல்லையேல் வாழ்வே இல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும், மனமிருந்தால் வாழ்க்கை சிறக்கும்.

No comments:

About Me

My photo
பெரிய கடவுள் அரிய தகவல்கள் (பிள்ளையார்), சுடர்விடும் சூப்பர்ஸ்டார் (திருமலை திருப்பதி), கிரிவலம் (திருவண்ணாமலை மகிமை), செல்வத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி குபேர பூஜை என்ற நான்கு புத்தகங்களை சந்திரசேகர சர்மா என்ற பெயரில் எழுதியுள்ளேன். இவை New Horizon Media Pvt Ltd. மூலம் வரம் வெளியீடாக வந்துள்ளது. தவம் வெளியீடாக ஸ்ரீராம நவமி மற்றும் திருப்பதி என இரண்டு புத்தகங்கள் சைதை முரளி என்ற பெயரில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திரிசக்தி பதிப்பகத்தில் இருந்து ‘நூறு வயது வாழ வேண்டுமா?’ - சித்தர்கள் சொல்லும் வாழ்வியல் ரகசியங்கள் என்ற நூலும் ‘சைதை முரளி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.